நள்ளிரவும் கடந்து விட்டது.. தொலைபேசிகள் ஒரு புறம் அலறுகின்றன. புது வருட வாழ்த்துக்கள் சொல்ல எவனாவது எடுப்பானா??.. பல்கலைக்கழகம் பூட்டிய செய்தியால் முதலாம் வருட மாணவர்களின் பெற்றோர்கள், அவர்களிடம் வழங்கப்பட்ட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் வரிசையில் எனது கைத்தொலைபேசி எண்ணும் இருந்ததால், தொடர்ந்து அழைத்த வண்ணமே இருந்தார்கள் .. ஒன்றுமே செய்ய முடியவில்லை.. கடந்த இரண்டு நாட்களாக பல்கலைக்கழகம் அல்லுலோகப்பட்டு கொண்டு இருந்தது. இறுதியாக உயர் கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலும் வந்து சேர்ந்தது. உடனடியாக பல்கலைக்கழகத்தை மூடி விட்டாச்சு. நாளை காலை பத்து மணிக்கு பிற்பாடு யாரும் பல்கலை வளவில் நிக்க கூடாது. நின்றால் சட்டத்தை மதிக்க வில்லை என்று சொல்லி தூக்கி கொண்டு போடுவாங்கள்.
பகிடிவதை என்பதை நிறுத்த எத்தனையோ சட்டங்கள் இருந்தும், இன்னும் இதனை நிறுத்த முயலாமல் போய் விடுகின்றதை நினைக்கும் போது , ஒரு பல்கலையில் வேலை செய்யும் சிரேஷ்ட விரிவுரையாளர் என்ற வகையில் மிகவும் வருத்தமே.
உயர்தரத்தில் போட்டிக்கு படித்து பல்கலை வருவது ஒரு சிறிய கூட்டம் மட்டும் தான். அவர்கள் அரசாங்கம் வழங்கும் வசதிகளை கொண்டு படித்து கொண்டு போக வேண்டியது தானே. புது முகங்களுடன் பழக பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது, அல்லது ஒரு ஒன்று கூடல் நடக்கும் போது பழகலாம் தானே. "நாங்கள் பழகுவதில் எந்த தடையும் விதிக்க்கவுமில்லை, விதிக்க போவதும்மில்லை". ஆனால் அவர்கள் பழகுவதாக சொல்லிக்கொண்டு என்னத்தை செய்கின்றார்கள் என்பதை நினைத்தால் தான் வேதனை.
குறிப்பாக நானும் ஒரு மாணவ போதகராக நான் வேலை செய்யும் பல்கலைக்கழகத்தில் கடமை செய்கின்றேன். இரவு பகல் பாராது, உணவு கூட உண்ணமால் நாள் முழுக்க இந்த பகிடி வதையை நிறுத்த பாடு பட்டு கொண்டு இருக்கின்றேன். ஆனால் இதையும் தாண்டி இவர்கள் இந்த பகிடி வதையை செய்யத்தான் காரணம் என்ன. ஏற்கனவே பல மாணவர்களை இழந்து இருக்கின்றோம். இதை இவர்கள் அறியாதவர்கள் அல்ல.
நேற்று காலை, போலீஸ் ஸ்டேஷன் இல் வைத்து, எங்களை (நானும் ஒருத்தன் ) நாயிலும் கேவலமாய் பேசி விட்டு அந்த சிரேஷ்ட மாணவ தலைவன் சென்றதை நின்ற பொலிசாரும், சக சிரேஷ்ட விரிவுரையாளர்களும் பார்த்ததை என்ன சொல்ல. அதுக்கு பதில் வெகு விரைவில் வழங்கவுள்ளோம். உயர் கல்வி அமைச்சர் நேற்று மாலை தொடர்பு கொண்டு பேசும் போது, நாட்டின் ஞானாதிபதி கொண்டு எல்லாரும் இந்த விடயம் தொடர்பான பல்கலையின் முடிவை கேட்பதாக சொன்னார். இன்று அதிகாலை அவர் மீண்டும் தொடர்பு கொண்டு, உடனடியாக பல்கலையை மூடி விடுமாறு சொன்னார். சொன்ன படி மூடி விட்டோம். அத்துடன், மாணவர்கள் பலருக்கு இரண்டு ஆண்டு தடையை வழங்க இருப்பதும் தற்போது முடிவாகி உள்ளது.
