2011-01-15

மாடாய் உழைப்போருக்கு உரிய நாள் ஜனவரி 16

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


இது திருவள்ளுவர் தாத்தா என்றோ  சொன்னது. இதை அடிக்கடி எங்கட வாத்தியார் கூட சொல்லி இருக்கின்றார்.  அதாவது  கொஞ்சம் கீழ போய் விளக்கமாய் பார்த்தால்

"எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை."

அதுதான் நானும் சொல்லுறன்.. மாடாய் உழைக்குற உங்க எல்லாருக்கும் வருஷா வருஷம் நாங்கள் ஒரு நாள் வைச்சு இருக்குறம் அதுதான் இந்த பட்டி பொங்கல். நாளைக்கு வருது.

அடிக்கடி அடுத்தவன் வீட்டில கதைக்கிறதை செவி மடுத்தும் இருக்கின்றேன் . அவனொருத்தன்   மாடாய் வெளிநாட்டில உழைச்சு அனுப்ப இவங்க இங்க சட்டலைட் சானலும் சீரியலுமாய் இருக்குதுகள். அவன்ட காசை எல்லாம் வீணாக்கி தள்ளுதுகள் என்று எல்லாம் கதைப்பதை நீங்கள் கூட கேட்டும் இருப்பீர்கள். அந்த மாட்டு நண்பர்கள், எல்லாருக்கும் நாளைக்கு புனித விழா.

உங்க எல்லாரையும் விடியவே கிணத்தடியில கட்டி வைச்சு.. தண்ணியால (மோட்டாரில இருந்து வாற  தண்ணியை நேர பிடிக்கணும், அப்பதான் கொஞ்சமாவது வெளிக்கும் )கழுவி (போச்சு போட்டு தேய்க்கணும்- ரொம்ப முக்கியமான வேலை..  ) பிறகு சாம்பிராணி எல்லாம் கட்டாயம் காட்டனும். இல்லாட்டி புதைந்து கிடந்த "புதையலை" பப்ளிக் இற்கு எடுத்து விட்ட மாதிரி... மணக்காமல் இருக்கத்தான்.
பிறகென்ன வழமை போல பொங்கி படைச்சு விட, மூச்சு திணறி மயங்கி விழும் வரைக்கும் திண்டு போட்டு படுக்க வேண்டியதுதான். மீண்டும் அடுத்த  நாளைக்கு மாடாய் உழைக்க.. களத்துக்கு திரும்ப வேண்டியதுதான்.. :)
 
இப்படி இந்த மாடு மாடு என்று சொல்லுறவையை நாங்கள் கட்டாயம் கவனித்தே ஆகணும்.  உண்மையில் மிருகங்கள் மீது அன்பு வைத்திருத்தல் என்பது கட்டாய கடமை .

இந்து சமயத்தை எடுத்து பார்த்தால்,  வாய் பேசாத இந்த சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே, பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக , எனக்கு தெரிந்த அறிவதுடன்.. 

 - விநாயகன் யானைத்தலையன்
- அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சூறு(எலி என்றும் சொல்லுவர் )
- தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
- அவன் தந்தையார்   சிவன் அணிந்திருப்பது நாகம், வருவது பசுவில்
- காளி வருவது சிங்கத்தில்
- மாமன் திருமால் படுப்பது பாம்பணையில்
- தர்மதேவன் வருவது எருமையின் மீது
- நம்ம நண்பன்---  சனீஸ்வரனை சுமப்பது காகம்

இப்படி சொல்லிக்கொண்டே  போகலாம். இவற்றில் இருந்தாவது தெரிந்து கொள்ளலாம் நாங்கள் வழிபடும் கடவுளுக்கு மேலாக இம்மிருகங்கள் மீது அன்பு காட்டல் வேண்டும். அத்துடன் நன்றியாகவும் இருக்கணும்.


பசுமாடு செய்யும் உதவிகளை பாருங்கள், உதாரணமாக பசுப்பாலை எடுகின்றோம். தயிர்,  நெய் தயாரிக்கின்றோம்.  இதை விட சாணம் கொண்டு வீபுதி தயாரிக்கின்றோம். மேலதிகமாக, மாடுகளை பயன்படுத்தி நெல் வயலை உழுகின்றோம். நெல் அறுவடை செய்ய கூட மாடுகள் தான் உதவி செய்கின்றன. இவற்றுக்கு நன்றி தெரிவிக்க நாங்கள் என்னதான் செய்கின்றோம்? நெற்பயிர் அறுவடைக்குப் பின் நாங்கள் வைக்கோலை மாட்டு பிள்ளைகளுக்கு உணவாக  போடுகின்றோம். எடுத்த அரிசியை உணவாக்கும் போது கழிவான கஞ்சியை உணவாக குடுக்கின்றோம். இப்படி நாங்கள் இந்த ஜீவன்களுக்கு எதுவுமே உருப்படியான ஈடான மாற்றீடுகளை செய்வதில்லை. அத்துடன்  வேறு சிலர் பசுவின் பெருமையை மஹிமையை அறியாமல் (கறவையற்ற)பசுக்களை துன்புறுத்துகிறார்கள், வதைக்கவும் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம், இது மிகவும் வருந்தத்தக்கது:(.

இவர்களுக்கு நன்றி செய்வதுக்கு ஏற்ற நாளாய் உழவர்  திருநாளாம் பொங்கலுக்கு அடுத்த நாளில், அந்த  உழவர்கள் சந்தோஷமாய் உழவர் திருநாளை கொண்டாட காரணமாய் இருந்த இந்த பசுக்கள், மாட்டு பிள்ளைகள் எல்லாரையும், கௌரவ படுத்தி கொண்டாடும் நாளாக உள்ளது மகிழ்ச்சிக்கு உரிய விடயமே. நாங்களும் எங்கள் வீட்டில் இருக்கின்ற இந்த ஜீவன்களை நாளைய தினத்தில் கௌரவபடுத்தி கொண்டாடுவோமாக.

மாடாய் உழைக்கும்  எல்லோருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் !!!

பிற்குறிப்பு : நாளைக்கு தமிழ் திரையுலகத்தில் மாடாய் உழைக்கும் நமீதா வின் வணக்கம் டமிழகம் காலை எட்டு மணிக்கு ஏதோ ஒரு டிவியில  இடம்பெறுமென்பதை நமீதா ரசிகர்களுக்கு இத்தால் அறிவித்து கொள்கின்றேன்.























 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...