2010-12-25

வெள்ளவத்தை பாதை வெடிப்பு -கொழும்பு மாநகர சபை குழப்பத்தில்.. (ஒரு கற்பனை )

இனிய வாசகர்கள்,அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள்  அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..
 இது எல்லாம் ஒரு கற்பனை.. யாரவது உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவில் என்னை ஏதும் செய்து போடாதையுங்க.. நான் ரொம்ப நல்லவன்... 


கடந்த இரண்டு நாட்களாக வெள்ளவத்தை டிராபிக் பொலிசாருக்கு செம வேலை.. என்றுமில்லாத அளவுக்கு டிராபிக் புல்லோக்.  கிறிஸ்மஸ் விடுதலை, வருட இறுதி விடுதலை என்று வீடுகளுக்கு செல்லுவோர் ஒரு புறம், பொருட்கள் வாங்க கொழும்பு வந்தோர் என்று ஒரு புறம், பேருந்துகள், ஆட்டோக்கள் என்று மறுபுறம்.. எல்லாத்தையும்.. சமாளிக்க வேண்டிய பொறுப்பு இந்த வெள்ளவத்தை பொலிசாருக்கு வந்து சேர்ந்தது..


புகைப்படம்- எனது I-Phone
அதுதான்,  வழமை போல காலி வீதியில்.. ரோச்சி திரை கூடத்துக்கு முன்னால் ஏற்பட்ட பாதை வெடிப்பு. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்னரும் அதே இடத்தில்.. கொஞ்சம் பாதை அருகாமையில் வெடித்தது.. இந்த முறை தேஹிவல போகும் திசையில் உள்ள பாதையை கவர் பண்ணி வெடித்துள்ளது. இதற்குரிய காரணங்கள் என்னவென்று தெரியவில்லை என்று தான் முதலில் சொன்னார்கள்.. பிறகு ஒவ்வொரு காரணங்களை மீடியாவும், மாநகர அலுவலர்களும், எஞ்சினீயர் மார்களும் சொல்லி கொண்டாலும், யாரும் முடிவான காரணத்தை இதுவரை சொல்லவில்லை என்பது உண்மை...


 புகைப்படம்- எனது I-Phone
இது இவ்வாறு இருக்க.. இன்று காலை நான் , உடல் பயிற்சி செய்யும் பொருட்டு..காலி வீதியால் நடந்து செல்லும் போது உண்மையான காரணத்தை கண்டு பிடித்தேன். இதுக்கு எல்லாம்  ஒரு  இந்திய சினிமாக்கரரின் திரைப்படமே.. காரணமாமியிருக்கும் என்று எனது வாதம்.. டேய் கண்ணுகளா அது விஜய் படமில்லை.. அவக படம் என்னும் வரலை.. (அவக பட சூட்டிங்காலே மீனுகள் எல்லாம் செத்து மடிஞ்ச கதை .. பழசு..  அது இங்கே.மெரீனா சோகம் ) இது அவக அண்ணாவின்(நமக்கு மாமா முறை ) படம் தான்..
கொஞ்சம் கீழே பாருங்க,,, கண்ணா.. ..............................
 
 

.
புகைப்படம்- எனது I-Phone
சத்தியமா இது ஒரு கற்பனை !!! கடவுளே ,... எங்கட அங்கிள் ரசிகர்கள் ,.. படை எடுத்து கொண்டு வாரங்களோ தெரியல.. :(

2010-12-11

சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரசிகர்களாகிய எங்கள் மனங்களில் அன்றும், இன்றும், என்றும்  குடி கொண்டுள்ள எங்கள் ஸ்டைல் தலைவன், அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகழகே
இந்த  எந்திரன் என்பவன் படைப்பில் உச்சம்
உண்மை தான் , சும்மா பேரைச்சொன்னாலே அதிருதில்ல.. எந்திரன் எப்புடி.. சும்மா ஓடி தள்ளுதுள்ள.. !!!


ரஜனி பல்வேறு மொழிகளில்  நடித்த முதல் படங்கள்

* Tamil - Aboorva Raagangal (18.08.1975)
* Kannadam - Katha Sangama (23.01.1976)
* Telugu - Anthuleni Katha (27.02.1976)
* Malayalam - Allauddinum Albhutha Vilakkum (14.04.1979)
* Hindi - Andhaa Kaanoon (07.04.1983)
* English - Bloodstone (07.10.1988)
* Bengali - Baghya Devatha
ரஜனியின் முதல்

* Positive Role Movie - Kavikuyil (1977)
* Colour Film : 16 Vayathinelle (1977)
* Silver Jubilee Film Anthu Leni Katha (Telugu) (1976)
* Tamil Silver Jubilee Film 16 Vayathinile (1977)
* Solo Hero Movie & also "Superstar Title" - Bairavi (1978)
* Film shot in overseas - Priya (1978)
* Film with Sivaji Ganesan - Justice Gopinath (1978)
* Double Role - Billa (1980)
* Cinemascope - Pollathavan (1980)
* Film without moustache - Thillu Mullu (1981)
* Triple Role - Moondru Mugam (1982)
* Own Production : Maveeran (1986)
* Song sung by Rajini : Adikuthu Kuliru (Mannan) (1992)
* Own Screenplay and Story : Valli (1993)


Co-Stars who produced Rajini Movies

* Thiyagarajan - Mathu Thapitha Maga (Kannada)
* K. R. vijaya - Naan Vazavaipen
* Balaji - Billa, Thee, Viduthalai
* Sripriya - Natchathiram (Guest)
* Dwarakish - Adutha Varisu, Ganguvaa (Hindi), Nan Adimai
* IllaiVijay Kumar- Kai Kodukum Kai
* Ravichandran - Padikathavan, Natuku Oru Nallavan
* Rakesh Roshan - Begawan Dada
* Krishna - Maaveeran
* Chiranjeevi - Maapillai
* Prabhu - Mannan
* Mohan Babu - Peddarayadu
* Ilayaraja - Rajathi Raja

இது  எப்புடி..


தயாரிப்பாளர்களின் முதல் ரஜனி படங்கள்

# Valli Velan Movies - Bairavi
# P.A. Arts Production - Aarilirundu Arubadu Varai
# Vidhya Movies - Pollathavan
# Kavithalayam - Netrikkan
# Maya Arts - Sivapu Sooriyan
# Ragavendira's - Kai Kodukum kai
# S.D. Combines - Anbulla Rajnikanth
# Dwarakish Chithra - Adutha Varisu
# Lakshmi Productions - Naan Sigapu Manithan
# Eswari Productions - Padikathavan
# Geetha Arts - Mapillai
# Rasi Kala Mandir - Darmadorai
# Visalam Productions - Pandiyan
# Chandamama Vijaya Combines - Uzaippali
# Devyank Arts - Tyaagi
# Annamali Cine Combine - Arunachalam
# Arunachala Cine Creations -Padayappa
# Lotus International - Baba
# Sun Pictures- Enthiran 
ஒரு சில இயக்குனர்களின் முதல் ரஜனி படங்கள்

* Vayathinile - Bhrathiraja
* Bairavi - M. Bhaskar
* Mullum Malarum - Mahendran
* Aval Appadithan - Rudraya
* Billa - R. Krishnamoorthy
* Naan Pota Saval - Purthchidasan
* Anbulla Rajnikanth - K. Natraj
* Naan Admai Illai - Dwarakish (In Tamil only)
*Sivaji- Shankar

இது அப்போ .. எப்புடி ஸ்டைலு

சிறந்த நடிகர் விருதுகள் :

• Sivaji,
• Chandramukhi,
• Padayappa,
• Peddarayudu,
• Basha,
• Muthu,
• Annamalai,
• Thalapathy,
• Velaikaran,
• Sri Raghavendra,
• Nallavanuku Nallavan,
• Moondru Mugam,
• Engeyo Ketta Kural,
• Aarilirunthu Arubathu Varai,
• Mullum Malarum
• 16 Vayathinile

எந்திரன் மட்டும் என்னவாம்.. அதுவும் தான் ... :)

வாழ்க தலைவா.. புகழோடும்!!! ஸ்டைலோடும் !!!!
உங்கள் அன்பு +தீவிர ரசிகன்
பிரியன்


 

2010-11-06

தீபாவளி -கந்த சஷ்டி -சூரன் போர்- கார்த்திகை விளக்கீடு - ஒரு மசாலா

தீபாவளி :

தீபாவளி பற்றி வாதங்களுடன் கூடிய ஒரு பதிவு ஏற்கனவே இருப்பதால் , இங்கே விட்டு விடுகின்றேன்.


