2009-12-01

தமிழரின் தீப நாள் -கார்த்திகை தீபம்



(திருவண்ணாமலை அடி வாரம் )
இன்று கார்த்திகை தீபத்திருநாள். ஆலயங்களில் , வீடுகளில் எல்லாம் தீபம் ஏற்றி வழிபாடும் நாள்.

தீப வழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.

சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும் தீப வழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.

இந்தியாவில் வடக்கில் தீப வழிபாடு ‘தீபாவளி’ என்றும் , தெற்கே தீப வழிபாடு ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.


தீப தானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. தீப வழிபாட்டில் சிறப்பானது கார்த்திகை தீபம்.

கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது கார்த்திகை தீபம்.

தீப ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம் மூன்றையும்தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

”அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”

திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:

”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
– என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

இவை தீப வழிபாட்டின் முக்கியம் சொல்லும் புராணங்கள்.

குறிப்பு: அத்துடன் தீபாவளி ஆரிய திருநாள் என்றும் கார்த்திகை திருநாளே தமிழர் திருநாள் . இத்தனை முக்கியம் வாய்ந்த தமிழர் திருநாளான இந்த நாளில் எல்லோரும் தீபம் ஏற்றி இன்றைய கார்த்திகை தீப திருநாளை கொண்டாடுவோமாக.


இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று ,பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையின்( ஈசன் ஜோதிப் பிழம்பாய் நின்ற இடம் ) உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.


இத்தனை இன்று பெரும்பாலான இந்திய தமிழ் ஒளிபரப்புகள் நேரடியாக வர்ணனை செய்யும்.( முன்னர் ஜெயா தொலைக்காட்சி செய்த ஞாபகம் ). மிக பலத்த பாதுகாப்புடன் நிகழும் இந்த நிகழ்ச்சியை காண பலர் கூடுவர். மிக நீண்ட தூரத்துக்கு இந்த காட்சியை காணலாம்.

வாசித்தவற்றுள் பிடித்த கவிதை :

உகலமெல்லாம் தீப ஒளி பரவ
நல்லன எல்லாம் நடக்க
ஆளுவோர் மனம் மாற
மக்கள் நலமொன்றே நினைக்க
வீணாகும் தண்ணீரை சேமிக்க
அதன் மூலம் நல்ல வளம் பெருக
பொது ஜனமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க
வன்முறை ஒழிய
தீவிரவாதம் அழிய
எங்கும் அமைதி நிலவ
உலக மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ
இந்நன்னாளில் எங்கும் ஒளி பரவட்டும்
சாந்தி நிலவட்டும்
அதற்கு
ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...கார்த்திகை தீபம்!!!!!!!!!!!!!!!!!!!

"சொக்கப்பனை கொளுத்துதல்".

கோவிலுக்கு அருகே, திறந்த வெளியில், ஒரு காய்ந்த மரத்துண்டை (அனேகமாக பப்பாளி மரத்தண்டு- ஊரில் என்றால் , சிலவேளைகளில் பெரிய மூங்கில் தடி ) நிறுத்தி அதனைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகளைக் கட்டி வைப்பார்கள். ( கிடுகும் பயன்படும் )இதற்கு சொக்கப்பனை என்று பெயர். சாயங்காலப் பூஜை முடிந்து சுவாமி வீதி உலா வந்தபின்( சுட்டி விளக்கு தரும் ஒளியில் சுவாமி வருதல் கண் கொள்ளாக்காட்சி.) ( பெரும்பாலும் ஆறுமுகசாமியே வள்ளி சமேத தெய்வானை யுடன் வலம் வருவார் ), கோவில் எல்லாம் விளக்கேற்றிய பின்னர், கோவில்குருக்கள் வெளியே வந்து, சொக்கப்பனைக்கு தீபாராதனைக் காட்டி அதைக் கொளுத்தி விடுவார். பனை மட்டையில் தீ பிடித்ததும் படபடவென்று ஒசையுடன் வெடித்துக் கொண்டே கொழுந்து விட்டு எரியும். மிகப்பிரகாசமான ஒளியை தருவது மட்டும் இல்லாமல் தத்துவத்தையும் பொலிந்து இருக்கும் இந்த காட்சி. நம்மவர்கள் உப்பு போட்டு வெடிக்க வைத்து கேலியாகுவதுதான் வழமையான ஒன்றே.

சுருக்கமாய் சொன்னால் ,கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்.

தமிழ் சினிமா பாடல்கள் :-

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...