2010-10-30

நினைவு நாள்-- பதினைந்து ஆண்டுகள் !!!

 இன்று இரவுடன் பதினைந்து ஆண்டுகள் முடிவு. என்னப்பு நினைவு இருக்குதோ..
1995 ப்ளாஷ் பக் ...................டோட்டடைங் ..............

மாலை ஐந்து  மணி இருக்கும், திடீர் என்று மக்கள் மத்தியில் ஏதோ எல்லாரையும்  இடம்பெயரட்டாம் என்று சொல்லிட்டினமாம் என்று சத்தம் போட்டுக்கொண்டு  வீட்டு படலையை திறந்தவாறு வந்தார் எங்கட கல்லூரி கணித ஆசான்.  நான் சாரத்தோட முத்தத்தில் விளக்குமாறும் கையுமாயும் , அம்மா குசினிக்க இரவுச்சாப்பாடு செய்ய ரெடியாகி கொண்டும்,  தங்கை எங்கட செல்ல நாயகுட்டியுடனும் வீட்டு முத்தத்தில் எனக்கு உதவி செய்த படியும்  நின்றாள்.

நான் வெல வெலத்து போய்,  அம்மாவை அழைத்தபடி குசினி நோக்கி ஓடும் போது தொடங்கியது மீண்டும் ஷெல் வீச்சு.. ஓடி வந்து எங்கட பங்கருக்குள் ஒளிந்து கொண்டோம். நாங்கள் மூவரும் , பிறகு நாய்க்குட்டி , பிறகு ஆசான் என்று எல்லாருமே மூச்சை பிடித்து கொண்டு ஏறத்தாழ ஒரு மணித்தியாலயம் இருந்திருப்போம். ஆறு மணி இருள் சூழ்கிறது .. ஒரு இடை வெளி .. சனம் எல்லாமே ரோட்டில .. நாங்கள் ஒழுங்கையுக்க இருந்த படியால், விஷயம் உடன வராது. அம்மா முன் வீட்டில் இருந்த கல்லூரி அதிபரை வடலிக்காலே அழைத்து பேசிக்கொண்டு இருக்கும் போது , எல்லாரும் சொல்லினம், எல்லாரையும் வெளிக்கிடட்டாம் என்று, இனி என்ன வெளிக்கிடுவம் என்று போட்டு வீட்டுக்கு  வந்து விளக்கேற்றி கும்பிட்டு போட்டு, அதற்கிடையில் இந்த ஆரவாரத்தில தோசைக்கல்லும் ரொட்டியும் அடுப்பில ஒரு கருகின வாசம்.  உடனையே ஆசானும் நானும் போய் அபிராமி சாப்பாட்டுக்கடையில்   (பல்கலை முன்னால் ) இரு குடும்பத்துக்கும் இடியப்பம் வாங்கி வர, எங்கட குடும்பமும்   இடம் பெயர ஆயத்தம் ஆகியது  .

ஒரு பிடியாக சாப்பிட்டு போட்டு, எனது சைக்கிள் கரியரில்  இரண்டு பாக், ஒன்றில் உடுப்பு மற்றையதில் தங்கையின் O/L பரீட்சை புத்தகங்கள், கொப்பிகள். handle இல்  இரண்டு bag ஒன்றில் தண்ணி போத்தல், தோச்சு லைட்டு , அரிக்கன் லாம்பு ,  மற்றையதில் மண்ணெண்ணெய், அம்மாவின் கரியரில், இருபது கிலோ அரிசி , மண்ணெண்ணெய் குக்கர்.

இரவு ஏழு மணி, வீட்டை பூட்டிக்கொண்டு படலைக்கு வெளியே வந்தால் , பக்கத்து வீடு , முன் வீடு எல்லாமே ஏற்கனவே பெட்டி படுக்கையோட வெளிக்கிட்டு போட்டுதுகள். நான் தங்கையை முன் சைக்கிள் பாரில் ஏற்றிக்கொண்டு , அவள் தன் கையில் நாய்க்குட்டியையும் பிடித்த வாறு, இடம் பெயர தொடங்கினோம். நல்லூர் போய் வைமன் ரோட்டால மெயின் ஸ்ட்ரீட் போய் போவோம் என்று தான் ப்ளான். அங்க கச்சேரி நல்லூர் வீதிக்கு போனம் பாருங்க.. ஏற்கனவே ஒரு லட்சம் பேர் எங்கள மாதிரி எங்க போறம் என்று தெரியாம நடந்து கொண்டு போகினம்.