கந்த சஷ்டி: சூரன் போர்

இன்று கந்த சஷ்டி ஆரம்பமாகின்றது.  முருகப் பெருமானை ஆராதிக்கும் விரதங்களில் கந்த சஷ்டி , கார்த்திகை முக்கியமானவை. மாதக்கார்த்திகை  அன்று முருக ஆலயங்களில் சிறப்பாக முருகப்பெருமானுக்கு விஷேட அபிஷேகங்கள் ,பூசைகள் நடை பெறும். கந்த சஷ்டி, வருடத்தில் ஐப்பசி மாதம் சுக்கில பட்ச பிரதமை முதல் சட்டி ஈறாக உள்ள ஆறு நாட்கள் - கந்த சஷ்டி காலம். இந்த ஆறு நாட்களையும் சைவ மக்கள் விரத நாட்களாக கொள்ளுவர். ஆறாம் நாள் சூரன் போர்.

சூரன் போர் : தொடர்பான பதிவில் இருந்து:http://svpriyan.blogspot.com/2009/10/sooran.html

பேராதனையில் குடி கொண்டுள்ள  குறிஞ்சிக்குமரன் சூரன் போரின் போது 

முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில், சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்டு சூரனை வென்றதாகவும், முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு வென்றதை கந்த சஷ்டி விரதமாக பக்தர்கள் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபடுவதாகவும், சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவேற்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
பேராதனையில் குடி கொண்டுள்ள  குறிஞ்சிக்குமரன் சூரன் போரின் போது 

முருக அடியார்களின் வசதி கருதி , கந்த சஷ்டி கவசத்தை காணொளி மூலம் இங்கே இணைத்துள்ளேன். கண்டு மகிழுங்கள். 
பாகம் ஒன்று
 
 பாகம் இரண்டு 
 


திருக்கார்த்திகை விளக்கீடு : 

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். இத் திருநாள் இந்த வருடம் 21.11.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று வருகின்றது .இன்றே தமிழரின் தீப ஒளி நாள் ! 

தமிழரின் தீபத்திருநாள் தொடர்பாக சம்பந்தர் திருமயிலாப்பூரில் அருளிய பாடலில் 
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகை நாள் 
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் 
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
பொருள்: 
 
வளைகள் அணிந்த கைகளுடைய பெண்கள் வாழும் மா மயிலாப்பூரின்
அழகான வீதிகளில், கலக்கமற்ற திருக்கபாலீச்சரத்து இறைவனின் 
தொன்மையான விழாவான திருக்கார்த்திகை நாளில் சந்தனம்
அணிந்த இளமுலை மாதர்கள் கொண்டாடும் விளக்கேற்றுதலைக்
காணாமல் போகலாமோ, பூம்பாவையே! 
 
இந்த தொன்மையான நாள் பற்றி பலர் பல விதமான கருத்துக்களை சொல்லுவார்கள்.
  • ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்த நாள்
  • சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுதுஅவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார். அதனை நினைவு கூறுமாக என்றும் சொல்லுவார்.
    
பேராதனையில் குடி கொண்டுள்ள  குறிஞ்சிக்குமரன் திருக்கார்த்திகையின் போது 
மேலும், தீபங்களால் புறச்சூழலை விளக்கீட்டு வைத்தால் , அடிக்கடி ஒளிமயமான பிரதேசத்துக்கு இறைவன் வருவான் என்றும் சொல்லுவார்கள். இந்த பாடலில்,  



அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி
ஆயிரம் ஆயிரங்கோடி அணிவிளக் கேற்றிடுக
தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும் 
இருளேது காலைவிளக் கேற்றிட வேண்டுவதோ
என்னாத மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
மருளேல் அங்கவர்மேனி விளக்கமதென் கடந்த
மதிகதிர் செங்கனல் கூடிற்றென்னினும் சாலாதே 
 
இறைவனின் வருகையின் போது, ஆயிரமாயிரம் விளக்கேற்றி இறைவனை 
வரவேற்கணும் என்றும், அத்துடன் பசு நெய் கொண்டு தான் ஏற்றணும் என்றும்
 இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசு நெய் மூலம் விளக்கேற்றினால், 
அந்த சூழலுக்கு தீய சக்திகள், விஷ வாயுக்கள் வராது என்றும், அவ்வாறு
 வந்தாலும் வந்த தீய சக்திகளை அழிக்கும் வல்லமையை பசு நெய் 
கொண்டுள்ளதாக வரலாறுகள் சொல்லுகின்றன. மேலும் கோவில்களில் 
யாகம் வளர்க்கும்  போதும் பசு நெய் பாவிக்கப்படுகின்றன ,
இதற்கும் இதுவே காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.  
 
எனவே திருக்கார்த்திகை அன்று வீடுகளில் நெய் விளக்கேற்றி தீப திருநாளை 
கொண்டாடுவோமாக.   
 
 கடந்த வருடம் விளக்கீடு தொடர்பான பதிவு:

2010-10-30

நினைவு நாள்-- பதினைந்து ஆண்டுகள் !!!

 இன்று இரவுடன் பதினைந்து ஆண்டுகள் முடிவு. என்னப்பு நினைவு இருக்குதோ..
1995 ப்ளாஷ் பக் ...................டோட்டடைங் ..............

மாலை ஐந்து  மணி இருக்கும், திடீர் என்று மக்கள் மத்தியில் ஏதோ எல்லாரையும்  இடம்பெயரட்டாம் என்று சொல்லிட்டினமாம் என்று சத்தம் போட்டுக்கொண்டு  வீட்டு படலையை திறந்தவாறு வந்தார் எங்கட கல்லூரி கணித ஆசான்.  நான் சாரத்தோட முத்தத்தில் விளக்குமாறும் கையுமாயும் , அம்மா குசினிக்க இரவுச்சாப்பாடு செய்ய ரெடியாகி கொண்டும்,  தங்கை எங்கட செல்ல நாயகுட்டியுடனும் வீட்டு முத்தத்தில் எனக்கு உதவி செய்த படியும்  நின்றாள்.

நான் வெல வெலத்து போய்,  அம்மாவை அழைத்தபடி குசினி நோக்கி ஓடும் போது தொடங்கியது மீண்டும் ஷெல் வீச்சு.. ஓடி வந்து எங்கட பங்கருக்குள் ஒளிந்து கொண்டோம். நாங்கள் மூவரும் , பிறகு நாய்க்குட்டி , பிறகு ஆசான் என்று எல்லாருமே மூச்சை பிடித்து கொண்டு ஏறத்தாழ ஒரு மணித்தியாலயம் இருந்திருப்போம். ஆறு மணி இருள் சூழ்கிறது .. ஒரு இடை வெளி .. சனம் எல்லாமே ரோட்டில .. நாங்கள் ஒழுங்கையுக்க இருந்த படியால், விஷயம் உடன வராது. அம்மா முன் வீட்டில் இருந்த கல்லூரி அதிபரை வடலிக்காலே அழைத்து பேசிக்கொண்டு இருக்கும் போது , எல்லாரும் சொல்லினம், எல்லாரையும் வெளிக்கிடட்டாம் என்று, இனி என்ன வெளிக்கிடுவம் என்று போட்டு வீட்டுக்கு  வந்து விளக்கேற்றி கும்பிட்டு போட்டு, அதற்கிடையில் இந்த ஆரவாரத்தில தோசைக்கல்லும் ரொட்டியும் அடுப்பில ஒரு கருகின வாசம்.  உடனையே ஆசானும் நானும் போய் அபிராமி சாப்பாட்டுக்கடையில்   (பல்கலை முன்னால் ) இரு குடும்பத்துக்கும் இடியப்பம் வாங்கி வர, எங்கட குடும்பமும்   இடம் பெயர ஆயத்தம் ஆகியது  .

ஒரு பிடியாக சாப்பிட்டு போட்டு, எனது சைக்கிள் கரியரில்  இரண்டு பாக், ஒன்றில் உடுப்பு மற்றையதில் தங்கையின் O/L பரீட்சை புத்தகங்கள், கொப்பிகள். handle இல்  இரண்டு bag ஒன்றில் தண்ணி போத்தல், தோச்சு லைட்டு , அரிக்கன் லாம்பு ,  மற்றையதில் மண்ணெண்ணெய், அம்மாவின் கரியரில், இருபது கிலோ அரிசி , மண்ணெண்ணெய் குக்கர்.

இரவு ஏழு மணி, வீட்டை பூட்டிக்கொண்டு படலைக்கு வெளியே வந்தால் , பக்கத்து வீடு , முன் வீடு எல்லாமே ஏற்கனவே பெட்டி படுக்கையோட வெளிக்கிட்டு போட்டுதுகள். நான் தங்கையை முன் சைக்கிள் பாரில் ஏற்றிக்கொண்டு , அவள் தன் கையில் நாய்க்குட்டியையும் பிடித்த வாறு, இடம் பெயர தொடங்கினோம். நல்லூர் போய் வைமன் ரோட்டால மெயின் ஸ்ட்ரீட் போய் போவோம் என்று தான் ப்ளான். அங்க கச்சேரி நல்லூர் வீதிக்கு போனம் பாருங்க.. ஏற்கனவே ஒரு லட்சம் பேர் எங்கள மாதிரி எங்க போறம் என்று தெரியாம நடந்து கொண்டு போகினம்.

