2010-10-30

நினைவு நாள்-- பதினைந்து ஆண்டுகள் !!!

 இன்று இரவுடன் பதினைந்து ஆண்டுகள் முடிவு. என்னப்பு நினைவு இருக்குதோ..
1995 ப்ளாஷ் பக் ...................டோட்டடைங் ..............

மாலை ஐந்து  மணி இருக்கும், திடீர் என்று மக்கள் மத்தியில் ஏதோ எல்லாரையும்  இடம்பெயரட்டாம் என்று சொல்லிட்டினமாம் என்று சத்தம் போட்டுக்கொண்டு  வீட்டு படலையை திறந்தவாறு வந்தார் எங்கட கல்லூரி கணித ஆசான்.  நான் சாரத்தோட முத்தத்தில் விளக்குமாறும் கையுமாயும் , அம்மா குசினிக்க இரவுச்சாப்பாடு செய்ய ரெடியாகி கொண்டும்,  தங்கை எங்கட செல்ல நாயகுட்டியுடனும் வீட்டு முத்தத்தில் எனக்கு உதவி செய்த படியும்  நின்றாள்.

நான் வெல வெலத்து போய்,  அம்மாவை அழைத்தபடி குசினி நோக்கி ஓடும் போது தொடங்கியது மீண்டும் ஷெல் வீச்சு.. ஓடி வந்து எங்கட பங்கருக்குள் ஒளிந்து கொண்டோம். நாங்கள் மூவரும் , பிறகு நாய்க்குட்டி , பிறகு ஆசான் என்று எல்லாருமே மூச்சை பிடித்து கொண்டு ஏறத்தாழ ஒரு மணித்தியாலயம் இருந்திருப்போம். ஆறு மணி இருள் சூழ்கிறது .. ஒரு இடை வெளி .. சனம் எல்லாமே ரோட்டில .. நாங்கள் ஒழுங்கையுக்க இருந்த படியால், விஷயம் உடன வராது. அம்மா முன் வீட்டில் இருந்த கல்லூரி அதிபரை வடலிக்காலே அழைத்து பேசிக்கொண்டு இருக்கும் போது , எல்லாரும் சொல்லினம், எல்லாரையும் வெளிக்கிடட்டாம் என்று, இனி என்ன வெளிக்கிடுவம் என்று போட்டு வீட்டுக்கு  வந்து விளக்கேற்றி கும்பிட்டு போட்டு, அதற்கிடையில் இந்த ஆரவாரத்தில தோசைக்கல்லும் ரொட்டியும் அடுப்பில ஒரு கருகின வாசம்.  உடனையே ஆசானும் நானும் போய் அபிராமி சாப்பாட்டுக்கடையில்   (பல்கலை முன்னால் ) இரு குடும்பத்துக்கும் இடியப்பம் வாங்கி வர, எங்கட குடும்பமும்   இடம் பெயர ஆயத்தம் ஆகியது  .

ஒரு பிடியாக சாப்பிட்டு போட்டு, எனது சைக்கிள் கரியரில்  இரண்டு பாக், ஒன்றில் உடுப்பு மற்றையதில் தங்கையின் O/L பரீட்சை புத்தகங்கள், கொப்பிகள். handle இல்  இரண்டு bag ஒன்றில் தண்ணி போத்தல், தோச்சு லைட்டு , அரிக்கன் லாம்பு ,  மற்றையதில் மண்ணெண்ணெய், அம்மாவின் கரியரில், இருபது கிலோ அரிசி , மண்ணெண்ணெய் குக்கர்.

இரவு ஏழு மணி, வீட்டை பூட்டிக்கொண்டு படலைக்கு வெளியே வந்தால் , பக்கத்து வீடு , முன் வீடு எல்லாமே ஏற்கனவே பெட்டி படுக்கையோட வெளிக்கிட்டு போட்டுதுகள். நான் தங்கையை முன் சைக்கிள் பாரில் ஏற்றிக்கொண்டு , அவள் தன் கையில் நாய்க்குட்டியையும் பிடித்த வாறு, இடம் பெயர தொடங்கினோம். நல்லூர் போய் வைமன் ரோட்டால மெயின் ஸ்ட்ரீட் போய் போவோம் என்று தான் ப்ளான். அங்க கச்சேரி நல்லூர் வீதிக்கு போனம் பாருங்க.. ஏற்கனவே ஒரு லட்சம் பேர் எங்கள மாதிரி எங்க போறம் என்று தெரியாம நடந்து கொண்டு போகினம்.