நாங்க போகும் இடம் எங்கட சித்தி வீடு. அதால எங்களுக்கு பிரச்சினை இல்லை. இருந்தாலும் போகும் பாதை எல்லாமே சனம் நிரம்பி வழிந்ததால், சைக்கிள் ஓட முடியாத நிலை. மெல்ல மெல்ல உருட்டிக்கொண்டு போனால், சிறிது நேரம் கழித்து, மழை சோவென கொட்ட தொடங்கீற்று. நாங்கள் எல்லாருமே நனைந்து போனது மட்டுமில்லாமல் எங்கட shabby நாய்க்குட்டி கூட நனைந்து போய் எங்கள ஒரு மாதிரி பார்க்குது.  என்ன செய்யுறது நாங்கள், குடையும் கொண்டு தான் வந்தனாங்க,  இருந்தாலும் சனத்துக்க பிடிக்க கஷ்டம், அதால  தங்கச்சி அவள் துப்பட்டாவால் நாய்க்குட்டியை போர்த்த படி நடந்தாள்.

இரவு பன்னிரண்டு மணி யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற தூபிக்கு வந்து சேர்ந்தோம், இதிலிருந்தாவது தெரியனும் எப்புடி நடந்து இருப்பம் என்று. எங்கட சனம் என்ன சனமையா.. ஒரு சிலதுகள் அவங்களை திட்டுதுகள், ஒரு சிலதுகள் தங்கட ஆக்களை தேடுதுகள், ஒரு சிலதுகள் வீட்டில் பழசுகளை எல்லாம் விட்டுட்டு வந்துட்டம் என்று சொல்லி சொல்லி அழுதுகள்(இது முதலையே பிளான் பண்ணி இருக்கனும் இல்லையா..), இன்னும் சிலதுகள் புதினம் புதினமாய் கதைக்குதுகள்.

விடிய ஒரு மணி , அரிக்கன் லாம்பு வெளிச்சம் மட்டும் தான், கைதடி நாவற்குழி பாலம் கிட்ட வந்துட்டுது போல கிடந்திச்சு.. ச்சே ச்சே.. அது இன்னும் போகணுமாம். ஆங்காங்கே ஒன்று அல்லது இரண்டு வாகனங்கள் வெளிச்சம் பாச்சின படி நிக்குது. அது அவங்கட வாகனமாம் என்று ஒரு சிலர் சொன்னதும், சனம் போக வழி இல்லை .. அதுக்க இவங்கள் வேற.. என்று பேசுதுகள்.

 அதிகாலை மூன்று மணிவரையும் அடிக்காத ஷெல், என்னமோ பிளான் பண்ணி அடிக்கிறமாதிரி ,  அடிக்க தொடங்கினாங்கள், யாழ்ப்பாணமே அதிர்ந்ததை நாவல் குழி யில் நிக்கும் போதுதான் வடிவா கேட்க கூடியதாய் இருந்தது. அடிக்கடி பாயும் சேர்ச் லைட்டு,  அந்த நாவல்குளி -கைதடி , கைதடி -கோப்பாய் இரண்டுக்கும் இடைப்பட்ட இடம் கடல் சார்ந்த வெளி என்பதால் நிலா போல் வெளிச்சம்.

 மூன்று மணித்தியாலங்கள் ஒரே இடத்தில் நகரவே முடிய வில்லை, இதெல்லோ ட்ராபிக் பிளாக் என்று சொல்லலாம். அப்படியே காலை ஐந்து மணி இருக்கும், நாவற்குழி பாலத்தை அண்டிய பகுதிகளுக்கு ஆட்டிலறிகள் வருவது போல் உணரச்சிகள்.சத்தம் கிட்ட வர வர.. சனம் சிதறி அடித்துக்கொண்டு தண்ணிக்க இறங்கிட்டுதுகள். நாங்கள் அந்த பாலத்துக்கு  வரும்போது, தண்ணியோ அல்லது டின் பால் கலர்ல சேறோ என்று இருந்திச்சு.

மழை பெய்கிறது , நனைஞ்சு நனைஞ்சு வீதிக்கருகாமையில் உள்ள மர நிழலில் நிக்கும் சனத்தால் தான் உண்மையில் ட்ராபிக் பிளாக். வரும் சனத்தை கட்டு படுத்த , வழிப்படுத்த யாருமே இல்லை . வரும் சனம் எங்க போறது என்று தெரியாமல் நிக்குதுகள், ஒரு சிலதுகள் எல்லாரையுமே கை விட்டுட்டு நிக்குதுகள். இன்னும் சில நெஞ்சு வலி, கை கால் வலி என்று நிக்குதுகள். இன்னும் சிலதுகள் என்ன செய்யுறது .. விதியாச்சே.. என்று போட்டு குழந்தை குட்டிகளோட நிக்குதுகள்..
நாங்கள் ஒரு மாதிரி கைதடியை வந்தடையும் போது காலை ஏழு மணி . கிட்டதட்ட பன்னிரண்டு மணித்தியாலங்கள் பத்து கிலோ மீட்டர்கள் .. என்ன நடையப்பா. இது.. வாழ்க்கையில் இப்படி நடக்க எல்லாருக்கும் குடுத்து வைக்கிறதில்லை ..