நாங்க போகும் இடம் எங்கட சித்தி வீடு. அதால எங்களுக்கு பிரச்சினை இல்லை. இருந்தாலும் போகும் பாதை எல்லாமே சனம் நிரம்பி வழிந்ததால், சைக்கிள் ஓட முடியாத நிலை. மெல்ல மெல்ல உருட்டிக்கொண்டு போனால், சிறிது நேரம் கழித்து, மழை சோவென கொட்ட தொடங்கீற்று. நாங்கள் எல்லாருமே நனைந்து போனது மட்டுமில்லாமல் எங்கட shabby நாய்க்குட்டி கூட நனைந்து போய் எங்கள ஒரு மாதிரி பார்க்குது.  என்ன செய்யுறது நாங்கள், குடையும் கொண்டு தான் வந்தனாங்க,  இருந்தாலும் சனத்துக்க பிடிக்க கஷ்டம், அதால  தங்கச்சி அவள் துப்பட்டாவால் நாய்க்குட்டியை போர்த்த படி நடந்தாள்.

இரவு பன்னிரண்டு மணி யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற தூபிக்கு வந்து சேர்ந்தோம், இதிலிருந்தாவது தெரியனும் எப்புடி நடந்து இருப்பம் என்று. எங்கட சனம் என்ன சனமையா.. ஒரு சிலதுகள் அவங்களை திட்டுதுகள், ஒரு சிலதுகள் தங்கட ஆக்களை தேடுதுகள், ஒரு சிலதுகள் வீட்டில் பழசுகளை எல்லாம் விட்டுட்டு வந்துட்டம் என்று சொல்லி சொல்லி அழுதுகள்(இது முதலையே பிளான் பண்ணி இருக்கனும் இல்லையா..), இன்னும் சிலதுகள் புதினம் புதினமாய் கதைக்குதுகள்.

விடிய ஒரு மணி , அரிக்கன் லாம்பு வெளிச்சம் மட்டும் தான், கைதடி நாவற்குழி பாலம் கிட்ட வந்துட்டுது போல கிடந்திச்சு.. ச்சே ச்சே.. அது இன்னும் போகணுமாம். ஆங்காங்கே ஒன்று அல்லது இரண்டு வாகனங்கள் வெளிச்சம் பாச்சின படி நிக்குது. அது அவங்கட வாகனமாம் என்று ஒரு சிலர் சொன்னதும், சனம் போக வழி இல்லை .. அதுக்க இவங்கள் வேற.. என்று பேசுதுகள்.

 அதிகாலை மூன்று மணிவரையும் அடிக்காத ஷெல், என்னமோ பிளான் பண்ணி அடிக்கிறமாதிரி ,  அடிக்க தொடங்கினாங்கள், யாழ்ப்பாணமே அதிர்ந்ததை நாவல் குழி யில் நிக்கும் போதுதான் வடிவா கேட்க கூடியதாய் இருந்தது. அடிக்கடி பாயும் சேர்ச் லைட்டு,  அந்த நாவல்குளி -கைதடி , கைதடி -கோப்பாய் இரண்டுக்கும் இடைப்பட்ட இடம் கடல் சார்ந்த வெளி என்பதால் நிலா போல் வெளிச்சம்.

 மூன்று மணித்தியாலங்கள் ஒரே இடத்தில் நகரவே முடிய வில்லை, இதெல்லோ ட்ராபிக் பிளாக் என்று சொல்லலாம். அப்படியே காலை ஐந்து மணி இருக்கும், நாவற்குழி பாலத்தை அண்டிய பகுதிகளுக்கு ஆட்டிலறிகள் வருவது போல் உணரச்சிகள்.சத்தம் கிட்ட வர வர.. சனம் சிதறி அடித்துக்கொண்டு தண்ணிக்க இறங்கிட்டுதுகள். நாங்கள் அந்த பாலத்துக்கு  வரும்போது, தண்ணியோ அல்லது டின் பால் கலர்ல சேறோ என்று இருந்திச்சு.

மழை பெய்கிறது , நனைஞ்சு நனைஞ்சு வீதிக்கருகாமையில் உள்ள மர நிழலில் நிக்கும் சனத்தால் தான் உண்மையில் ட்ராபிக் பிளாக். வரும் சனத்தை கட்டு படுத்த , வழிப்படுத்த யாருமே இல்லை . வரும் சனம் எங்க போறது என்று தெரியாமல் நிக்குதுகள், ஒரு சிலதுகள் எல்லாரையுமே கை விட்டுட்டு நிக்குதுகள். இன்னும் சில நெஞ்சு வலி, கை கால் வலி என்று நிக்குதுகள். இன்னும் சிலதுகள் என்ன செய்யுறது .. விதியாச்சே.. என்று போட்டு குழந்தை குட்டிகளோட நிக்குதுகள்..
நாங்கள் ஒரு மாதிரி கைதடியை வந்தடையும் போது காலை ஏழு மணி . கிட்டதட்ட பன்னிரண்டு மணித்தியாலங்கள் பத்து கிலோ மீட்டர்கள் .. என்ன நடையப்பா. இது.. வாழ்க்கையில் இப்படி நடக்க எல்லாருக்கும் குடுத்து வைக்கிறதில்லை ..


நாங்கள் வீடு சென்று , போன களைப்பில் தூங்கி விட்டோம், மாலை எழுந்து கைதடி சந்திக்கு போனால், அங்கு கண்ட காட்சிகள் இன்னும் ஞாபகம் இருக்கு.

மக்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் என்று. ஒரு நேரம் சாப்பிட சாப்பாடு இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை . நாங்கள் என்ன செய்யுறது.. எனக்கும் ஊர் புதிசு.. இருந்தாலும் அயலவர்களின் உதவியுடன் ப்ளைன் டீ போட்டு கொண்டு போய் குடுப்பம் என்று கடைக்கு போனால் தேயிலை இல்லை. சரி போனால் போகுது ஒரு கிடாரம் நிறைய தண்ணி நிறைத்து போட்டு கொண்டு போய் எங்கட ஒழுங்கை முகப்பில வைச்சு வாற சனத்துக்கு தாகம் தீர்க்கும் பந்தல் போல் சேவை செய்தோம். இரவு பன்னிரண்டு மணி  சனம் வந்து கொண்டே இருக்கு.... அடுத்த நாள் இன்னும் வருது.. என்ன ஐந்து லட்சம் சனமும் வர வேண்டாமா...
மூன்று நாள் கழித்து...

இடம் பெயர்ந்த சனத்திட்ட காசு இல்லை, உடுக்க ஒழுங்கான உடை இல்லை, இருக்க இடம் இல்லை.  இந்த அவலத்துக்கு மத்தியில் ... கள்ளர் கூட்டம் தங்கள் கைவரிசை .. ஒரு கோழி இருபது ருபாய், ஒரு ஆடு இருநூறு ருபாய் , மாடு முன்னூறு ருபாய் என்று அவங்கள் ஊரில நிக்குற ஆடுகள், மாடுகள் , கோழிகள் எல்லாத்தையும் பிடிச்சு கொண்டு வந்து கைதடி சந்தியில் வைச்சு வித்து காசு உழைச்சாங்கள் ...

ஒருவாரம் கழித்து..

இடம் பெயர்ந்த சனத்திட்ட காசு இல்லை, உடுக்க ஒழுங்கான உடை இல்லை, இருக்க இடம் இல்லை.  இந்த அவலத்துக்கு மத்தியில் ... கள்ளர் கூட்டம் தங்கள் கைவரிசை .. ஒரு கோழி இருபது ருபாய், ஒரு ஆடு இருநூறு ருபாய் , மாடு முன்னூறு ருபாய் என்று அவங்கள் ஊரில நிக்குற ஆடுகள், மாடுகள் , கோழிகள் எல்லாத்தையும் பிடிச்சு கொண்டு வந்து கைதடி சந்தியில் வைச்சு வித்து காசு உழைச்சாங்கள் ...

ஒரு மாதம் கழித்து.. 
இடம் பெயர்ந்த சனத்திட்ட காசு இல்லை, உடுக்க ஒழுங்கான உடை இல்லை, இருக்க இடம் இல்லை.  - இவற்றில் ஒரு சிலருக்கு உதவிகள் வந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு தொடர் தவிப்புகள்  தான் .

எல்லாமே தற்காலிக பின்னடைவுகள் தான் என்று சொன்னதாக ஞாபகம்.. அப்படியே இனியும் வைச்சுக்குவோம்..

2010-10-17

"பரீட்சைகள் " சும்மா பெயரைக்கேட்டாலே அதிருதில்ல !!


என்ன அதிருதில்ல என்று ரஜனி வசனம் பேசுறான் என்று யோசிக்காதையுங்க.. :)
கல்விக்குரிய சரஸ்வதி பூஜை நடை பெற்று கொண்டு இருக்கின்றது. கல்வி கற்றாலே பரீட்சை என்ற பதமும் எம்ம்முள்ளே பதிந்து கொள்கின்றது. அதாலே இன்று பரீட்சைகள் பற்றி ஒரு மொக்கை !!!..


