வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் சென்ற மாதமும் 19ம் திகதி தொடக்கம் 24ம் திகதி சனிக்கிழமை வரை கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டது
போரிட முன் சூரனின் விநாயாகர் வழிபாடு
இறுதி நாள் மாலை சூரன் போர் பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் களைகட்டும். குறிப்பாக முருகன் கோவில்களில் மக்கள் அலை மோத முருகன் சூரனுடன் போராடுவார்.
வரலாறு
அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப் பெருமானிடம் வேண்டுகோள் வைத்ததாகவும், முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கடற்கரையில், சூரபத்மனுடன் முருகப் பெருமான் போரிட்டு சூரனை வென்றதாகவும், முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு வென்றதை கந்த சஷ்டி விரதமாக பக்தர்கள் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபடுவதாகவும், சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை நிறைவேற்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
இது இவ்வாறு இருக்க .. எனக்கு தெரிந்த முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் பார்த்து இருந்தாலும், குறிப்பாக எனது பல்கலைக்காலங்களில் குன்றத்தில் உள்ள குறிஞ்சிக்குமரனில் கலந்து கொண்டு உடல் பயிற்சி செய்ததை நினைத்தால் எப்படா கெதியா தாயகம் சென்று மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்ற அவா தோன்றும்.
எனது அனுபவங்கள் ஒரு சில கதையம்சமும் , புகைப்பட தொகுப்பும் நிறைந்ததாக இங்கே வலம் வருகின்றது.
எங்கள் சூரன் சுமார் 4 அடி உயரம், பிதுங்கும் விழி, கையில் அம்பு வில்’ நீல நிறத்தில் ,அச்சுறுத்தும் பார்வையுடன் இருப்பார்.
தினமும் நாங்கள் முருகனை தூக்கி தூக்கி தோளில் வைத்து வீதி உலா வரும் இளம் சிங்கங்கள் அன்று மட்டும் எதிரியின் பக்கம்
சூரனை வழிப்படுத்தி முருகனுடன் போரிட செய்தல் எங்களின் கடமை.
மாலை நான்கு மணிக்கு சனம் வர தொடங்கும், பல்கலை மாணவர்கள் தவிர ஊரார் , விரதம் பிடிப்போர் என்று சனம் நிரம்பி வழியும்.
ஆரம்பமே அமர்க்களம் ..
சரியாக நான்கு மணி பிள்ளையார் பூசையுடன் சூரன் தன் படையணிகளுடன் தயாரகி விடுவான். எனக்கு தெரிந்த அளவில் தளபதிகள், பிராந்திய தளபதிகள், கட்டளை தளபதிகள் எல்லாம் முதலே திட்டங்களுடன் இருப்பதால் , இலகுவில் காலாட்படை , உளவறியும் படை, கிளைமோர் வைக்கும் படை என்று எல்லாம் பெயர் வைத்து இருக்கும் ஆட்களை வைத்து கொண்டு சூரன் போரை முன் நடத்த கூடி இருக்கும்.
ஒரு முறை உணர்ச்சி வசம் கொண்ட தோழர்கள்கள் வசந்த மண்டபத்துக்குள்ளேயே புகுந்து விட்டார்கள் சூரனுடன் . கோவில் குருக்களே பயந்து ஈடாடி போனார் :)
பெரும்பாலும் விரதம் பிடிப்போர், தொந்திகளுக்கு தொல்லை குடுக்காமல் இருப்போர் முருகனுடனையே நின்று கொள்ளவர்,
குறிப்பாக இந்தச் சூரன் சிங்கத்தலை,யானைத்தலை,எருமைத்தலை என பல தலைமாற்றங்கள்.
சூரன் ஆரம்பத்தில் யானை முகத்துடன் வந்து செய்யும் அட்டகாசமான நகர்வுகளை முருகன் நக்கலாக ;" என்ன சின்ன பிள்ளை தனமாய் இருக்கு என்று " பார்த்தாலும் , தொடரும் விறு விறுப்பான தாக்குதல் மூலம் முருகன் மட்டும் இல்லை பார்க்க வந்தவர்கள் சரி, குருக்கள் சரி திணறிபோடுவார்கள்.