நாங்கள் வீடு சென்று , போன களைப்பில் தூங்கி விட்டோம், மாலை எழுந்து கைதடி சந்திக்கு போனால், அங்கு கண்ட காட்சிகள் இன்னும் ஞாபகம் இருக்கு.

மக்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்று. ஒரு நேரம் சாப்பிட சாப்பாடு இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை . நாங்கள் என்ன செய்யுறது.. எனக்கும் ஊர் புதிசு.. இருந்தாலும் அயலவர்களின் உதவியுடன் ப்ளைன் டீ போட்டு கொண்டு போய் குடுப்பம் என்று கடைக்கு போனால் தேயிலை இல்லை. சரி போனால் போகுது ஒரு கிடாரம் நிறைய தண்ணி நிறைத்து போட்டு கொண்டு போய் எங்கட ஒழுங்கை முகப்பில வைச்சு வாற சனத்துக்கு தாகம் தீர்க்கும் பந்தல் போல் சேவை செய்தோம். இரவு பன்னிரண்டு மணி  சனம் வந்து கொண்டே இருக்கு.... அடுத்த நாள் இன்னும் வருது.. என்ன ஐந்து லட்சம் சனமும் வர வேண்டாமா...
மூன்று நாள் கழித்து...

இடம் பெயர்ந்த சனத்திட்ட காசு இல்லை, உடுக்க ஒழுங்கான உடை இல்லை, இருக்க இடம் இல்லை.  இந்த அவலத்துக்கு மத்தியில் ... கள்ளர் கூட்டம் தங்கள் கைவரிசை .. ஒரு கோழி இருபது ருபாய், ஒரு ஆடு இருநூறு ருபாய் , மாடு முன்னூறு ருபாய் என்று அவங்கள் ஊரில நிக்குற ஆடுகள், மாடுகள் , கோழிகள் எல்லாத்தையும் பிடிச்சு கொண்டு வந்து கைதடி சந்தியில் வைச்சு வித்து காசு உழைச்சாங்கள் ...

ஒருவாரம் கழித்து..

இடம் பெயர்ந்த சனத்திட்ட காசு இல்லை, உடுக்க ஒழுங்கான உடை இல்லை, இருக்க இடம் இல்லை.  இந்த அவலத்துக்கு மத்தியில் ... கள்ளர் கூட்டம் தங்கள் கைவரிசை .. ஒரு கோழி இருபது ருபாய், ஒரு ஆடு இருநூறு ருபாய் , மாடு முன்னூறு ருபாய் என்று அவங்கள் ஊரில நிக்குற ஆடுகள், மாடுகள் , கோழிகள் எல்லாத்தையும் பிடிச்சு கொண்டு வந்து கைதடி சந்தியில் வைச்சு வித்து காசு உழைச்சாங்கள் ...

ஒரு மாதம் கழித்து.. 
இடம் பெயர்ந்த சனத்திட்ட காசு இல்லை, உடுக்க ஒழுங்கான உடை இல்லை, இருக்க இடம் இல்லை.  - இவற்றில் ஒரு சிலருக்கு உதவிகள் வந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு தொடர் தவிப்புகள்  தான் .

எல்லாமே தற்காலிக பின்னடைவுகள் தான் என்று சொன்னதாக ஞாபகம்.. அப்படியே இனியும் வைச்சுக்குவோம்..

2010-10-17

"பரீட்சைகள் " சும்மா பெயரைக்கேட்டாலே அதிருதில்ல !!


என்ன அதிருதில்ல என்று ரஜனி வசனம் பேசுறான் என்று யோசிக்காதையுங்க.. :)
கல்விக்குரிய சரஸ்வதி பூஜை நடை பெற்று கொண்டு இருக்கின்றது. கல்வி கற்றாலே பரீட்சை என்ற பதமும் எம்ம்முள்ளே பதிந்து கொள்கின்றது. அதாலே இன்று பரீட்சைகள் பற்றி ஒரு மொக்கை !!!..


 நான் வேலை செய்யும் பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான பீடங்களில் தற்போது  பரீட்சைகள் நடை பெற்று கொண்டு இருகின்றது. நேற்று என்னை ஒரு பரீட்சைக்கு மேற்பார்வையாளராக நியமித்து இருந்தார்கள். கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டிய தொழில். பரீட்சை மண்டபத்தில் பலவிதமான சம்பவங்கள் நடைபெறுவது வழமைதானே.

  • பார்த்து எழுதுதல், 
  • வினாத்தாளை பார்த்தவுடன் மயங்கி விழுதல் (விழுந்தாலும் பரவாய் இல்லை, பிறகு ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி எல்லாம்  இருக்கு.. )
  • மண்டபத்துக்கு பிந்தி  வருதல், கதைத்தல் .. ..
  • மெடிக்கல் குடுத்தோர், வராதோர் விபரம் பற்றி அறிவித்தல் 
இப்படி பல சோழிகள் !!
இதை விட, நேரகாலத்துக்கு எழுதும் விடைத்தாள்களை பகிர்தல், வினாத்தாள்களுக்கு விளக்கம், பரீட்சைகள் முடிய , விடைத்தாள்களை உரிய இடத்துக்கு அவற்றை கொண்டு போய் சேர்த்தல்.