 நான் வேலை செய்யும் பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான பீடங்களில் தற்போது  பரீட்சைகள் நடை பெற்று கொண்டு இருகின்றது. நேற்று என்னை ஒரு பரீட்சைக்கு மேற்பார்வையாளராக நியமித்து இருந்தார்கள். கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டிய தொழில். பரீட்சை மண்டபத்தில் பலவிதமான சம்பவங்கள் நடைபெறுவது வழமைதானே.

  • பார்த்து எழுதுதல், 
  • வினாத்தாளை பார்த்தவுடன் மயங்கி விழுதல் (விழுந்தாலும் பரவாய் இல்லை, பிறகு ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி எல்லாம்  இருக்கு.. )
  • மண்டபத்துக்கு பிந்தி  வருதல், கதைத்தல் .. ..
  • மெடிக்கல் குடுத்தோர், வராதோர் விபரம் பற்றி அறிவித்தல் 
இப்படி பல சோழிகள் !!
இதை விட, நேரகாலத்துக்கு எழுதும் விடைத்தாள்களை பகிர்தல், வினாத்தாள்களுக்கு விளக்கம், பரீட்சைகள் முடிய , விடைத்தாள்களை உரிய இடத்துக்கு அவற்றை கொண்டு போய் சேர்த்தல்.


உதவி மேற்பார்வையாளர்களுக்கு தேத்தணி, கோப்பி, வடை , வாழைப்பழம் என்று சொந்த செலவில் வாங்கி கொடுத்தல்..:(
இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்  !!!

நேற்றும் வழமை போல பணிகளை செய்து கொண்டு இருக்கும் போது, பழைய ஞாபகங்கள் ,அதாவது நாங்கள் பரீட்சைகள் எழுதும் அனுபவங்கள் அவ்வப்போது நினைவில்  வந்து வந்து  போனது.

பரீட்சை மண்டபத்தில், பரீட்சை நேரத்தில்,  குற்றம் செய்வோருக்கு 

மேசையில் இருந்த படியே மனசுக்குள் ஒரு கணக்கு போட்டு பார்த்தேன்.நான் இதுவரை ஆகக்குறைந்தது எத்தனை பரீட்சைகள் எழுதி இருப்பேன் என்று. நம்பவே முடியல.. என்ன கொடுமை இது 

ஒரு குத்து மதிப்பு தான் இது :)


Years Terms Subjects Total exams
yr 1- yr 5 5 3 3 45
yr5 2
yr6- yr11 6 3 8 144
O/L 8
yr 12- yr 13 2.5 3 4 30
A/L 4
233
Uni
yr 1 12
yr 2 12
yr3 12
yr 4 12
48
96
329
இதை விட, தனியார் கல்வி நிலையத்தில், நம்மட வேலாயுதம் ஆசிரியரின் மணிக்  கல்வி நிலையத்தில் வாரம் ஒரு முறை கணித பரீட்சை. யப்பா.. நினைக்கவே ஏதோ செய்யுது.

எத்தனை பரீட்சைகள் எழுதுறம் என்பது முக்கியமில்லை, ஒவ்வொரு பரீட்சையையும் எப்புடி சமாளிச்சம் என்பதுதான் முக்கியம்.

இன்னும் science ஹால் இல் படிக்கும் போது இந்த வாத்தியார், அந்த வாத்தியார் என்று ஓடோடிப்படிச்சதால அவையின்ற பரீட்சை, இவையின்ற பரீட்சை  என்று உப்பிடியே ஒரு கணக்கு வழக்கு இல்லாம எழுதி இருக்கிறோம் !!

பரீட்சைகள் என்று வந்து விட்டாலே வீடுகளில் பிள்ளைகளும், பெற்றோரும் படும் பாடுதான் என்ன. கொஞ்சம் சுவையாக.......


  • சில வீடுகளில் பிள்ளைகள்   படிக்கவில்லை என்று அடி போட்டு படிக்க பண்ணுங்கள் !! இது நல்ல அப்பா அம்மா மார் உள்ள குடும்பம்.
  • இன்னும் சில வீடுகளில், பெற்றோர் தங்கள் பாடு, பொடி பொட்டை தங்க பாடு !!! என்னத்தை சொல்ல..
  • இன்னும் சில வீடுகளில் (குறிப்பாக தங்கள் பிள்ளைகளை பற்றி அடுத்தவர்களுக்கு புளுகி வைப்போர் )," டேய் தம்பி நான் உனக்கு  டாக்டர் இற்கு படிக்க  கிடைக்கும் என்று எல்லாருக்கும் சொல்லிபோட்டன் , எழும்பி படியன!!,  ..முடியல..
  • இன்னும் சில வீடுகளில் பெற்றோரும், பிள்ளைகளும் படிப்பார்கள். இது பல வீடுகளில் நடப்பது..
  • இதிலும் சிலர் விழுந்தாலும் மீசையில மண் புரளாத மாதிரி, அது தம்பி செய்தவன் பேப்பர் கஷ்டமாம். அவனுக்கு அடுத்த முறை இன்ஜினியரிங் கிடைக்குமாம். பிறகு கொஞ்ச நாள் போக, தம்பி இங்க இன்ஜினியரிங் செய்ய விருப்பமில்லை என்குறார் அதால அவர் லண்டன் போய் படிக்க போறாராம். நாங்களும் ஒரு ஏழு பரப்பு காணியை விக்க போறம். ( இதுக்கு ஊர் சனம் கதைக்கும்: இவரு இங்க அம்மா அப்பா  தண்ட சோத்தில படிக்க ஏலாதவர் லண்டன் போய்.. படிக்க போறாராம்.. இமம் )- இது தான் இப்போ நடக்குது.... பல இடங்களில் ... 
இப்படி எல்லாம் பல பம்பல்களை காணலாம்.
நான் உயர்தரம், படிக்கும் போதும் சரி, சாதாரண தரம் படிக்கும் போதும் சரி இரவு ஒன்பது மணிக்கு போத்து கட்டிக்கொண்டு படுத்திடுவன். பிறகு அதிகாலை இரண்டு மணி இக்கு ஒருக்கா எழும்பி பார்க்கிறது கள நிலவரம் எப்படி என்று. Alarm ஐ மீண்டும் அதி காலை மூன்று மணிக்கு சரி செய்து போட்டு படுப்பேன், கடைசியாக நான்கு மணிக்கு எழும்பி படிக்க ஆரம்பிப்பேன். ஏதோ வில்லங்கத்துக்கு படிக்கிற மாதிரி இருக்கும், ஏழு மணி மட்டும் படித்து போட்டு திரும்ப நித்திரை.  இப்படியே ஒரு மாதிரி படிச்சு உயர்தரமும் பாஸ் பண்ணி பல்கலைக்கழகம் சென்றடைந்தேன்.
பல்கலையில், புது முகங்கள், புது இடம். இருந்தாலும், எனது நண்பர்கள், அறை நண்பர்களைக்கேட்டால் தெரியும், அதிகாலை இரண்டு மணி ஒரு  alarm அடிக்கவே எழும்பி படிக்க தொடங்கிடுவேன். காலை ஏழுமணி வரை , அறை நண்பர்கள் எழும்பும் வரை படித்து போட்டு படுப்பேன். இப்படித்தான் படித்து பட்டமும் பெற்றேன்.

உயர்கல்வி நிமித்தம் வெளி நாட்டில் இருந்த சமயம், தினமும் நித்திரை, ஓய்வு   இவையாவும்  மூன்று தொடக்கம் நாக்கு மணித்தியாலயங்களே.  முகவலைக்கு அடிமை, farm ville  விளையாடுதல்  போன்றன மனதில் இருந்த அழுத்தங்களை குறைக்க உதவின. அதிலும் விசேடமாக வலைப்பதிவில்  மொக்கை எழுதுதலும் ஒரு வகை அழுத்தத்தை குறைத்து வைக்க உதவியது.

 எப்புடி எல்லாம் விளம்பரம் போடுறாங்கள். (பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு போகும் படிக்கட்டில் கண்டது... அதாலே சுட்டது..

பரீட்சைக்கு படிக்கும் போது , பல விதமான அழுத்தங்களுக்கு இப்போதைய மாணவ சமுதாயம் உள்ளாகின்றது. இதற்கு ஒரு சில காரணங்களை உதாரணமாய் கூறலாம்.

