2008-09-27

About Me

குடும்பம் வாழ்க்கை வரலாறு

நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில் உள்ள சுன்னாகம் என்ற ஒரு செழிப்பான நகரத்தில் இருந்தாலும், எனது தாயார் தொழில் நிமிர்த்தம் அடிக்கடி எங்களது ஊர்களை மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று. ஆரம்பத்தில் வவுனியா(1982-1989) பின்னர் யாழ்ப்பாணத்திலும் (1989-1997) இறுதியாக கொழும்பிலும்( 1997-இன்று வரை) ஆக வாழ்ந்து வருகிறோம். எனது தாயார் பெயர் திருமதி சண்முகநாதன், யாரும் இலகுவில் அடையாளம் கண்டு கொள்வார்கள். தற்போது கொழும்பு இந்துக்கல்லூரியில் ஆசிரியராக இருந்து வருகிறார். இதற்கு முன்னர் கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை, வவுனியா மகாவித்தியாலயம், யாழ் இந்து மகளீர் கல்லூரி என்று தனது சேவைகளை செய்தவர். ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கியம் போன்ற துறைகளில் பணி புரிந்து கொண்டு இருக்கிறார். பிரபலம் ஆனவர் என்று நண்பர்கள் கூறுவார்கள், இது மட்டுமல்லாது மிகவும் கண்டிப்பானவர் என்றும் சொல்வதுண்டு, உண்மையும் தான், நாங்க படுற கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும், இதற்கு பிறகு வருவம்.

அப்பா மின்சார நிலைய அதிகாரி, ஆனால் அவரை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் இழந்துவிட்டோம். தந்தையாரை சிறு வயதிலேயே இழந்து விட்டதால் அம்மாவின் விஷேட கவனிப்பிலேயே வளர்ந்து வந்தோம். தங்கையை பொறுத்தமட்டில் மிகவும் நல்ல பண்பும், அம்மாவை போல Style ஆன போக்கை கொண்டவள். தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகள்( அவினாஷினி 4 years, கிஷோன் - 5 months) , மலேசியாவில் வசித்து வருகிறாள்.மச்சான் ஒரு மென்பொருள் நிலையத்தில் பணி புரிகின்றான்.

எனக்கு உந்த அழகு படுத்தல் எப்பவுமே சரி வராத ஒன்று. எங்களை பொறுத்தமட்டில் அம்மா தான், அவவுக்கும் நாங்கள்தான். எங்களுக்கு எல்லாம் நீண்ட பெயர்கள், அதனால் என்னவோ தெரியல வீட்டில இன்னொரு பெயர் வைத்து விட்டா. என்னை பிரியா boy என்றும் தங்கையை Shanny girl எண்டும் தான் கூப்பிடுறது. இது என்னுடன் பழகிய நண்பர்களுக்கு நல்லா தெரிந்த விடயம். நான் அடக்கம் , ஒழுக்கம், அன்பு பண்பான குணங்களை கொண்டிருப்பதால் ( பொய் சொல்றனோ) சில வேளைகளில் என்னை பிரியா என்று பெண்கள் பெயர் வைத்ததுக்கு இதுவும் ஒரு காரணம் ஆக இருக்கலாம். ஆனால் அதுவும் உண்மை.

படிப்பு

முன்னர் சொன்னது போல நாங்கள் பல இடங்களில் இருந்த படியால், எனது படிப்பிலும் அடிக்கடி மாற்றங்கள். எனது சிறு வயதில் உடுவில் Mans School இல் படித்து விட்டு, பிறகு வவுனியா ரம்பைக்குளத்தில் உள்ள மகளீர் மகாவித்தியாலயத்தில் ஆண்டு 5 வரை படித்து , புலமைப்பரீட்சையிலும் சித்தியும் அடைந்தேன், பிறகு சிறிது காலம் வவுனியா மகா வித்தியாலயம் (இப்பொது மத்திய கல்லூரி) இலும் படித்துதான் யாழ் இந்துவில் ஆண்டு 6 இன் இறுதிப்பகுதியில் சேர்ந்தேன். அங்கு ‘F’ வகுப்பில் படித்தேன்.