உதவி மேற்பார்வையாளர்களுக்கு தேத்தணி, கோப்பி, வடை , வாழைப்பழம் என்று சொந்த செலவில் வாங்கி கொடுத்தல்..:(
இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்  !!!

நேற்றும் வழமை போல பணிகளை செய்து கொண்டு இருக்கும் போது, பழைய ஞாபகங்கள் ,அதாவது நாங்கள் பரீட்சைகள் எழுதும் அனுபவங்கள் அவ்வப்போது நினைவில்  வந்து வந்து  போனது.

பரீட்சை மண்டபத்தில், பரீட்சை நேரத்தில்,  குற்றம் செய்வோருக்கு 

மேசையில் இருந்த படியே மனசுக்குள் ஒரு கணக்கு போட்டு பார்த்தேன்.நான் இதுவரை ஆகக்குறைந்தது எத்தனை பரீட்சைகள் எழுதி இருப்பேன் என்று. நம்பவே முடியல.. என்ன கொடுமை இது 

ஒரு குத்து மதிப்பு தான் இது :)


Years Terms Subjects Total exams
yr 1- yr 5 5 3 3 45
yr5 2
yr6- yr11 6 3 8 144
O/L 8
yr 12- yr 13 2.5 3 4 30
A/L 4
233
Uni
yr 1 12
yr 2 12
yr3 12
yr 4 12
48
96
329
இதை விட, தனியார் கல்வி நிலையத்தில், நம்மட வேலாயுதம் ஆசிரியரின் மணிக்  கல்வி நிலையத்தில் வாரம் ஒரு முறை கணித பரீட்சை. யப்பா.. நினைக்கவே ஏதோ செய்யுது.

எத்தனை பரீட்சைகள் எழுதுறம் என்பது முக்கியமில்லை, ஒவ்வொரு பரீட்சையையும் எப்புடி சமாளிச்சம் என்பதுதான் முக்கியம்.

இன்னும் science ஹால் இல் படிக்கும் போது இந்த வாத்தியார், அந்த வாத்தியார் என்று ஓடோடிப்படிச்சதால அவையின்ற பரீட்சை, இவையின்ற பரீட்சை  என்று உப்பிடியே ஒரு கணக்கு வழக்கு இல்லாம எழுதி இருக்கிறோம் !!

பரீட்சைகள் என்று வந்து விட்டாலே வீடுகளில் பிள்ளைகளும், பெற்றோரும் படும் பாடுதான் என்ன. கொஞ்சம் சுவையாக.......


  • சில வீடுகளில் பிள்ளைகள்   படிக்கவில்லை என்று அடி போட்டு படிக்க பண்ணுங்கள் !! இது நல்ல அப்பா அம்மா மார் உள்ள குடும்பம்.
  • இன்னும் சில வீடுகளில், பெற்றோர் தங்கள் பாடு, பொடி பொட்டை தங்க பாடு !!! என்னத்தை சொல்ல..
  • இன்னும் சில வீடுகளில் (குறிப்பாக தங்கள் பிள்ளைகளை பற்றி அடுத்தவர்களுக்கு புளுகி வைப்போர் )," டேய் தம்பி நான் உனக்கு  டாக்டர் இற்கு படிக்க  கிடைக்கும் என்று எல்லாருக்கும் சொல்லிபோட்டன் , எழும்பி படியன!!,  ..முடியல..
  • இன்னும் சில வீடுகளில் பெற்றோரும், பிள்ளைகளும் படிப்பார்கள். இது பல வீடுகளில் நடப்பது..
  • இதிலும் சிலர் விழுந்தாலும் மீசையில மண் புரளாத மாதிரி, அது தம்பி செய்தவன் பேப்பர் கஷ்டமாம். அவனுக்கு அடுத்த முறை இன்ஜினியரிங் கிடைக்குமாம். பிறகு கொஞ்ச நாள் போக, தம்பி இங்க இன்ஜினியரிங் செய்ய விருப்பமில்லை என்குறார் அதால அவர் லண்டன் போய் படிக்க போறாராம். நாங்களும் ஒரு ஏழு பரப்பு காணியை விக்க போறம். ( இதுக்கு ஊர் சனம் கதைக்கும்: இவரு இங்க அம்மா அப்பா  தண்ட சோத்தில படிக்க ஏலாதவர் லண்டன் போய்.. படிக்க போறாராம்.. இமம் )- இது தான் இப்போ நடக்குது.... பல இடங்களில் ... 
இப்படி எல்லாம் பல பம்பல்களை காணலாம்.
நான் உயர்தரம், படிக்கும் போதும் சரி, சாதாரண தரம் படிக்கும் போதும் சரி இரவு ஒன்பது மணிக்கு போத்து கட்டிக்கொண்டு படுத்திடுவன். பிறகு அதிகாலை இரண்டு மணி இக்கு ஒருக்கா எழும்பி பார்க்கிறது கள நிலவரம் எப்படி என்று. Alarm ஐ மீண்டும் அதி காலை மூன்று மணிக்கு சரி செய்து போட்டு படுப்பேன், கடைசியாக நான்கு மணிக்கு எழும்பி படிக்க ஆரம்பிப்பேன். ஏதோ வில்லங்கத்துக்கு படிக்கிற மாதிரி இருக்கும், ஏழு மணி மட்டும் படித்து போட்டு திரும்ப நித்திரை.  இப்படியே ஒரு மாதிரி படிச்சு உயர்தரமும் பாஸ் பண்ணி பல்கலைக்கழகம் சென்றடைந்தேன்.
பல்கலையில், புது முகங்கள், புது இடம். இருந்தாலும், எனது நண்பர்கள், அறை நண்பர்களைக்கேட்டால் தெரியும், அதிகாலை இரண்டு மணி ஒரு  alarm அடிக்கவே எழும்பி படிக்க தொடங்கிடுவேன். காலை ஏழுமணி வரை , அறை நண்பர்கள் எழும்பும் வரை படித்து போட்டு படுப்பேன். இப்படித்தான் படித்து பட்டமும் பெற்றேன்.