  1. சக நண்பர்களுக்கிடையே நடக்கும் போட்டி , குறிப்பாக பல்கலை பிரவேசம். அண்மையில் நான், எனது நண்பரின் வீட்டுக்கு சென்ற போது, பிள்ளை medicine கிடைக்கும் என்று படித்து , கிடைக்காததால் மன அழுத்தமடைந்து இருப்பதாக  கூறினார். ஒன்று இல்லாட்டி மற்றொன்று என்ற மனப்பான்மையை வளர்த்து கொள்ளல் வேண்டும். எல்லாம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை . இல்லையா.. நண்பர்களே..
  2. அண்மையில் ஒரு பிரபல்ய வைத்தியரின் மகள் தற்கொலைக்கு முயற்சித்தமை. மகளுக்கு என்ன வயது தெரியுமா. ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் எழுதும் வயதுதான். இங்கவும் போட்டி தான் காரணம். இன்னொரு இடத்தில் இதே போன்ற சம்பவத்தில் அந்த சிறுமி, அழுத்தத்தில் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவமும் இடம் பெற்றுள்ளது. இதுக்கெல்லாம் பெற்றோரும் காரணம் தான். பக்கத்து வீட்டு  பெற்றோரின் மகள் ஐந்து இடத்துக்கு படிக்க போறதாலே, தங்கள் பிள்ளையை  ஆறு இடத்துக்கு அனுப்பி படிப்பித்தல் போன்ற துன்ப சம்பவங்களும் இடம்பெற்று கொண்டுதான் உள்ளது.  பிள்ளைக்கு படிச்சதை  திருப்பி படிக்க நேரமில்லை தானே. 
  3. போலி விளம்பரங்கள் மூலம் மாணவர்களை கவரும் நிறுவனங்களும் உள்ளன. மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டு தான் உள்ளனர். உதாரணமாக அண்மையில்  உயர்தர  IT  பரீட்சையில் பலர் fail  இற்கு  காரணம் ஒரு வித போலி விளம்பரங்களே. ஒரு பிரபல்ய கணணி நிறுவனம் விளம்பரத்தில் , தங்களிடம் படித்த இருபது பெயரின் புகைப்படங்களை போட்டு , அம்மாணவர்கள், அந்த கணணி நிறுவனத்தை புகழ்ந்து பாடி இருந்தனர் . அடுத்த நாள் பலர் அங்கே தங்கள் பணத்தை கொண்டே போட்டு இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. 
  4. இவ்வவளவு  ஏன், மாணவர்கள் தாங்களே மூன்று இடத்துக்கு ஒரே பாடத்துக்கு போகுதல். எனக்கு தெரிந்த பலர் இதைதான் உயர்தரத்தில் செய்தார்கள். இன்னும் பலர் இப்பவும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  ஒரு இடத்தில் திருப்தியுடன் படித்தால் இலகுவில் பரீட்சையில் சித்தியடையலாம். 
  5. ஒரு சிலர், குடி ,கூத்து , விளையாட்டு என்று பல வேலைகளில் ஈடு பட்டு போட்டு இறுதியில் மன அழுத்தம் , பயம் காரணமாக medical கொடுத்து போட்டு அடுத்த வருஷம் எழுதுவம் என்று இருப்பார்கள். மகா மொக்கர்கள் இவர்களே. ஒழுங்கா படிச்சா ஏனிந்த தொல்லை.  அடுத்த வருஷம் என்ன நடக்கும் என்று இப்ப எப்படி சொல்லுறது?? 
  6. இன்னும் சிலர் ஒரு தலைக்காதல் , காதலி என்று வருஷம் முழுக்க திரிந்து போட்டு பரீட்சைக்கு முதல் நாள் புழுதி பிடித்து கிடந்த புஸ்தகத்தை திறந்தால் என்னென்று தான் பாஸ் பண்ணுறது. கையில் வருவது நியாயம் தானே ..:)
பரீட்சைக்கு தயார் படுத்தும் போது, ஒரு நேர அட்டவனையை தயார் படுத்தி அதற்கு ஏற்ப இயங்கினால் இந்த அழுத்தங்களில் இருந்து மீளலாம். அத்துடன் அன்றே படித்ததை அன்றே படித்தல், விளங்காததை ஆசிரியரிடம் அல்லது நண்பனிடம்  கேட்டு படித்தல், என்பனவும் அழுத்தத்தை குறைக்கும் வழிகள்.
ஒரு சிலர் புகைத்து புகைத்து படிப்பார்கள்.  புகைப்பதால் அழுத்தங்கள் குறையுமோ  எனக்கு தெரியாது. ஆனால் குடித்தால், புகைத்தல் ஆகியவற்றின் விளைவால் புற்று நோய் தான் வருமென்பதை அவர்கள் அறியாதவர்களும் அல்ல.

அண்மையில், எனது மாணவரகள்,  11 பேர், பரீட்சைக்கு போகாமல்  medical குடுத்த சம்பவமும் இடம் பெற்றது. இதற்கு நேரடியாக உள்ள காரணமாய் நான் சொல்வது, பயம் தான் காரணம். வாழ்கையில் பயம் இருக்கணும். வாழ்கையே பயம் ஆயிட கூடாது !!
பரீட்சை என்றால் சும்மா அதிருதில்ல.. !!!

2010-10-02

கொட்டும் மழையிலும் புரட்டாதிச்சனி

சனீஸ்வரன், இருக்கிற ஒன்பது (நவ )கிரகங்களில் கொஞ்சம் பிரபல்யமானவர். ஒருவரது வாழ்க்கையில் இந்த சனியின் ஆக்கிரமிப்பு எப்படியும்  இருந்தே ஆகும்.


குறிப்பாக பிறக்கும் நட்சத்திரத்தில் தோஷம்( 4 இல் சனி ,  7 இல் சனி ...)  , இதை விட பிறக்கும் போது சனி - பகை யாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் சனியை வழிபாடு செய்வார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் எள்ளு எண்ணெய் எரித்து வழிபடுவார்கள். சிலர் விரதமும் இருப்பார்கள். இது வாழ்க்கை முழுக்க செய்ய வேண்டி இருக்கும். என்ன கொடுமை சனியன் இது.


இதை விட,  சனிப்பெயர்ச்சி நடைபெறும் போது , பெரும்பாலும் ஏழரைச்சனியன் , சனி எட்டாம் இடத்தில் வரும் போது அட்டமத்து சனியன் என்று ஒவ்வொருவரும் இந்த இரண்டையும்  தங்கள் வாழ்கையில் எப்படியும் சந்தித்தே ஆக  வேண்டி இருக்கும்.


ஏழரைச்சனியன்-  வந்துவிட்டால் ஏழரை ஆண்டுகள் சனியன் தான். பெரும்பாலும் O/L , A/L படிக்கும் போது பலருக்கு ஆப்பு வைக்க என்று வரும். ஒரு சிலர்  இதெல்லாம் தப்பி வந்தாலும், இருபதுகளில் வந்தால் திருமண தடை, குடும்பத்தில் பிரச்சினை , செலவு,உடல் நோய் , உடல் மெலிவு  என்று எல்லாம் போட்டு தாக்கும் பலம் கொண்டவர் இவர்.

ஏழரை ஆண்டை, ஒவ்வொரு இரண்டரை ஆண்டாக பிரித்து,  இடங்கள் மாறும்போது, அல்லது வக்கரிக்கும் போது , அவரவருக்கு நல்ல மற்றும் கெட்ட பலனை குடுப்பார் இந்த சனியன். அதால தான் சனம் சொல்லுறதுகள், ஆரம்பத்தில கஷ்டமும் பிறகு நல்லதையும் அல்லது முதலில் நல்லதும் பிறகு கஷ்டத்தையும் குடுப்பார் என்று.
சிலருக்கு ஏழரை ஆண்டும் கஷ்டம் தான்.
சொன்னால் போல , எனக்கு A/L  படிக்க தொடங்கும் போது, அதாவது  1995 இல் வந்த சனியன் பல்கலையில் மூன்றாம் ஆண்டு முடிக்கும் மட்டும் தொடர் ஆப்பு தான்.  பல்கலை செல்ல வைத்தது ஒன்றை தவிர மற்றது எல்லாம் பெரிய ஆப்பு தான். அடிக்கடி குளிரால்  உடல் சுகவீனம், செலவு , எல்லாத்திலும் வெறுப்பு என்று எல்லாம் வந்து ஆட்டி படைத்தது விட்டு போனது.


ஒரு ராசியில் சராசரியாக 2 1/2 வருடங்கள் சஞ்சரிக்கும் சனி பகவான், 12 ராசிகளையும் (அதாவது சூரிய பகவானை) சுற்றி வர சராசரியாக இருபத்தொன்பதரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.


ஒருவரின் வாழ்கையில் ஏழரைச்  சனியன் மூன்று தடவைகள் வரும் என்பது ஐவீகம். முதல் ஏழரை நாட்டுச் சனி சஞ்சாரத்தை "மங்கு சனி' என்றும், இரண்டாம் சுற்றுக்குப் "பொங்கு சனி' என்றும், மூன்றாம் சுற்றுக்கு "மரண சனி' என்றும் பெயர் வைத்து அழைக்கிறார்கள். இதற்காக மூன்றாவது சுற்று ஏழரைச் சனி நடப்பவர்கள் அனைவருமே இறந்துவிடுவார்கள் என நினைப்பது பேதமை.  எனக்கு தெரிந்த பலர் மரண சனியில் மண்டையை போட்டும் உள்ளனர். இன்னும் சிலர் இன்னமும் வாழ்கின்றனர். இதுக்கு எல்லாம் விளக்கம் சொல்ல நான் கடவுள் இல்லை. 