இந்துவில் படித்த காலத்தில் ஆங்கில மன்றம், மற்றும் இந்து மன்றம் ( திரு புண்ணியலிங்கம் ஆசானின் அருந்தொல்லையால்)(Thani Somas wrote at 4:06pm, Apr 14, 2008, No wonder you follow that in the university as well. You made Mr. Punniyalingam proud. We will let him know about you, in case if we run into him here.
Wall-to-Wall - Write on Thani's Wall) ஆகியவற்றில் என்னையும் ஈடு படுத்திக்கொண்டனான். அவரின் அந்த அடித்தளம்தான் என்னை இன்றும் தினமும் வீபுதி பூசி , பொட்டு வைத்துக்கொண்டு செல்ல செய்தது. எனது சமய பணிகளை தொடர்ந்து செய்ய தூண்டியது என்பதை நண்பர்கள் சொன்னதை பார்த்தீர்கள்.


எனக்கு மறக்க முடியாத சம்பவங்கள் பல இருந்தாலும் ஒன்று இரண்டை கூறுகிறேன். ஆங்கில மன்றம் சார்பாக 3 தடவைகள் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி சென்று , அதில் 2 தடவைகள் எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்து கொடுத்தது. முக்கியமான ஒன்று தான் உயர்தரம் படிக்கும் போது , A/L 97 ஒன்று கூடலுக்கு வேம்படி சென்று நல்ல பரஸ்பர வேட்டையில் ஈடு பட்டது.

உயர் தரத்தில் எனது குருநாதர் Luxman Sir( வகுப்பாசிரியர், Personal Class Teacher). சோதி லிங்கம் Sir(Physics), ஞானம் Sir( Applied Maths), சிவயோகலிங்கம் Sir( Chemistry). ஆகியோரும் எனது குருமார் தான்.

இன்னுமொரு கதைதான் சொல்லுவது சரி இல்லை என்றாலும், சொல்லுகிறேன். நானும் ஒரு சில தடவைகள் மதில் ஏறி பாயிந்தனான். சந்திரன் சினிமா என்னும் குறும் சினிமா திரையரங்கில் எனது தலையின் ' நினைத்தாலே இனிக்கும்' படம் பார்க்கத்தான் முதல் தடவை. வேற ஒன்றும் இல்ல. படம் பார்த்து விட்டு சிலர் வீடு போவர்கள், நானோ படம் பார்த்து விட்டு மீண்டும் மாலை வகுப்புகளுக்கு கல்லூரி செல்வேன். இது எனது வழமையான ஒரு நடவடிக்கை. கிழமைக்கு ஒரு படம். நானும் அடிமையாகிவிடேன் இந்த மதில் பாயும் தொழிலில்.. , நாங்கள் செய்த மிகப்பெரிய குறும்பு இதுதான்.


உயர்தரம் வரை படித்து ஒரு மாதிரி பல்கலை சென்று அடைந்தேன்.வாழ்க கல்லூரி, வாழ்க என்னை படிப்பித்தவர்கள்.

பேராதனையில் விஞ்ஞான பீடத்தில் கணணி விஷேட பிரிவில் கல்வி பயின்று சிறப்பு சித்தியும், சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றது நான் செய்த சாதனைகளில் ஒரு சில.