உயர்கல்வி நிமித்தம் வெளி நாட்டில் இருந்த சமயம், தினமும் நித்திரை, ஓய்வு   இவையாவும்  மூன்று தொடக்கம் நாக்கு மணித்தியாலயங்களே.  முகவலைக்கு அடிமை, farm ville  விளையாடுதல்  போன்றன மனதில் இருந்த அழுத்தங்களை குறைக்க உதவின. அதிலும் விசேடமாக வலைப்பதிவில்  மொக்கை எழுதுதலும் ஒரு வகை அழுத்தத்தை குறைத்து வைக்க உதவியது.

 எப்புடி எல்லாம் விளம்பரம் போடுறாங்கள். (பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு போகும் படிக்கட்டில் கண்டது... அதாலே சுட்டது..

பரீட்சைக்கு படிக்கும் போது , பல விதமான அழுத்தங்களுக்கு இப்போதைய மாணவ சமுதாயம் உள்ளாகின்றது. இதற்கு ஒரு சில காரணங்களை உதாரணமாய் கூறலாம்.

  1. சக நண்பர்களுக்கிடையே நடக்கும் போட்டி , குறிப்பாக பல்கலை பிரவேசம். அண்மையில் நான், எனது நண்பரின் வீட்டுக்கு சென்ற போது, பிள்ளை medicine கிடைக்கும் என்று படித்து , கிடைக்காததால் மன அழுத்தமடைந்து இருப்பதாக  கூறினார். ஒன்று இல்லாட்டி மற்றொன்று என்ற மனப்பான்மையை வளர்த்து கொள்ளல் வேண்டும். எல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை . இல்லையா.. நண்பர்களே..
  2. அண்மையில் ஒரு பிரபல்ய வைத்தியரின் மகள் தற்கொலைக்கு முயற்சித்தமை. மகளுக்கு என்ன வயது தெரியுமா. ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் எழுதும் வயதுதான். இங்கவும் போட்டி தான் காரணம். இன்னொரு இடத்தில் இதே போன்ற சம்பவத்தில் அந்த சிறுமி, அழுத்தத்தில் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவமும் இடம் பெற்றுள்ளது. இதுக்கெல்லாம் பெற்றோரும் காரணம் தான். பக்கத்து வீட்டு  பெற்றோரின் மகள் ஐந்து இடத்துக்கு படிக்க போறதாலே, தங்கள் பிள்ளையை  ஆறு இடத்துக்கு அனுப்பி படிப்பித்தல் போன்ற துன்ப சம்பவங்களும் இடம்பெற்று கொண்டுதான் உள்ளது.  பிள்ளைக்கு படிச்சதை  திருப்பி படிக்க நேரமில்லை தானே. 
  3. போலி விளம்பரங்கள் மூலம் மாணவர்களை கவரும் நிறுவனங்களும் உள்ளன. மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டு தான் உள்ளனர். உதாரணமாக அண்மையில்  உயர்தர  IT  பரீட்சையில் பலர் fail  இற்கு  காரணம் ஒரு வித போலி விளம்பரங்களே. ஒரு பிரபல்ய கணணி நிறுவனம் விளம்பரத்தில் , தங்களிடம் படித்த இருபது பெயரின் புகைப்படங்களை போட்டு , அம்மாணவர்கள், அந்த கணணி நிறுவனத்தை புகழ்ந்து பாடி இருந்தனர் . அடுத்த நாள் பலர் அங்கே தங்கள் பணத்தை கொண்டே போட்டு இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 
  4. இவ்வவளவு  ஏன், மாணவர்கள் தாங்களே மூன்று இடத்துக்கு ஒரே பாடத்துக்கு போகுதல். எனக்கு தெரிந்த பலர் இதைதான் உயர்தரத்தில் செய்தார்கள். இன்னும் பலர் இப்பவும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  ஒரு இடத்தில் திருப்தியுடன் படித்தால் இலகுவில் பரீட்சையில் சித்தியடையலாம். 