 வாழ்கையின் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல பொங்கு சனி கூடுதலாக உதவுவார் என்று சொல்லும் வழமையும் உள்ளது.




அட்டமத்து சனியன்: னியன் எட்டாம் இடத்துக்கு வரும் போது வருவது தான் இந்த சனியன். இவர் பெரும்பாலும் பெரிய ஆப்பை தான் போடுவார். எல்லாம் நன்மைக்கே என்று கொள்ள வேண்டியது தான். அதுவும் பிறப்பில் சனி தோஷம் இருக்கிறவைக்கு தொடர்  ஆப்பு தான். 

இவ்வளவும்  எழுதுறது என்னுடைய , நண்பர்களின் அனுபவங்களில் தான். 

இப்படிப்பட்ட பெரிய வில்லன் சனீஸ்வரனை நாங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிபட்டால் மிகவும் நல்லது. 

இப்படித்தான் சனியை வர்ணிப்பர் "குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?', சனியன் குடுத்தால் குடுத்து கொண்டே இருப்பார். எங்கட பாசையில் வஞ்சகமில்லாமல் குடுப்பார்.

சனீஸ்வரனை  நோக்கி பாடும் தோத்திரம் இதுதான்.

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா! தா!

புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில், அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும்,  சிவன் அல்லது விஷ்ணு ஆலயத்தில் உள்ள நவக்கிரகங்களுக்கு எள்ளு எண்ணெய் எரித்து ,அர்ச்சனை  செய்து வழிபட்டால் சனீஸ்வரனின் கொடுமை குறையும் என்பது வரலாறு. 

இது குறிஞ்சிக்குமரன் கும்பாபிஷேகம் நேரம் , விக்கிரகங்களை பிரட்டும் போது சனியை பிரட்டி தர தூக்கிட்டு போனது. :)

சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். அடுத்தமுறை போகும் போது கொஞ்சம் உத்து பாருங்க. வடிவா தெரியும். சனீஸ்வரன் சூரியனுக்கு பின்னால் இருப்பவர். சொன்னால் போல சூரியன் நடுவில இருப்பார். குறிப்பாக கறுப்பாடை அணிந்து செல்லுதல் வழமை. எல்லாமே பழசுகள் சொன்னது. 


 இதிலும் புரட்டாதியில் நவராத்திரி வருவதால், நவராத்திரி காலங்களில் வரும் சனிக்கிழமைகளில்  எள்ளு எண்ணெய் எரித்தல் கூடாது. வீடுகளில் கும்பம் வைப்பதால் அது தடை.  இந்த முறையும் வருகின்ற வெள்ளிக்கிழமை நவராத்திரி தொடங்குவதால் அடுத்த சனிக்கிழமை எள்ளெண்ணை எரிக்க பலர் விரும்ப மாட்டார்கள். ஆதலால்,  இந்த சனிக்கிழமை தான் கடைசிக் கிழமை ( புரட்டாதி சனி  ). 

 

கோவில் எல்லாம் சனமோ சனம். ஊரோடு எல்லாமே வந்துட்டுதுகள். சனியன் கன பேருக்கு இருக்கு என்று தெரிந்து கொண்டேன் இன்று. அவரவர் வந்து எரித்தால் தான் அவரவர் அப்பலனை பெறுவார்கள் . இதுவும் வரலாறு. அதால வீடுகளில்  உள்ள பழசுகள், இளசுகள் , பிகர்கள் என்று கோவில் நிரம்பி வழிந்தது .

தம்பி இவ்வளவும் பேசுறீர், நீர் என்ன ம.................... அங்க போனனீர் என்று கேட்பியள் ; எனக்கு தெரியும் .

காரணம் 1 : ஏழரைச்சனியன் எனக்கு இருந்த காலத்தில் ஒவ்வொரு சனியும் நான் கோவிலுக்கு போய் சனீஸ்வரனை வழிபடல் வழமை.  முடிஞ்ச பிறகும் அதை தொடர்ந்தேன். சனிக்கிழமை மரக்கறி உண்ணும் நாள் !!!

 காரணம் 2 : கொழும்புக்கு வெளியே வேலை செய்வதால், அந்தப்பகுதியில்  கோவில் செல்லும் வழமை குறைவு.  இடைக்கிடை செவ்வாய்க்கிழமைகளில் சென்று வருவேன்.  வார இறுதி நாட்களில், கொழும்பில்,  நண்பர்களுடன் சேர்ந்து, பெரும்பாலும் சனி காலை கோவில் செல்வது வழமை.  அதுவும் கதிரேசன் கோவில்தான்.

 காரணம் 3 : அம்மா, கொழும்பில் பொன்னம்பலவானேஸ்வரம் கோவில் மட்டும் சென்று வழிபடுபவர். மற்ற கோவில்களுக்கு போறது இல்லை. இது எல்லாத்துக்கும்  சேர்த்து நான் தான் போறது. 

 

 சரி  விஷயத்துக்கு வருவம். இன்று எள்ளு எண்ணெய் எரிக்க சட்டி வாங்க ஒரு பெரிய வரிசை. கொட்டும் மழையோ மழை. இடி முழக்கம் , மின்னல் வேறு. எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு சனம் நீண்ட வரிசையில்.  நீண்ட நேரம் நின்று ஒருமாதிரி கவுண்டருக்கு கிட்ட போயாச்சு. எனக்கு முன்னுக்கு, ஒரு ஐம்பது வயசு மதிக்க தக்க அம்மா ஒருவ நின்றவ. அவ கவுண்டரில் நிண்ட தம்பியிட்ட, தம்பி எனக்கு ஒரேடியா ஐஞ்சு சட்டி  எரிக்கனும். பிள்ளை குட்டிகள் எல்லாம் வகுப்புகளுக்கு போட்டுது. மனிசன் வேலைக்கு போட்டார். அதால நான்தான் வந்து இருக்கன் என்று சொல்லி,       30* 5  பெறுமதியான சட்டிகளை வாங்கி கொண்டு போனவ. பின்னால நின்ற என்னை பார்த்து தம்பி உமக்கு எத்தனை சட்டி , .. எனக்கு ஒரு சட்டி போதும் என்று விழுந்தடிச்சு சொல்லி,  வாங்கி எரித்து போட்டு வந்தேன். சில பேர் ஒரேடியா பல சட்டிகளை எரித்தா, கூட அருள் புரிவார் சனீஸ்வரன் என்று நினைத்தார்களோ தெரியாது. ஒரு தட்டில் பத்து பதினைஞ்சு என்றெல்லாம் ஏற்றி எரித்ததை காணக்கூடியதாக இருந்தது.

சந்தேகம் :உதில இந்த முறை சனியன் பிடிச்சு நிக்குறவை, கோவில் பக்கம்  இனி அடுத்த வருஷம் புரட்டாதி சனிக்கோ , அல்லது இப்போதைக்கு இனி கோவில் பக்கம் வாறது இல்லையோ,

கடமைக்கு எரிப்பவர்களும் உள்ளார்கள் !!!

இது  எல்லாமே சனீஸ்வரனுக்கு தான் வெளிச்சம். !!!



2010-09-30

எந்திரன் ஒரு மந்திரன் ,தந்திரன், the MASS

முற்றிலும் வித்தியாசமான படம் எந்திரன். அது தான் நிஜம்.
வி ஐ பி ஷோ பார்க்க கிடைத்தது.  எனக்கு இதனை பெற்று தர உதவிய விமல் மற்றும் லோஷனுக்கு நன்றிகள்.  
நான் இங்கு படம் விமர்சனம் செய்யவில்லை. என்னுடைய பார்வையில், எந்திரன் எப்புடி என்பததுதான்...

ரஜனி படங்களில் ரஜனியின் ஸ்டைலில் உள்ள ஆரம்பம் போலில்லாமல், வித்தியாசமாய், ரஜனி ரோபோ தயாரிக்கும் ஆய்வு கூடத்தில் கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பது போல,  சங்கர் கல  கலப்பில்லாத    ஆரம்பத்தை வழங்கியிருந்தார்.

எழுத்தோட்டம் தொடங்கும் போதே புதிய மனிதா பாடல் முதல் பகுதி,  விஞ்ஞானியாக வரும் ரஜனி வசீ என்னும் பெயரில் படம் முழுக்க வலம் வருகின்றார்.  ஆரம்பமே கிராபிக்ஸ் மூலம் ரோபோவின் இயக்கங்களை காட்டி கொஞ்சம் வித்தியாசமான வரவேற்பை பெற முயற்சித்து உள்ளார் சங்கர். அதிலும் வெற்றி தான் அவருக்கு.


சிட்டி ரஜனி ரோபோவின் பெயர். அது படத்தின் ஆரம்பத்தில் இருந்தே குறும்புகள்தான் செய்யும். உணவு தயாரித்தல், ஐஸின் அறையை துப்பரவு செய்தல் எல்லாமே வரவேற்க தக்க காட்சிகள்.
குறிப்பாக ஐஸுடன் ஒரு நாளிரவு இருந்து பரீட்சைக்கு உதவி செய்யும் ரோபோவின் குறும்புகள் தான் எத்தனை.  அதிலும் விசேடமாக ஆத்தா காமெடி சூப்பர். படத்தை பாருங்கள், இந்த காட்சிகளை  இரசியுங்கள்.  அதிலும் காலேஜ் professor இடம்  ஐஸை மாட்டி விடும் காட்சி இரசிக்கத்தக்கது.