சமய ஈடுபாடு

எனக்கு சிறு வயதில் இருந்தே எனது சமயத்தில் நல்ல ஈடுபாடு உண்டு. இதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று எங்கள் வீட்டில் (தாத்தா) இருகின்ற வயிரவர். இவர்தான் எங்களுக்கு body guard போல. இரண்டாவது சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவபெருமான். எங்களுக்கெல்லாம் வழிகாட்டி. இந்த சிவன் கோவிலில் நாங்களும் ஒரு உரித்தானவர்கள். எங்கள் பரம்பரை கோவில் என்றே சொல்லலாம். நாங்கள் வெளி இடங்களில் இருந்த படியால் நேரடியாக எனது பங்களிப்பை செய்ய முடியவில்லை. ஆனாலும் 1998 இலும் , 2005 April இலும் நடை பெற்ற மகா கும்பாபிஷேகத்தை முன் நின்று நடத்தி வைத்த பெருமையும் எனக்கு உண்டு. அது எனக்கு கிடைத்த கடவுள் சித்தம் தான். இது மட்டுமல்ல எங்கள் குடும்ப உபயமான ஸ்ரீ சுவர்ணாம்பிகாதேவியின் ஆடிப்பூர இரதோற்சவம், என்றுமே மறக்க முடியாத ஒரு திருவிழா. வருடம் தோறும் என்னென்ன தடைகள் உண்டோ எல்லாவற்றையும் தாண்டி நாங்கள் பிரசன்னம் ஆவது வழமை. இதில் எனக்கு மிகவும் கவலை என்னவென்றால் நான் 2006, 2007, 2008 மூன்று வருடங்கள் சமூகம் அளிக்கவில்லை. 2006 இல் தொழில் நிமித்தம், 2007 இல் அன்றுதான் நான் எனது உயர்கல்வி படிப்பிக்காக வெளிநாடு புறப்பட்ட நாள். அம்மாவும் செல்லவில்லை, அம்மா அங்க போகத்தான் நின்றவ, நானும் முதலில ஓம் சொன்னான், பிறகு நான் இல்லை என்று சொல்லிப்போட்டன். இம்முறை குறை எல்லாம் நீக்க அம்மா பாத்து நாளும் ஊரிலேயே நின்று சிறப்பாக நடத்தி முடிச்சா. இதால் எனக்கும் ஒரே சந்தோசம்.
இது ஊரில , மறு பக்கம் எனது பல்கலையில் ( பேராதனை) உள்ள குறிஞ்சிக்குமரன், எனக்கு பிடித்தமானவரும் தான். இவரைப்பற்றி இன்னொரு பகுதியில் எழுதுறன். இங்க எழுதினால் அலம்புறான் என்று வாசிக்காமல் விட்டாலும் விட்டு போடுவியல்.

நாங்கள் எங்கள் சுவாமியறையில் என்றுமே இவர்களது படம்களைத்தான் வைத்து இருக்கிறோம். ஏன் இப்ப கூட நெதர்லாந்திலும் அவர்கள் தான். எங்கள் அம்மம்மா, அம்மப்பா பரம்பரை சைவமாக இருந்தாலும், எங்கள் அம்மப்பா இடையில் சற்று தடு மாறிப்போட்டார்போலும். ஆனால் நானோ இல்லை சைவமாக இருக்கவேணும் என்று முயற்சி செய்வதில் கை விடுவதில்லை.

எங்கள் நாய் குட்டியும் ஆடும்

இதுக்கென்று ஒரு பகுதி இருக்கு, ஆனால் இப்போதைக்கு ஆரம்பம் மட்டும்தான். எங்கள் Doggy Minone ( A famous singer’s name)1992 இல் எங்களுடன் வந்து சேர்ந்தவ. எங்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் போல. அவ உண்மையில குடுத்து வச்சவ ஏனெனில் யாழ்ப்பாணத்தில செல்லாத ஊர் இல்லை , கடல்கரை இல்லை. யுத்த காலங்களில் பதுங்கு குழிக்குள் பதுங்கி கொள்வதில் உள்ள ஆர்வம் எங்களிலும் பார்க்க எங்கள் நாயிக்கும் ஆட்டுக்கும் தான் அதிகம். நாங்கள் கூப்பிட்டால் கானும் அவைதான் முதலில உள்ளுக்கு பதுங்குவார்கள். பிறகுதான் நாங்கள். எங்கள் Doggy Minone இக்கு ஒருநாளும் கழுத்தில் பட்டி கட்டியது கிடையாது. எங்களுக்கும் இவர்கள்தான் பொழுதுபோக்கு. அதிலேயும் எங்கள் Minone கொழும்புக்கு lion air இல வந்தவ என்பது எங்கள் யாராலும் மறக்க முடியாத ஒன்று. சனி , ஞாயிறு என்றால் நாங்கள் வெள்ளவத்தை கடல்கரைதான், நல்லா பொழுது போகும் இவ கூட விளையாடிக்கொள்ளுவோம்.
2001 இல் திடீர் சுகவீன முற்று எங்கள் வீட்டில் எனது தங்கையின் கையிலேயே தனது வாழ்வை துறந்து கொண்டவ. நாங்கள் பட்ட துயரம் எங்களுக்குத்தான் தெரியும். அவவை அடக்கம் செய்த இடம் பற்றி சொல்ல முடியாது போனாலும் அவ இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கா.