  5. ஒரு சிலர், குடி ,கூத்து , விளையாட்டு என்று பல வேலைகளில் ஈடு பட்டு போட்டு இறுதியில் மன அழுத்தம் , பயம் காரணமாக medical கொடுத்து போட்டு அடுத்த வருஷம் எழுதுவம் என்று இருப்பார்கள். மகா மொக்கர்கள் இவர்களே. ஒழுங்கா படிச்சா ஏனிந்த தொல்லை.  அடுத்த வருஷம் என்ன நடக்கும் என்று இப்ப எப்படி சொல்லுறது?? 
  6. இன்னும் சிலர் ஒரு தலைக்காதல் , காதலி என்று வருஷம் முழுக்க திரிந்து போட்டு பரீட்சைக்கு முதல் நாள் புழுதி பிடித்து கிடந்த புஸ்தகத்தை திறந்தால் என்னென்று தான் பாஸ் பண்ணுறது. கையில் வருவது நியாயம் தானே ..:)
பரீட்சைக்கு தயார் படுத்தும் போது, ஒரு நேர அட்டவனையை தயார் படுத்தி அதற்கு ஏற்ப இயங்கினால் இந்த அழுத்தங்களில் இருந்து மீளலாம். அத்துடன் அன்றே படித்ததை அன்றே படித்தல், விளங்காததை ஆசிரியரிடம் அல்லது நண்பனிடம்  கேட்டு படித்தல், என்பனவும் அழுத்தத்தை குறைக்கும் வழிகள்.
ஒரு சிலர் புகைத்து புகைத்து படிப்பார்கள்.  புகைப்பதால் அழுத்தங்கள் குறையுமோ  எனக்கு தெரியாது. ஆனால் குடித்தால், புகைத்தல் ஆகியவற்றின் விளைவால் புற்று நோய் தான் வருமென்பதை அவர்கள் அறியாதவர்களும் அல்ல.

அண்மையில், எனது மாணவரகள்,  11 பேர், பரீட்சைக்கு போகாமல்  medical குடுத்த சம்பவமும் இடம் பெற்றது. இதற்கு நேரடியாக உள்ள காரணமாய் நான் சொல்வது, பயம் தான் காரணம். வாழ்கையில் பயம் இருக்கணும். வாழ்கையே பயம் ஆயிட கூடாது !!
பரீட்சை என்றால் சும்மா அதிருதில்ல.. !!!

2010-10-02

கொட்டும் மழையிலும் புரட்டாதிச்சனி

சனீஸ்வரன், இருக்கிற ஒன்பது (நவ )கிரகங்களில் கொஞ்சம் பிரபல்யமானவர். ஒருவரது வாழ்க்கையில் இந்த சனியின் ஆக்கிரமிப்பு எப்படியும்  இருந்தே ஆகும்.


குறிப்பாக பிறக்கும் நட்சத்திரத்தில் தோஷம்( 4 இல் சனி ,  7 இல் சனி ...)  , இதை விட பிறக்கும் போது சனி - பகை யாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் சனியை வழிபாடு செய்வார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் எள்ளு எண்ணெய் எரித்து வழிபடுவார்கள். சிலர் விரதமும் இருப்பார்கள். இது வாழ்க்கை முழுக்க செய்ய வேண்டி இருக்கும். என்ன கொடுமை சனியன் இது.


இதை விட,  சனிப்பெயர்ச்சி நடைபெறும் போது , பெரும்பாலும் ஏழரைச்சனியன் , சனி எட்டாம் இடத்தில் வரும் போது அட்டமத்து சனியன் என்று ஒவ்வொருவரும் இந்த இரண்டையும்  தங்கள் வாழ்கையில் எப்படியும் சந்தித்தே ஆக  வேண்டி இருக்கும்.


ஏழரைச்சனியன்-  வந்துவிட்டால் ஏழரை ஆண்டுகள் சனியன் தான். பெரும்பாலும் O/L , A/L படிக்கும் போது பலருக்கு ஆப்பு வைக்க என்று வரும். ஒரு சிலர்  இதெல்லாம் தப்பி வந்தாலும், இருபதுகளில் வந்தால் திருமண தடை, குடும்பத்தில் பிரச்சினை , செலவு,உடல் நோய் , உடல் மெலிவு  என்று எல்லாம் போட்டு தாக்கும் பலம் கொண்டவர் இவர்.

