குறிப்பாக பிறக்கும் நட்சத்திரத்தில் தோஷம்( 4 இல் சனி , 7 இல் சனி ...) , இதை விட பிறக்கும் போது சனி - பகை யாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் சனியை வழிபாடு செய்வார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் எள்ளு எண்ணெய் எரித்து வழிபடுவார்கள். சிலர் விரதமும் இருப்பார்கள். இது வாழ்க்கை முழுக்க செய்ய வேண்டி இருக்கும். என்ன கொடுமை சனியன் இது.
இதை விட, சனிப்பெயர்ச்சி நடைபெறும் போது , பெரும்பாலும் ஏழரைச்சனியன் , சனி எட்டாம் இடத்தில் வரும் போது அட்டமத்து சனியன் என்று ஒவ்வொருவரும் இந்த இரண்டையும் தங்கள் வாழ்கையில் எப்படியும் சந்தித்தே ஆக வேண்டி இருக்கும்.
ஏழரைச்சனியன்- வந்துவிட்டால் ஏழரை ஆண்டுகள் சனியன் தான். பெரும்பாலும் O/L , A/L படிக்கும் போது பலருக்கு ஆப்பு வைக்க என்று வரும். ஒரு சிலர் இதெல்லாம் தப்பி வந்தாலும், இருபதுகளில் வந்தால் திருமண தடை, குடும்பத்தில் பிரச்சினை , செலவு,உடல் நோய் , உடல் மெலிவு என்று எல்லாம் போட்டு தாக்கும் பலம் கொண்டவர் இவர்.
ஏழரை ஆண்டை, ஒவ்வொரு இரண்டரை ஆண்டாக பிரித்து, இடங்கள் மாறும்போது, அல்லது வக்கரிக்கும் போது , அவரவருக்கு நல்ல மற்றும் கெட்ட பலனை குடுப்பார் இந்த சனியன். அதால தான் சனம் சொல்லுறதுகள், ஆரம்பத்தில கஷ்டமும் பிறகு நல்லதையும் அல்லது முதலில் நல்லதும் பிறகு கஷ்டத்தையும் குடுப்பார் என்று.
சிலருக்கு ஏழரை ஆண்டும் கஷ்டம் தான்.
சொன்னால் போல , எனக்கு A/L படிக்க தொடங்கும் போது, அதாவது 1995 இல் வந்த சனியன் பல்கலையில் மூன்றாம் ஆண்டு முடிக்கும் மட்டும் தொடர் ஆப்பு தான். பல்கலை செல்ல வைத்தது ஒன்றை தவிர மற்றது எல்லாம் பெரிய ஆப்பு தான். அடிக்கடி குளிரால் உடல் சுகவீனம், செலவு , எல்லாத்திலும் வெறுப்பு என்று எல்லாம் வந்து ஆட்டி படைத்தது விட்டு போனது.
ஒரு ராசியில் சராசரியாக 2 1/2 வருடங்கள் சஞ்சரிக்கும் சனி பகவான், 12 ராசிகளையும் (அதாவது சூரிய பகவானை) சுற்றி வர சராசரியாக இருபத்தொன்பதரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.
ஒருவரின் வாழ்கையில் ஏழரைச் சனியன் மூன்று தடவைகள் வரும் என்பது ஐவீகம். முதல் ஏழரை நாட்டுச் சனி சஞ்சாரத்தை "மங்கு சனி' என்றும், இரண்டாம் சுற்றுக்குப் "பொங்கு சனி' என்றும், மூன்றாம் சுற்றுக்கு "மரண சனி' என்றும் பெயர் வைத்து அழைக்கிறார்கள். இதற்காக மூன்றாவது சுற்று ஏழரைச் சனி நடப்பவர்கள் அனைவருமே இறந்துவிடுவார்கள் என நினைப்பது பேதமை. எனக்கு தெரிந்த பலர் மரண சனியில் மண்டையை போட்டும் உள்ளனர். இன்னும் சிலர் இன்னமும் வாழ்கின்றனர். இதுக்கு எல்லாம் விளக்கம் சொல்ல நான் கடவுள் இல்லை.
வாழ்கையின் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல பொங்கு சனி கூடுதலாக உதவுவார் என்று சொல்லும் வழமையும் உள்ளது.
அட்டமத்து சனியன்: சனியன் எட்டாம் இடத்துக்கு வரும் போது வருவது தான் இந்த சனியன். இவர் பெரும்பாலும் பெரிய ஆப்பை தான் போடுவார். எல்லாம் நன்மைக்கே என்று கொள்ள வேண்டியது தான். அதுவும் பிறப்பில் சனி தோஷம் இருக்கிறவைக்கு தொடர் ஆப்பு தான்.
இவ்வளவும் எழுதுறது என்னுடைய , நண்பர்களின் அனுபவங்களில் தான்.
இப்படிப்பட்ட பெரிய வில்லன் சனீஸ்வரனை நாங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிபட்டால் மிகவும் நல்லது.
இப்படித்தான் சனியை வர்ணிப்பர் "குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?', சனியன் குடுத்தால் குடுத்து கொண்டே இருப்பார். எங்கட பாசையில் வஞ்சகமில்லாமல் குடுப்பார்.
சனீஸ்வரனை நோக்கி பாடும் தோத்திரம் இதுதான்.
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா! தா!
புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில், அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், சிவன் அல்லது விஷ்ணு ஆலயத்தில் உள்ள நவக்கிரகங்களுக்கு எள்ளு எண்ணெய் எரித்து ,அர்ச்சனை செய்து வழிபட்டால் சனீஸ்வரனின் கொடுமை குறையும் என்பது வரலாறு.
இது குறிஞ்சிக்குமரன் கும்பாபிஷேகம் நேரம் , விக்கிரகங்களை பிரட்டும் போது சனியை பிரட்டி தர தூக்கிட்டு போனது. :)
No comments:
Post a Comment