பொய் பேசத்  தெரியாத  சிட்டி , பொய் பேசும் கருணாசையும் , சந்தானத்தையும் படுத்தும் பாடுகள் நல்ல நகைச்சுவையாகவும் சிரிக்க கூடியனவாகவும் இருந்தன.  குறிப்பாக தண்ணி அடிக்கும் காட்சி சூப்பர் காமெடி. கொஞ்சம் கூட காமெடி இருந்திருக்கலாம்.

ஐசு இன்றும் உன்னழகு மாறவில்லை. உன் புன் சிரிப்பு இன்றும் அன்றும் என்றும் அதுவே தான்.  அழகுக்கு ஐசு என்று இன்னொரு பெயர் இருக்கு என்று உறுதிபடுத்தி கொண்டேன் மீண்டும் இன்று தான்.


ரஜனியின் ஸ்டைல் அழகு, குரல், நடை எப்படி இருந்திச்சோ , அதுவும் அப்படியே இருக்கு.

பாடல்கள் அனைத்தும் சூப்பர் .. காணொளியுடன் கூடி இருப்பதால் இன்னும்  மெகா கிட் ஆகுமென்பதில் ஐயமில்லை. விசேடமாக காட்சியமைப்புகள் எல்லாமே சூப்பர். கண்ணுக்கு குளிர்ச்சி தரும் விதத்தில் அமைந்திருந்தன.
 

ஆங்காங்கே ஐசும் தனது படு கவர்ச்சியை , குறிப்பாக மார்பக கவர்ச்சியை அள்ளி வழங்கி இருந்தமை , திரையரங்கில் அடிச்ச விசில்களுக்கு ஒரு காரணம்.

ஐஸை காப்பாத்தும் ரோபோவின் சண்டை காட்சிகள் பிரமாதம். ஒரு நிஜ கீரோ வைப்போல் ஐஸை வில்லன்களிடம் இருந்து காப்பாத்துகின்ற ரோபோ நீ வாழ்க. திரையரங்கு அதிர்ந்த வண்ணம் இருந்தது. ரகுமானின் பின்னிசையால்.:)


கலாபவன் மணி , ஐசு ஒரு நாள் காதல் காட்சியில் பலரும் எதிர்பார்த்ததை சங்கர் நிறைவேற்றி வைக்க வில்லை போல!!! அதுக்கும் விசிலும்  கூச்சலுமாய் இருந்திச்சு.
அந்த காட்சியில் ஐஸை பார்த்த ரசிகன் ஒருந்தன், ஏதோ கெட்ட வார்த்தை மூலம் ஐஸின் கவர்ச்சியை வர்ணித்ததை , கடும் விசிலுக்கும் மத்தியில் கேட்க கூடியதாக இருந்தது. வேறென்ன முன்னர் சொன்ன மார்பக கவர்ச்சியை தான் :)

படத்தில் ரகுமான் இசையை சொல்லத்தேவை இல்லை , திரையரங்கு அதிர்ந்த வண்ணம் தான் இருந்திச்சு.  காட்சியமைப்புகள் சூப்பர். ரோபோவின் விஞ்ஞான ஆய்வு கூடம், கணனிகளில் வரும் மென்பொருள் வர்ணனைகள், மென்பொருளில் செயல்பாடுகள் (commands) இயங்கும் விதங்கள் எல்லாமே சூப்பராக படமாக்கப்பட்டுள்ளது.


இராணுவத்துக்கு ரோபோவை வழங்கி , அதன் மூலம் எதிரிகளை அழிக்க வேண்டும் என்பதே விஞ்ஞானி ரஜனியின் நோக்கம். ஆனால் வில்லனாக வரும் Danny Denzongpa   அதாவது போரா, ரஜனி பயன்படுத்தும் விஞ்ஞான தகவல்களை பெற்று அதன் மூலம் பெறும் லாபத்தை ஏற்படுத்திகொள்ளாலாம் என்பது அவர் தியானம்.
நேர காலம் இப்படி வருகின்றது : ஒரு கட்டத்தில் ரோபோவான ரஜினிக்கு மனித உணர்ச்சிகளான காதல், துரோகம், வெறுப்பு முதலியன இல்லை அதனால் இதனை இராணுவத்தில் பயன் படுத்த முடியாது என முடிவாகி விடுகிறது.
அப்போதுதான் ரஜனி , சிட்டிக்கு  மனித உணர்ச்சிகளான காதல், துரோகம், வெறுப்பு முதலியன வற்றை புகுத்துகின்றார். ஐஸுடன் காதல் டுயட் கூட. 
அதன் பயன்  ரோபோவான ரஜினிக்கு மனித உணர்ச்சிகளான காதல், துரோகம், வெறுப்பு முதலியன வரத் துவங்குகின்றன. அதாவது ஐஸ்வர்யா மீது காதலும் அதனால், தன் தந்தையான விஞ்ஞானி ரஜினி மீது வெறுப்பும் சேர்கிறது. இதனால் கோவம் கொண்ட ரஜனி, சிட்டியை அடித்து உடைத்து குப்பைக்குள் போட்டு விடுகின்றார்.  இதனை வில்லனான போரா கேள்விபட்டு, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்.



                             பாருங்கள். பொய்யா சொல்லுறம்..  நிரம்பி வழியும் ரசிகர்கள் ..

ரஜினிக்கு துரோகம் செய்யும் விதமாகவும், அத்துடன்   நாட்டின் அழிவுகளுக்கு ரோபோ ரஜினியை பயன்படுத்தத் துவங்குகிறார் வில்லன். மென்பொருள் ஏற்றபட்டு அழித்தல் ரஜனி ரோபோ தயாராகின்றது. அழிவுகள் தொடங்குகின்றது.
ரஜனி ,ஐஸ்வர்யா திருமணத்தை குழப்புவதன் மூலம் ரோபோ ரஜனியின் வில்லத்தனம் வெளியில் வருகின்றது.  ரஜனி வில்லன் பாத்திரம் ஏற்று நடித்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையில் நினைத்ததை விட  ரோபோ வியப்பூட்டும் வகையில், செய்கின்றது. கொஞ்சம் ஹோலிவூட் புகுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் ரஜனி, வில்லன் ரோல் செய்த  படங்களில் இதுதான் பெஸ்ட்.

சாபுசிரிலின் கலை, செட்ஸ் அனைத்தும் அசத்தல்.ஒரு படி மேலாக  ரத்னவேலு தன் கேமராவுக்குள் இவற்றை எல்லாம் கொண்டு வந்து எங்களுக்கு படம் பிடித்து காட்டியுள்ளமை வரவேற்க தக்கது. வாழ்க !!!அடுத்தது பீட்டர் ஹெயின். தங்களின் பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள் !!! தங்கள் பணியை செவ்வனே செய்து கொடுத்துள்ளீர்கள். வாழ்க !!!

 கிராபிக்ஸ் மூலம் தான் படத்தின்  இறுதிக்கட்ட காட்சிகள். வேறென்ன வழமை போல  சண்டை தான். ரஜனியுடன் அல்ல.  ரோபோவுக்கும் , ரோபோவை அழிக்க வரும் ரஜனி யுடன் கூடிய இராணுவம் மற்றும் போலீசுடன்.  ஐசும் , ரஜனியும் சேர்ந்து கணனிகளின் உதவியுடன் , வில்லன் மூலம் பதிவு செய்யப்பட்ட மென்பொருளை நீக்கி, பழைய ரோபோவை கொண்டுவருதல் தான் கிளைமாக்ஸ் இறுதிப்பாகம்  .

எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்திச்சு. துப்பாக்கி சூடுகள், சன்னங்கள் என்று ஒரே அமர்க்களம் தான்.  ட்ரான்ஸ் போமர் காட்சிகள் சிலவும் உள்ளடக்கம்.
 யுத்தத்தில் வெற்றி பெறுகின்றார் ரஜனி. நீதி மன்ற உத்தரவுக்கு ஏற்ப, ரோபோவை அழிகின்றார்கள். ஆனால் 2030 , இந்தியா   வல்லரசு  ஆகுமென்று கனவுடன் இருக்கும் ஆண்டு. அந்த ஆண்டில் எந்திரன் முக்கிய பாத்திரம் பெறுவான் என்ற ஒரு கருத்துடன் திரைப்படம் முடிவுக்கு வருகின்றது.  இதுதான் கதையும் எந்திரனும்.