ஏழரை ஆண்டை, ஒவ்வொரு இரண்டரை ஆண்டாக பிரித்து,  இடங்கள் மாறும்போது, அல்லது வக்கரிக்கும் போது , அவரவருக்கு நல்ல மற்றும் கெட்ட பலனை குடுப்பார் இந்த சனியன். அதால தான் சனம் சொல்லுறதுகள், ஆரம்பத்தில கஷ்டமும் பிறகு நல்லதையும் அல்லது முதலில் நல்லதும் பிறகு கஷ்டத்தையும் குடுப்பார் என்று.
சிலருக்கு ஏழரை ஆண்டும் கஷ்டம் தான்.
சொன்னால் போல , எனக்கு A/L  படிக்க தொடங்கும் போது, அதாவது  1995 இல் வந்த சனியன் பல்கலையில் மூன்றாம் ஆண்டு முடிக்கும் மட்டும் தொடர் ஆப்பு தான்.  பல்கலை செல்ல வைத்தது ஒன்றை தவிர மற்றது எல்லாம் பெரிய ஆப்பு தான். அடிக்கடி குளிரால்  உடல் சுகவீனம், செலவு , எல்லாத்திலும் வெறுப்பு என்று எல்லாம் வந்து ஆட்டி படைத்தது விட்டு போனது.


ஒரு ராசியில் சராசரியாக 2 1/2 வருடங்கள் சஞ்சரிக்கும் சனி பகவான், 12 ராசிகளையும் (அதாவது சூரிய பகவானை) சுற்றி வர சராசரியாக இருபத்தொன்பதரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.


ஒருவரின் வாழ்கையில் ஏழரைச்  சனியன் மூன்று தடவைகள் வரும் என்பது ஐவீகம். முதல் ஏழரை நாட்டுச் சனி சஞ்சாரத்தை "மங்கு சனி' என்றும், இரண்டாம் சுற்றுக்குப் "பொங்கு சனி' என்றும், மூன்றாம் சுற்றுக்கு "மரண சனி' என்றும் பெயர் வைத்து அழைக்கிறார்கள். இதற்காக மூன்றாவது சுற்று ஏழரைச் சனி நடப்பவர்கள் அனைவருமே இறந்துவிடுவார்கள் என நினைப்பது பேதமை.  எனக்கு தெரிந்த பலர் மரண சனியில் மண்டையை போட்டும் உள்ளனர். இன்னும் சிலர் இன்னமும் வாழ்கின்றனர். இதுக்கு எல்லாம் விளக்கம் சொல்ல நான் கடவுள் இல்லை. 

 வாழ்கையின் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல பொங்கு சனி கூடுதலாக உதவுவார் என்று சொல்லும் வழமையும் உள்ளது.




அட்டமத்து சனியன்: னியன் எட்டாம் இடத்துக்கு வரும் போது வருவது தான் இந்த சனியன். இவர் பெரும்பாலும் பெரிய ஆப்பை தான் போடுவார். எல்லாம் நன்மைக்கே என்று கொள்ள வேண்டியது தான். அதுவும் பிறப்பில் சனி தோஷம் இருக்கிறவைக்கு தொடர்  ஆப்பு தான். 

இவ்வளவும்  எழுதுறது என்னுடைய , நண்பர்களின் அனுபவங்களில் தான். 

இப்படிப்பட்ட பெரிய வில்லன் சனீஸ்வரனை நாங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிபட்டால் மிகவும் நல்லது. 

இப்படித்தான் சனியை வர்ணிப்பர் "குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?', சனியன் குடுத்தால் குடுத்து கொண்டே இருப்பார். எங்கட பாசையில் வஞ்சகமில்லாமல் குடுப்பார்.

சனீஸ்வரனை  நோக்கி பாடும் தோத்திரம் இதுதான்.

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா! தா!

புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில், அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும்,  சிவன் அல்லது விஷ்ணு ஆலயத்தில் உள்ள நவக்கிரகங்களுக்கு எள்ளு எண்ணெய் எரித்து ,அர்ச்சனை  செய்து வழிபட்டால் சனீஸ்வரனின் கொடுமை குறையும் என்பது வரலாறு. 

இது குறிஞ்சிக்குமரன் கும்பாபிஷேகம் நேரம் , விக்கிரகங்களை பிரட்டும் போது சனியை பிரட்டி தர தூக்கிட்டு போனது. :)

சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். அடுத்தமுறை போகும் போது கொஞ்சம் உத்து பாருங்க. வடிவா தெரியும். சனீஸ்வரன் சூரியனுக்கு பின்னால் இருப்பவர். சொன்னால் போல சூரியன் நடுவில இருப்பார். குறிப்பாக கறுப்பாடை அணிந்து செல்லுதல் வழமை. எல்லாமே பழசுகள் சொன்னது. 