என்னுடைய மாணவர்கள், சக மாணவர்களை பகிடிவதை செய்த குற்றத்துக்காக கைது செய்த காரணத்தால் , பொல்லு தடியுடன் என்னை அடிக்க வாறதை யாரு தான் ஏற்பீங்க?? அதுக்கு உங்கள் பதில் தான் என்ன?? கடந்த திங்கள் அதிகாலை எங்களை சூழ்ந்த சிரேஷ்ட மாணவர்கள், வெடி கொளுத்தி போட்டும், மின்சாரத்தை நிறுத்தியும், தண்ணீர் ஊற்றியும், கதிரை மேசைகளை உடைத்தும், கூக்குரல் இட்டும், கொண்டு இருந்த போது, உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்ற காரணத்தால், மாணவ விடுதியில் நின்ற, உப வேந்தர் உட்பட்ட ஆறு சிரேஷ்ட விரிவுரையாளர்களும், உடனையே போலீசுக்கும், உயர்கல்வி அமைச்சர் கௌரவ எஸ் பி திசநாயக்கவையும் தொடர்பு கொண்டு விஷயத்தை விளங்கப்படுத்தி, எங்களுக்கு ஏதும் நடந்து விடாதவாறு பார்த்து கொள்ளுமாறு கேட்ட சம்பவத்தை பற்றி என்ன நீங்க நினைக்கின்றீர்கள் ??? நானும் அந்த சம்பவத்தில் நின்ற ஆறில் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர். ஒரேடியா தூக்கி இருப்பாங்க. என்னமோ நல்ல காலம் இன்னும் தொடர்கின்றது போல இருக்கு .
இன்னும் முதலாம் வருட மாணவர்களை வெருட்டி, நீங்கள் "சிரேஷ்ட மாணவர்களை கைது செய்தால், குரல் கொடுக்க வேணும் "என்று சொல்லு கிறார்கள். இதை பல கனிஷ்ட மாணவர்கள் எங்களுக்கு அறிவித்தும் உள்ளார்கள், அத்துடன் உயர் கல்வி அமைச்சர், நீதியமைச்சு, ஜனாதிபதி
யின் செயலாளர் என்று சொல்லி பலருக்கும் அறிவித்துள்ளார்கள். பொலிஸ் பாதுகாப்புடன் மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கை இடம் பெறுகின்றது.
பெரும்பாலும் நாளை காலையுடன் வெளியேற்றி முடிக்கலாம் என்று நம்பி இருகின்றோம். விஷேட பொலிஸ் படையணிகள் பல்கலையை சுற்றி பாது காப்பில் ஈடுபடுகின்றன. (காணொளிகள் நாளை தரப்படும் ).
இந்த சிரேஷ்ட மாணவர்கள் , இன்னும் பல்கலை வந்து பதினொரு மாதங்கள் ஆக வில்லை. இவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் வந்தவர்கள். அதுக்குள்ள இப்படி சட்டங்களை எல்லாம் மீறி பகிடிவதை செய்ய துணிந்து விட்டனர். இதை எப்பிடி கையாள போகின்றோம் என்பது தான் பிரச்சினை.
இப்படி மூடி திறந்து பின்னர் மூடி திறந்து .. வேலை எதுவுமே ஆகப்போவதில்லை. பேசாமல் தண்டனையை கொடுங்கள், மீண்டும் திறவுங்கள், மீறுபவர்களுக்கு தண்டனையை கொடுங்கள், பகிஷ்கரித்தால் மீண்டும் மீறுபவர்களுக்கு தண்டனையை கொடுங்கள், இப்படி ஒரு வருடம் சென்றாலும் பரவாய் இல்லை. இந்த பகிடிவதையை நிறுத்தியே ஆகணும் என்பதில் - நாட்டின் ஜனாதிபதி, உயர் கல்வி அமைச்சர், நாட்டின் பிரதமர், பல்கலை மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோர் முடிவெடுத்து, பாராளுமன்றில் சமர்ப்பித்து, அங்கும் அது ஏற்று கொள்ள பட்டுமுள்ளது.. இதை எப்பதான் நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறார்களோ தெரியாது. ஒரு சில பாகங்கள் வந்தாலும், முழுமையாக வரவில்லை.
வர வாழ்த்துக்கள்..