முன்னுக்கு கொம்பு பிடிக்கும் என்னை போன்ற கொஞ்சம் உடம்பு மிக்கவர்கள் தங்கள் சாதுரியத்தை பாவித்து வேகமாக வந்து குதி அடிக்கும் ப்ரேக் சூரனை காவுறவர்கள் திக்கு முக்காடி போகும் அளவுக்கு அப்படி ஒரு கால் பிரேக். சட புட என்று அடிக்கும் வட்டம் , கீழே மேல என்று சடம் புடாம் என்று தூக்கி போட்டு கொண்டு பின்னுக்கு போகுதல் ,முன்னுக்கு வரல் , சடார் என்று எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி போதல் , எல்லாம் வியக்கும் ஆரம்பங்களே. இதிலும் இன்னொன்று ஒரு முறை கொம்பு பிடித்த நான் என்னை மீறி கொம்பு சென்றாதால் அருகில் உள்ள ரோஜா தோட்டத்துக்குள் தூக்கி எறியப்பட்ட சோகமான சம்பவங்களும் நடந்துள்ளது. எனக்கு மட்டும் இல்லை பலர் அப்படி மாட்டி உள்ளார்கள்.
களைப்பு என்பதற்கு இடமே இல்லை . போரை தோய்ய விடாமல் மாறி மாறி படையணிகளை சூரனுடன் அனுப்பி போரிடுதல் தான் எங்களை போன்ற மூத்த உறுப்பினர்களின் கடமை. ஆரம்பத்தில் ஒருக்கா களைத்தாலும் , பிறகு பழகி போடும்.
களைக்கும் தோழர்களுக்கு விசேடமாக குளிர் பானங்கள்,தேநீர், கோப்பி, வடை , பிஸ்கட் என்று சாராமாரியாக குடுத்து உற்சாக படுத்த எங்களின் சமையல் படையணி , பின் புலத்தில் இயங்கும்.
எல்லாத்திலும் பாராட்ட வேண்டிய ஒருவர் சூரனை இப்படி எல்லாம் நாங்கள் வதை செய்யும் போது சூரனின் தலையை ஆட்டும் மகான் , படும் அவலமோ சொல்ல முடியாது. இருந்தாலும் அவரின் வல்லமையால் எல்லாம் சமாளிப்பது( களத்தில்), அடுத்த நாள் அவருக்கு அதன் பலன் தெரியும் என்று நினைக்கின்றேன்:)
ஏறத்தாள ஒரு மணி கடும் போருக்கு மத்தியில் பிள்ளையாரடியில் முதலாவது தலை விழும்.
விசேடமாக தவில் பிடித்து அடிக்க வைப்பது எங்களை போன்றோருக்கு ஒரு ஆசை.
மேளம் சரி இல்லாட்டி போர் சூடு பிடிக்காது. தவில் அடிக்கும் அடியில் பொடியன்கள் சிறப்பாக செயல்படுவான்கள்.
கந்த சஸ்டி கூட ஒரு fast track அடிதான்.
நாங்கள் சினிமா பாடல்களுக்கு தடை அதனால் எல்லாமே முருகன் பாட்டு தான். அதுவும் ஒரு கிக்கு தான்
வீதி எங்கும் சனம் நிரம்பி வழிய அவர்களுக்கும் சூரன் சென்று பிரேக் போடுவதும் அவர்களை ஒருக்கா கத்த செய்வதும் சூரன் செய்யும் ரீங்கார சேஷ்டைகள். அதுவும் மழை பெய்யும். எங்களுக்கு சொல்லியா குடுக்கணும் அடிக்கும் பிரேக் சேறு எல்லாம் கொண்டே எல்லாரிலும் பிரள செய்து பார்த்து கொண்டு நிற்பவர்கள் எல்லாம் களத்தில் இறக்குவதே நோக்கம்.
இதை விட பொடியல் எல்லாம் வேட்டியும் சால்வையுமா நிக்கும் போது, பெண்கள் யார் எல்லாம் கட்டுடம்பு பொடியல் என்று என்று ஒரு ஓரக்கனாலே பார்ப்பதும் இந்த சூரன் போர் இல் தான்.