 இதிலும் புரட்டாதியில் நவராத்திரி வருவதால், நவராத்திரி காலங்களில் வரும் சனிக்கிழமைகளில்  எள்ளு எண்ணெய் எரித்தல் கூடாது. வீடுகளில் கும்பம் வைப்பதால் அது தடை.  இந்த முறையும் வருகின்ற வெள்ளிக்கிழமை நவராத்திரி தொடங்குவதால் அடுத்த சனிக்கிழமை எள்ளெண்ணை எரிக்க பலர் விரும்ப மாட்டார்கள். ஆதலால்,  இந்த சனிக்கிழமை தான் கடைசிக் கிழமை ( புரட்டாதி சனி  ). 

 

கோவில் எல்லாம் சனமோ சனம். ஊரோடு எல்லாமே வந்துட்டுதுகள். சனியன் கன பேருக்கு இருக்கு என்று தெரிந்து கொண்டேன் இன்று. அவரவர் வந்து எரித்தால் தான் அவரவர் அப்பலனை பெறுவார்கள் . இதுவும் வரலாறு. அதால வீடுகளில்  உள்ள பழசுகள், இளசுகள் , பிகர்கள் என்று கோவில் நிரம்பி வழிந்தது .

தம்பி இவ்வளவும் பேசுறீர், நீர் என்ன ம.................... அங்க போனனீர் என்று கேட்பியள் ; எனக்கு தெரியும் .

காரணம் 1 : ஏழரைச்சனியன் எனக்கு இருந்த காலத்தில் ஒவ்வொரு சனியும் நான் கோவிலுக்கு போய் சனீஸ்வரனை வழிபடல் வழமை.  முடிஞ்ச பிறகும் அதை தொடர்ந்தேன். சனிக்கிழமை மரக்கறி உண்ணும் நாள் !!!

 காரணம் 2 : கொழும்புக்கு வெளியே வேலை செய்வதால், அந்தப்பகுதியில்  கோவில் செல்லும் வழமை குறைவு.  இடைக்கிடை செவ்வாய்க்கிழமைகளில் சென்று வருவேன்.  வார இறுதி நாட்களில், கொழும்பில்,  நண்பர்களுடன் சேர்ந்து, பெரும்பாலும் சனி காலை கோவில் செல்வது வழமை.  அதுவும் கதிரேசன் கோவில்தான்.

 காரணம் 3 : அம்மா, கொழும்பில் பொன்னம்பலவானேஸ்வரம் கோவில் மட்டும் சென்று வழிபடுபவர். மற்ற கோவில்களுக்கு போறது இல்லை. இது எல்லாத்துக்கும்  சேர்த்து நான் தான் போறது. 

 

 சரி  விஷயத்துக்கு வருவம். இன்று எள்ளு எண்ணெய் எரிக்க சட்டி வாங்க ஒரு பெரிய வரிசை. கொட்டும் மழையோ மழை. இடி முழக்கம் , மின்னல் வேறு. எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு சனம் நீண்ட வரிசையில்.  நீண்ட நேரம் நின்று ஒருமாதிரி கவுண்டருக்கு கிட்ட போயாச்சு. எனக்கு முன்னுக்கு, ஒரு ஐம்பது வயசு மதிக்க தக்க அம்மா ஒருவ நின்றவ. அவ கவுண்டரில் நிண்ட தம்பியிட்ட, தம்பி எனக்கு ஒரேடியா ஐஞ்சு சட்டி  எரிக்கனும். பிள்ளை குட்டிகள் எல்லாம் வகுப்புகளுக்கு போட்டுது. மனிசன் வேலைக்கு போட்டார். அதால நான்தான் வந்து இருக்கன் என்று சொல்லி,       30* 5  பெறுமதியான சட்டிகளை வாங்கி கொண்டு போனவ. பின்னால நின்ற என்னை பார்த்து தம்பி உமக்கு எத்தனை சட்டி , .. எனக்கு ஒரு சட்டி போதும் என்று விழுந்தடிச்சு சொல்லி,  வாங்கி எரித்து போட்டு வந்தேன். சில பேர் ஒரேடியா பல சட்டிகளை எரித்தா, கூட அருள் புரிவார் சனீஸ்வரன் என்று நினைத்தார்களோ தெரியாது. ஒரு தட்டில் பத்து பதினைஞ்சு என்றெல்லாம் ஏற்றி எரித்ததை காணக்கூடியதாக இருந்தது.

சந்தேகம் :உதில இந்த முறை சனியன் பிடிச்சு நிக்குறவை, கோவில் பக்கம்  இனி அடுத்த வருஷம் புரட்டாதி சனிக்கோ , அல்லது இப்போதைக்கு இனி கோவில் பக்கம் வாறது இல்லையோ,

கடமைக்கு எரிப்பவர்களும் உள்ளார்கள் !!!

இது  எல்லாமே சனீஸ்வரனுக்கு தான் வெளிச்சம். !!!



Related Posts Plugin for WordPress, Blogger...