சிலர் சொல்லலாம் எந்திரன் வேஸ்ட் என்று . கிராபிக்ஸ் கூட என்று .
அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி : நீங்க ஆவாதர் பார்ப்பீங்களாம் , spidar man பார்ப்பீங்களாம், அங்க முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தானே இருக்காம். பிறகு என்ன தமிழில் ஏதுமிருந்தால், அதுவும் கொஞ்சம்  தான்,  உங்களுக்கு குறை கண்டு பிடிக்கிறது. ஒருத்தன் தனது  முயற்சியை செய்ய விட மாட்டீங்களே???..
எழுதும் விமர்சனங்களின் ஆசிரியர்கள் ஒரு வேளை ரஜனியின் எதிராளியாக இருக்கலாம். பொய்யாக , திரிபுடன்,  நம்பும் படி எழுதாலாம். இதை எல்லாம் விட்டு போட்டு ஒருக்கா போய் பாருங்க, தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் ஆரம்பாச்சு என்று நீங்களும் சொல்லுவீங்க.


எல்லாப்புகழும் ரோபோ ரஜினிக்கே!!
வாழ்த்துக்கள் !!!

2010-09-28

எந்திரன் VIP ஷோ பார்ப்பது உறுதி

இந்திய திரையுலமே எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் மற்றுமொரு முக்கிய நாள் , அதுதான் அக்டோபர் ஒன்று. எல்லாரும் அறிந்த ஒரு செய்திதான், அதுதான் எந்திரன் திரைக்கு வருகின்றான்.

இயக்குனர் சங்கரின் கனவு நனவாகும் நாள். சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கனவு நனவாகும் நாள்.

 இலங்கையில் வி ஐ பி ஷோ முதல் நாள் இரவு காண்பிக்கப்படுகின்றது.  எப்படியாவது வழமை போல் வி ஐ பி காட்சியை பார்த்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அது அவ்வாறே அமைகின்றது.
ஏற்கனவே கொழும்பில் வி ஐ பி டிக்கட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

ODC 1750/= , பல்கனி: 2500/=

விலை கொஞ்சம் கூடத்தான். இருந்தாலும் வி ஐ பி ஆச்சே.. பார்த்திடுவோம்ல.
ரஜனியின் தீவிர ரசிகன்.  பல நண்பர்கள் என்னுடன் வாக்கு வாதம் செய்தார்கள்.
இப்படத்தை கலைஞர் சார்ந்த கூட்டம் தயாரித்ததால் , ஈழ மக்களின்  துரோகிகள் அவர்கள், அவர்களின் படத்தை பார்ப்பதா என்று.  நான் என்னுடைய பூரண விளக்கத்தை அளித்தேன். சின்னப்பிள்ளை தனமாய் இருக்கிறார்கள் என்றும் அவர்களைப்பார்த்து சொல்லியுள்ளேன். கோவப்படுபவர்கள் படட்டும். அதைப்பற்றி அதிகம் கவனம் கொள்ள விரும்பவில்லை.

உலகம் முழுக்க 2000  திரையரங்குகளில் திரையிடும் அளவுக்கு ஒரு படம் வந்துள்ளது என்றால் , அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பங்கு  உண்டு.  அவ்வளவுதான்.


 ஒஸ்லோவில் உள்ள கொலோசியத்தில் வி ஐ பி ஷோ 
எந்திரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

ஆகக்குறைந்தது 500 நாள் ஆவது ஓடும் என்பதில் ஐயமில்லை !!!

2010-09-26

எத்தனை முரட்டுக்காளைகள் வந்தாலும் சூப்பர் ஸ்டாரின் முரட்டுக்காளை தான் ஜெயிக்கும்

வார இறுதி நாட்களில் பெரிதாக தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைப்பதில்லை. வீட்டில் வேலைகள் பல இருக்கும். வீட்டு வேலைகளுக்கும்,நண்பர்களுடன் நேரத்தை போக்கல் என வார இறுதி நாட்களை ஒதுக்கி வைப்பது வழமை. வீட்டை சுத்தம் செய்தல், பொருட்கள் வாங்கல், கதிரேசன் கோவில் போகுதல் , நண்பர்களுடன் அரட்டை என்று இரண்டு நாட்களும் போய் விடும்.
வழமை போல் இம்முறையும் இவற்றை செய்தாலும் , கொழும்பில் சினுங்கிய படி இருந்த மழை, என்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வில்லை.

வீட்டில் செய்மதி வசதியுடன் கூடிய தொலைக்காட்சி. இருக்கிற தமிழ் சேவைகள் எல்லாமே நாள் முழுக்க சீரியல்களை ஒளி பரப்புவதால் எங்களை போன்ற இளசுகளுக்கு பார்க்க ஒன்றுமே இல்லை. இன்று சும்மா அங்க இங்க என்று மாத்தி மாத்தி பார்க்கும் போது , கொலைஞர் தொலைக்காட்சியில் முரட்டுக்காளை இறுவெட்டு வெளியீடு நடை பெற்றது.


அன்றைய காளை

சுந்தர் சி, சினேகா நடிக்கும் 'முரட்டுக்காளை' படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மீடியாஸ் தயாரிக்கின்றது. ஒரு பெரிய நிகழ்வாக ஒளி பரப்பிக்கொண்டு இருந்தது.

எனக்கு இந்த படம் எவ்வளவு கிட் ஆகுதோ தெரியாது. ஆனால் சுந்தர் சி ரஜனியை வைத்தும் படம் எடுத்துள்ளதால் , ஏதோ ஒரு விதத்தில் இப்படத்தையும் ரஜனிக்கு எடுப்பது போல் எடுக்க முயற்சி செய்து இருக்கலாம். இருந்தாலும் இவர் நடிகர் இங்கே. இருந்துதான் பார்ப்போமே. இயக்குனர் செல்வபாரதி என்னதான் செய்ய போறார் பார்ப்போமே.

என்னுடைய , ச்சே ச்சே பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜனியின் முரட்டுக்காளை பார்த்தவர்கள், எதிர்காலத்தில் எத்தனை முரட்டுக்காளைகளை பார்த்தாலும் , அந்த பழைய காளையே சூப்பர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சூப்பர் கிட் படம்.

'சூப்பர் ஸ்டார்' ரஜினி காந்த் நடிப்பில் 1980-ல் வெளியானது முரட்டுக்காளை.
http://en.wikipedia.org/wiki/Murattu_Kaalai_%281980_film%29

இப்படம் ரஜினியின் 64வது படம், தமிழ்த் திரையுலகில் அவருக்கு மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த, மாபெரும் வெற்றிப் படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அட்டகாசமான பாடல்கள்.

குறிப்பாக பொதுவாக என் மனசு தங்கம் , அந்த கால டப்பான் குத்து. மலேசியா வாசுதேவன் குரலில் ராஜா அங்கிள் இசையோ பிரமாதம்.
இன்றும் எழும்பி ஆடலாம். அப்படி ஒரு இசை. கிராமிய இசை.



பிடிச்ச வரிகள் :


பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலமிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே



இன்றைய காளை
இந்த தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜனி தான் , அவருக்கு இணை யாருமில்லை , அவர் நடித்த படங்களில் எத்தனை ரீ மேக்குகள் வந்தாலும் ஒரிஜினலை உடைக்கவும் ஏலாது. நான் அவரின் மிகப்பெரிய ரசிகன், யாவரும் அறிந்த ஒன்றே. ஒரிரு தினங்களில் எந்திரன் வி ஐ பி ஷோ இற்கு காத்து இருக்கின்றோம்.


2010-09-12

தமிழ் பின்னணி பாடகி சுவர்ணலதா இன்று காலமானார்

தமிழ் திரையுலகில் கடந்த மற்றும் இந்த வாரங்களில் இரண்டு மறைவுகள் நிகழ்ந்துள்ளன. கடந்த வாரம் நடிகர் முரளி , இன்று பாடகி சுவர்ணலதா.

1989-ம் ஆண்டு முதல் சினிமாவில் பாடி, ஒரு சில சூப்பர் கிட் பாடல்களுக்கு சொந்தக்காரியான சுவர்ணலதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



எனக்கு பிடித்த பாடல்கள்

தளபதி- அடி ராக்கம்மா கையைத்தட்டு
வள்ளி - என்னுள்ளே என்னுள்ளே
வீரா- மாடத்திலே கன்னி மாடத்திலே , மலைக்கோவில் வாசலிலே
தர்மதுரை- மாசி மாசம்



எவனோ ஒருவன் - அலை பாயுதே மாயா மச்சின்றா - இந்தியன் அஞ்சாதே ஜீவா - ஜோடி முக்காப்புலா - காதலன் போறாளே பொண்ணுத்தாயே- கருத்தம்மா பூங்காற்றிலே - உயிரே



சின்னத்தம்பி- போவோமா ஊர்கோலம் , நீ எங்கே
சத்ரியன் - மாலையில் யாரோடு
அமைதிப்படை - சொல்லிவிடு வெள்ளி நிலவே
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் - என்னை தொட்டு
செந்தமிழ் பாட்டு - காலையில் கேட்டது
பாட்டு வாத்தியார்- நீ தானே நாள்தோறும் நான் பாடும்
என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு


Related Posts Plugin for WordPress, Blogger...