சிங்க தலையுடன் திரியும் சூரன் காட்டும் வித்தைகள் பல, சாரமாரியான வித்தைகள். விறு விறுப்பானது சூரனை தாங்கியவாறு முழங்காலில் நடப்பது , கடினமான ஒன்றாயினும் அந்த நேரம் எல்லாம் போர் மயமாய் இருக்கும் போது செய்துபோடுவார்கள்.
இதை விட ஹலோவீன் ஸ்டைல் இல் வெளிக்கிட்டு வந்த காட்டும் மாஜா ஜாலங்கள் பல. எல்லாமே புதுசா இருக்கும்.
இறுதியாக உள் வீதியில் நடக்கும் பாரிய முறியடிப்பு தாக்குதால் தான் நெருப்புடன் வந்து தாக்குதல். இது முதன் முறை செய்யும் போது முருகனை தூக்கி கொண்டு முன்னுக்கு நிண்ட விடலை பசங்கள் எல்லாருமே ஓடியே போட்டாங்கள் நெருப்புக்கு பயத்தில. இதில இருந்தே தெரியும் யார் எல்லாம் முருகன் பக்கம் இருப்பாங்கள் என்று. வாயுக்குள் மண்ணெண்ணெய் நிரப்பி பந்தத்துக்கு ஊதி நெருப்பால் முருகனை வெருட்டல். உண்மையில் அதை செய்த நம்மட நண்பன் துளசிக்கு வாழ்த்துக்கள். உண்மையாவே அதை செய்வது கடினம் அந்த டென்ஷன் இல் நெருப்பு பரவி வர வேணும். வியக்கும் வித்தைகள்..
108 தடவைகள் சூரனை தூக்கி எறிந்து பிடித்தல், தோளில் நண்பர்களை ஏற்றியவாறு அவர்களின் மேல் சூரன் ஓடி திரிதல், இன்னும் என்னை வியக்கசெய்தவை.
இடும் கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றும் தோழர்கள். நினைக்கவே மெய் மறக்குது.
மூலஸ்தானத்துக்கு முன்பாக கோபுர வாசலில் நடை பெறும், மலைக்குள் இருந்து பதுங்கி தாக்குதல், சேவல் , மயில் எல்லாம் இல்லாடியும் எல்லாம் கொடிகளே. இருக்கும். இருந்தாலும் விறு விறுப்பாக செய்து வைப்பதில் முருக அடியார்கள்.
வெளி வீதியில் நடக்கும் போரில் முதலில் மாமரக்கிளையுடனும் வருவார். அந்தக் கிளையில் தொங்கும் மாங்காய்க்கு நாங்கள் அலையா விட்டாலும் அந்த மாங்காய்க்கு, திருமணமான பெண்களிடமும், பலகாலம் குழந்தைப் பாக்கியமில்லாப் பெண்களிடமும் கேட்டால் சொல்வார்கள் இந்த மாங்காய் சாப்பிட்டால் குழந்தைப் பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை.அது நடந்ததாகக் கூடப் பலர் கூறக் கேட்டுள்ளேன்
அதற்கு பிறகு நடை பெறும் இறுதி யுத்தத்தில் 108 தடவைகள் வட்டம் அடித்தல் சொல்லி முடிக்க்க இயலாது, முடியும் கையேடு மாறி மாறி மூன்று தடைவைகள் அடிக்கும் வட்டம், கீழே மேலே தூக்கி போட்டவாறு ஓடி திரிதல் தண்ணி விசிறியவாறு அங்கேயும் இங்கேயும் ஓடுதல், என்று பல வித்தைகளை காட்டி இறுதியாக முருகனின் காலில் இரவு 9 மணியளவில் சரண். ஐந்து மணி நேரம் நடந்த உக்கிர சண்டை முற்றும்பெறும்.
இதற்குள் இவ்வளவு நடந்தும் தொடர்ந்து விஷேட அபிஷேகம் அன்று சொல்லி இரவு 11.30 மணி செல்லும்.