நாங்க போகும் இடம் எங்கட சித்தி வீடு. அதால எங்களுக்கு பிரச்சினை இல்லை. இருந்தாலும் போகும் பாதை எல்லாமே சனம் நிரம்பி வழிந்ததால், சைக்கிள் ஓட முடியாத நிலை. மெல்ல மெல்ல உருட்டிக்கொண்டு போனால், சிறிது நேரம் கழித்து, மழை சோவென கொட்ட தொடங்கீற்று. நாங்கள் எல்லாருமே நனைந்து போனது மட்டுமில்லாமல் எங்கட shabby நாய்க்குட்டி கூட நனைந்து போய் எங்கள ஒரு மாதிரி பார்க்குது.  என்ன செய்யுறது நாங்கள், குடையும் கொண்டு தான் வந்தனாங்க,  இருந்தாலும் சனத்துக்க பிடிக்க கஷ்டம், அதால  தங்கச்சி அவள் துப்பட்டாவால் நாய்க்குட்டியை போர்த்த படி நடந்தாள்.

இரவு பன்னிரண்டு மணி யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற தூபிக்கு வந்து சேர்ந்தோம், இதிலிருந்தாவது தெரியனும் எப்புடி நடந்து இருப்பம் என்று. எங்கட சனம் என்ன சனமையா.. ஒரு சிலதுகள் அவங்களை திட்டுதுகள், ஒரு சிலதுகள் தங்கட ஆக்களை தேடுதுகள், ஒரு சிலதுகள் வீட்டில் பழசுகளை எல்லாம் விட்டுட்டு வந்துட்டம் என்று சொல்லி சொல்லி அழுதுகள்(இது முதலையே பிளான் பண்ணி இருக்கனும் இல்லையா..), இன்னும் சிலதுகள் புதினம் புதினமாய் கதைக்குதுகள்.

விடிய ஒரு மணி , அரிக்கன் லாம்பு வெளிச்சம் மட்டும் தான், கைதடி நாவற்குழி பாலம் கிட்ட வந்துட்டுது போல கிடந்திச்சு.. ச்சே ச்சே.. அது இன்னும் போகணுமாம். ஆங்காங்கே ஒன்று அல்லது இரண்டு வாகனங்கள் வெளிச்சம் பாச்சின படி நிக்குது. அது அவங்கட வாகனமாம் என்று ஒரு சிலர் சொன்னதும், சனம் போக வழி இல்லை .. அதுக்க இவங்கள் வேற.. என்று பேசுதுகள்.

 அதிகாலை மூன்று மணிவரையும் அடிக்காத ஷெல், என்னமோ பிளான் பண்ணி அடிக்கிறமாதிரி ,  அடிக்க தொடங்கினாங்கள், யாழ்ப்பாணமே அதிர்ந்ததை நாவல் குழி யில் நிக்கும் போதுதான் வடிவா கேட்க கூடியதாய் இருந்தது. அடிக்கடி பாயும் சேர்ச் லைட்டு,  அந்த நாவல்குளி -கைதடி , கைதடி -கோப்பாய் இரண்டுக்கும் இடைப்பட்ட இடம் கடல் சார்ந்த வெளி என்பதால் நிலா போல் வெளிச்சம்.

 மூன்று மணித்தியாலங்கள் ஒரே இடத்தில் நகரவே முடிய வில்லை, இதெல்லோ ட்ராபிக் பிளாக் என்று சொல்லலாம். அப்படியே காலை ஐந்து மணி இருக்கும், நாவற்குழி பாலத்தை அண்டிய பகுதிகளுக்கு ஆட்டிலறிகள் வருவது போல் உணரச்சிகள்.சத்தம் கிட்ட வர வர.. சனம் சிதறி அடித்துக்கொண்டு தண்ணிக்க இறங்கிட்டுதுகள். நாங்கள் அந்த பாலத்துக்கு  வரும்போது, தண்ணியோ அல்லது டின் பால் கலர்ல சேறோ என்று இருந்திச்சு.