தொழில்

நான் சிறு வயதில் இருந்தே ஒரு ஆசிரியர் தொழில் (அம்மாவைப்போலவே) செய்தால் நல்லா இருக்கும் என்று ஆசை. ஆனால் அம்மா சொல்லுவா நீ மேல படிச்சு நல்ல தொழில் செய் என்று. ஏதோ தெரியல நான் யாழ்ப்பாணத்தில் யாழ் பல்கலைக்கு கிட்ட குடி இருந்ததால் ( Cumarasamy Road) உந்த Campus Sentiment கொஞ்சம் கூட வந்துட்டுது. ஊழல் நிறைந்த இடம் என்பதில் குறை சொல்வதில் குறையும் இல்லை. உண்மையும் தான். அம்மாவின் ஆசைப்படி ஒருமாதிரி எனது திசையை மாற்றினேன். சரி Campus இல விரிவுரையாலராவோம் எண்டு தான். ஆனால் அதுக்கு எந்த Campus இல வாறது என்று பிரச்சனை. இந்த நேரத்தில தான் எனது பல்கலை பிரவேசம். ஒரு மாதிரி படித்து முடிச்ச பிறகு வேலை தேடும் படலம், ஒரு விரிவுரையாளர் ஆகிறது எண்டால் கொஞ்சம் கஷ்டம் தான், ஏனென்றால் வெற்றிடம் இருக்க வேனும், அது மட்டுமா அரசியல் எழுந்து நின்று ஆடும்., எனக்கும் ஆடினதுதான், 18 மாதங்கள் எனது பிரிவில் உதவி விரிவுரையாளர் என்ற பதவியும், Sub warden for Mars Students Hall பதவியும் வகித்தனான். நான் படிச்ச இடத்தில்தான் உண்மைக்கும் நிரந்தரம் கிடைத்து இருக்க வேனும். காலம் , நாட்டுப்பிரச்சனை , மேலிட உத்தரவு என்று பல காரணம், வேறு இடம் நோக்கிய நகர்வுகளை ஆரம்பிக்க வைத்தது.
உண்மையை சொன்னால் நான் இப்பொழுது வேலை பார்க்கும் பல்கலைகழகம், Sabaragamuwa University of SL பற்றி எதுவுமே தெரியாமல்தான், அந்த விரிவுரையாளர் ஆசையில விண்ணப்பித்தனான்.
ஆனால் உண்மையில் நான் சரியாக குடுத்து வச்சனான், எனது Interview இலேயே என்னை எடுத்து போட்டார்கள். எனக்கு என்ன நடக்குது என்று தெரியாமல் இருந்தது ஒரு கணம். அம்மாவுக்கு உடனே தொலைபேசியில் எனது permanent தொழில் பற்றி சொல்லும் போது அழுதே போட்டன், இந்த தொழில் தான் என்னை இன்று நெதெர்லாந்து இல வச்சு இருக்கு. எல்லாம். கடவுள் சித்தம்.
புது இடம் , புது முகங்கள், சிங்கள மொழியில் நான் நன்றாக பேசுவேன், ஆனால் எழுத வாசிக்க தெரியாது வடிவா . ஏதோ சமாளிச்சு கொள்ளுவன். என்னை பற்றி யாரவது மாணவர்களிடம் கேட்டால் இரண்டு சொல்லுவார்கள், நல்ல Sir , நல்லா உதவி செய்வார். ஒரே Strict in Discipline. நடை, உடை பாவனையில வலு கவனமாக இருப்பவன் நான். யாரும் எனது மாணவ, மாணவிகள் ஒழுங்கா இல்லாட்டி அவை மெல்லமா Course ஐ விடுறது நல்லம் என்று அவர்களின் நண்பர்கள் நண்பிகள் சொல்லவதை கேட்டு இருக்கின்றேன். அவளவு கெடு பிடி உதில. நான் வகுப்பில் சொல்லும் ஒன்று, படிப்பு முக்கியம் இல்ல , நடை , உடை பாவனை, ஒழுக்கம் தான் முக்கியம், இவை இருந்தா படிப்பு தானா வரும். நான் எங்கேயாவது வாறன் என்றால் ஒரு சத்தம் இருக்காது. இதுக்கு இன்னுமொரு காரணம் இருக்கு, நான் உந்த Discipline Committee இல இருக்கின்றன். ஆனாலும் Party, என்றால் என்னுடன் சேர்ந்து கொண்டு தங்கள் அனுபவங்கள், அட்டகாசங்கள் என்று சொல்லி சந்தோஷப்படுவார்கள், Specially Dancing என்றால் ஆஹா ஓஹோ. வாழ்க மாணவ சமுதாயம்.

2008-09-25

Welcome

This is Priyan's Blog- Soon it will be updated..
Related Posts Plugin for WordPress, Blogger...