அதிகாலையில் பாறணை சமையல் (2002)
இடம் இருந்து வலம் தேவர், பிரியன், பத்மநிருபன், அரவிந்தன்
இதிலும் சுவரஷியம் என்னவென்றால், பலர் இரவு கோவிலில் தங்கி அதிகாலை நடை பெறும் பாறணை பூசையில் கலந்து கொள்வார்கள். இரவு முழுக்க இருந்து அடிக்கும் அரட்டை அதிகாலை 3 மணிக்கு நிறைவுக்கு வரும். நீராடி போட்டு சமையலில் ஈடுபட்டு காலை 6 மணிக்கு பாறணை தயார். பிறகு அந்த பூசைக்கு பின் விரதம் முறிப்பவர்கள், முறிக்க எங்களை போன்றவர்கள் நல்லா ஒரு பிடி பிடித்து போட்டு தூக்கம் கொள்ள சரி. பகல் மீண்டும் திருக்கல்யாண தயார் படுத்தல்கள். அது இன்னொரு பெரிய நீண்ட கதை.
எல்லாம் முடிய இரவு போய் அறையில் படுத்தால் சொர்க்கம் தெரியும், முந்த நாள் போட்ட ப்ரேக், சுழட்டி அடிச்ச வட்டம், தூக்கி எறிந்த ஏறி ...எல்லாவற்றின் பின் விளைவுகள் பல,
முதல் நாள் அடிச்ச ப்ரேக் அடையாளங்கள்
எல்லாம் நன்மைக்கே என்று போட்டு பனடோல் தேவையாயின் அதனையும் போட்டு போட்டு பல்கலை சென்ற வரலாறுகளும் இருக்கு.
இங்கே பகிரப்பட்ட படங்கள் என்னிடம் இருந்தவை, பலர் எங்களை போல செய்தார்கள், செய்கிறார்கள்,செய்வார்கள் அவர்களுக்கு எல்லாம் குறிஞ்சிக்குமரன் அருள் கட்டாயம் கிடைக்கும் என்று சொல்லி எனது அனுபவங்களை நிறைவு செய்கிறேன்.
4 comments:
அப்பப்பா என்ன வர்ணனை செய்து உங்கள் பதிவை மிகவும் அருமையாக இட்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! நிறைய எழுத வேண்டும்! யாராவது முந்திவிடுவார்களோ என்று இந்த முதல் இடுகை! பின்னர் வருகிறேன்!
ஐந்து வருடங்கள் நேரில் பார்த்து ரசித்ததை இங்கே வாசிக்கும் போது கண்கள் பனிக்கின்றன... நன்றி.
நன்றி முகுந்தன் தங்கள் வருகைக்கு.
//ஐந்து வருடங்கள் நேரில் பார்த்து ரசித்ததை இங்கே வாசிக்கும் போது கண்கள் பனிக்கின்றன... நன்றி.//
நன்றி அபிராமி
உண்மை நான் ஆறு வருடங்கள் தொடர்ந்து கலந்து கொண்டு விட்டு உயர் கல்வி நிமிர்த்தம் வெளி நாட்டில் இருப்பதால் கலந்து கொள்ளவில்லை என்ற கவலை தொடர்கிறது . அடுத்த வருடம் நாடு திரும்புவதால் கட்டாயம்மீண்டும் கலந்து கொள்வேன்.
எழுதுவதற்கு காரணம் நான் வசிக்கும் இடத்தில கூட ஒரு முருகன் கோவில் தான் உள்ளது . ஈழத்து தமிழர்கள் தான் அந்த கோவிலை பராமரிக்கின்றார்கள். அங்கு நடை பெற்ற சூரன் போரில் கலந்து கொண்டாலும் குறிஞ்சி அனுபவங்கள் மாதிரி இல்லை. அதுதான் ஒரு முறை மீட்டிபார்த்தேன்
நான் பேராதனைப் பலகலைக் கழ்கத்தில் படித்த காலங்களீல் ( 1960-19650 ) குறிஞ்சிக் குமரன்
கோவில் கட்டுப்படவில்லை.அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பித்திருந்தன
சூரன் போரை அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்
சுவராஸ்யமாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
மௌனகுரு
Post a Comment