மழை பெய்கிறது , நனைஞ்சு நனைஞ்சு வீதிக்கருகாமையில் உள்ள மர நிழலில் நிக்கும் சனத்தால் தான் உண்மையில் ட்ராபிக் பிளாக். வரும் சனத்தை கட்டு படுத்த , வழிப்படுத்த யாருமே இல்லை . வரும் சனம் எங்க போறது என்று தெரியாமல் நிக்குதுகள், ஒரு சிலதுகள் எல்லாரையுமே கை விட்டுட்டு நிக்குதுகள். இன்னும் சில நெஞ்சு வலி, கை கால் வலி என்று நிக்குதுகள். இன்னும் சிலதுகள் என்ன செய்யுறது .. விதியாச்சே.. என்று போட்டு குழந்தை குட்டிகளோட நிக்குதுகள்..
நாங்கள் ஒரு மாதிரி கைதடியை வந்தடையும் போது காலை ஏழு மணி . கிட்டதட்ட பன்னிரண்டு மணித்தியாலங்கள் பத்து கிலோ மீட்டர்கள் .. என்ன நடையப்பா. இது.. வாழ்க்கையில் இப்படி நடக்க எல்லாருக்கும் குடுத்து வைக்கிறதில்லை ..


நாங்கள் வீடு சென்று , போன களைப்பில் தூங்கி விட்டோம், மாலை எழுந்து கைதடி சந்திக்கு போனால், அங்கு கண்ட காட்சிகள் இன்னும் ஞாபகம் இருக்கு.

மக்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்று. ஒரு நேரம் சாப்பிட சாப்பாடு இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை . நாங்கள் என்ன செய்யுறது.. எனக்கும் ஊர் புதிசு.. இருந்தாலும் அயலவர்களின் உதவியுடன் ப்ளைன் டீ போட்டு கொண்டு போய் குடுப்பம் என்று கடைக்கு போனால் தேயிலை இல்லை. சரி போனால் போகுது ஒரு கிடாரம் நிறைய தண்ணி நிறைத்து போட்டு கொண்டு போய் எங்கட ஒழுங்கை முகப்பில வைச்சு வாற சனத்துக்கு தாகம் தீர்க்கும் பந்தல் போல் சேவை செய்தோம். இரவு பன்னிரண்டு மணி  சனம் வந்து கொண்டே இருக்கு.... அடுத்த நாள் இன்னும் வருது.. என்ன ஐந்து லட்சம் சனமும் வர வேண்டாமா...
மூன்று நாள் கழித்து...

இடம் பெயர்ந்த சனத்திட்ட காசு இல்லை, உடுக்க ஒழுங்கான உடை இல்லை, இருக்க இடம் இல்லை.  இந்த அவலத்துக்கு மத்தியில் ... கள்ளர் கூட்டம் தங்கள் கைவரிசை .. ஒரு கோழி இருபது ருபாய், ஒரு ஆடு இருநூறு ருபாய் , மாடு முன்னூறு ருபாய் என்று அவங்கள் ஊரில நிக்குற ஆடுகள், மாடுகள் , கோழிகள் எல்லாத்தையும் பிடிச்சு கொண்டு வந்து கைதடி சந்தியில் வைச்சு வித்து காசு உழைச்சாங்கள் ...

ஒருவாரம் கழித்து..

இடம் பெயர்ந்த சனத்திட்ட காசு இல்லை, உடுக்க ஒழுங்கான உடை இல்லை, இருக்க இடம் இல்லை.  இந்த அவலத்துக்கு மத்தியில் ... கள்ளர் கூட்டம் தங்கள் கைவரிசை .. ஒரு கோழி இருபது ருபாய், ஒரு ஆடு இருநூறு ருபாய் , மாடு முன்னூறு ருபாய் என்று அவங்கள் ஊரில நிக்குற ஆடுகள், மாடுகள் , கோழிகள் எல்லாத்தையும் பிடிச்சு கொண்டு வந்து கைதடி சந்தியில் வைச்சு வித்து காசு உழைச்சாங்கள் ...

ஒரு மாதம் கழித்து.. 
இடம் பெயர்ந்த சனத்திட்ட காசு இல்லை, உடுக்க ஒழுங்கான உடை இல்லை, இருக்க இடம் இல்லை.  - இவற்றில் ஒரு சிலருக்கு உதவிகள் வந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு தொடர் தவிப்புகள்  தான் .

எல்லாமே தற்காலிக பின்னடைவுகள் தான் என்று சொன்னதாக ஞாபகம்.. அப்படியே இனியும் வைச்சுக்குவோம்..

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...