2009-09-13

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2009 Sept -2011மேஷம் துணிச்சலான செயல்கள்

(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)


பொது: உங்கள் ராசிக்கு 10. 11-ஆம் இடங்களுக்குரிய சனி 6-ஆமிடத்திற்கு வந்திருக்கிறார். இது விசேடமான
மாற்றமாகும். எதிர்ப்புக்கள் விலகும். உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி
காணலாம். புதிய தொழிலில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக்கூடி வரும். இரக்க சுபாவம் கூடும். பேச்சாற்றல் பளிச்சிடும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி காணலாம். மற்றையோர் உங்களைப் போற்றுவார்கள். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேற வாய்ப்புக் கூடிவரும்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மக்கள் நலம் சீர்பெறும். மூத்த சகோதர, சகோதரிகளால் மன அமைதி கெடும். வாழ்க்கைத்துணைவரின் நலனுக்காகச் செலவு செய்ய நேரலாம். வேலையாட்கள் நல்லவிதமாக நடந்து கொள்வார்கள்.

பொருளாதார நிலை: 19-12-2009 முதல் குருபலம் கூடுவதால் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கடன் தொல்லை நிச்சயமாகக் குறையும். சேமிப்புப் பெருகும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும்.
கொடுக்கல்-வாங்கல் இனங்களில் அபிவிருத்தி காணலாம். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். 2011-ல் சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும்.

நிலபுலங்கள்: 2011-ல் புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.

தொழில்: சனி 6-ல் இருப்பதால் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். புதிய தொழில் துறைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டாகும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், தோல் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். விவசாயிகளுக்கு மகசூல் கூடும். தொழிலாளர்களது நிலை உயரும். ரியல் எஸ்டேட் இனங்கள்
லாபம் தரும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெற வாய்ப்புண்டாகும். சனி புதனுடைய வீட்டில் இருப்பதால் சொந்தமாக வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற இனங்
களால் ஆதாயம் கூடப் பெறலாம். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மறதி விலகி, ஞாபக சக்தி கூடும். தடை, தாமதங்கள் விலகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காணலாம்.

மாதர்களுக்கு: சிறுசிறு பிரச்னைகள் ஏற்படுமென்றாலும் சமாளித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் 1-5-2010 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9. எண் 8-ம் அதிர்ஷ்டம் தரும்.

திசை: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, மேற்கு.

தெய்வம்: முருகன்.

பரிகாரம்: குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதன் மூலம் நலம் கூடப் பெறலாம்.


=========================
ரிஷபம் பல வழிகளில் ஆதாயம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)


பொது: உங்கள் ராசிக்கு 4-ல் உலவிக் கொண்டிருந்த சனி 5-ஆமிடம் மாறுகிறார். கோசாரப்படி இது விசேடமாகாது என்றாலும் உங்கள் ராசிக்கு 9, 10-ஆம் இடங்களுக்குச் சனி அதிபதியாகி, யோக காரகன் ஆவதாலும், ராசிநாதன் சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நண்பர்களாவதாலும், சனி தன் நட்புக் கிரகமான புதனின் வீட்டில் உலவுவதாலும், உச்ச ஆரோஹணத்தில் இருப்பதாலும் சுப பலன்களே கூடும். 19-12-2009 வரையிலும் குரு பலம் இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். அதன்பிறகு குரு 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 2011-ல் குரு மீனத்தில் உலவும்போது சுப பலன்கள் கூடும். 5-ல் உள்ள சனி அதிர்ஷ்ட வாய்ப்புக்களை உண்டுபண்ணுவார். சனி புதனது வீட்டில் இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபார நுணுக்கம் தெரியவரும். புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மந்திர சித்தி ஏற்படும். மனக்குழப்பம் விலகும்.

ஆரோக்கியம், குடும்பம்: வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சீர்பெறும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். மாமன் வழி உறவினரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரால் நலம் கூடப் பெறலாம். மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: 19-12-2009 வரையிலும் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். அதன் பிறகு கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புத் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். 2011-ல் குரு மீன ராசியில் சஞ்சரிக்கும்போது பொருளாதார நிலையில் விசேடமான அபிவிருத்தியைக் காணலாம். புதிய இனங்களில் முதலீடு செய்யவும், சேமிப்பு கூடவும் வாய்ப்பு உண்டாகும்.

நிலபுலங்கள்: சொத்துக்களால் ஆதாயம் கிடைத்து வரும். புதிய சொத்துக்களின் சேர்க்கையையும் பெறுவீர்கள்.

தொழில்: செய்தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காண இயலாது. இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தொழில் ரீதியான பிரச்னைகளும் உண்டாகும். சனிப் பிரீதி செய்வது நல்லது. தொழிலாளர்கள், விவசாயிகள், துப்புறவுப் பணியாளர்கள், சுரங்கப்பணியாளர்கள், ஆலைப் பணியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். புதிய தொழில்களில் பிரவேசிக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் அனுகூலமான போக்குத் தென்படும்.

மாணவர்களுக்கு: திறமைக்குரிய வளர்ச்சியைக் காணலாம். தொழில் நுட்ப கல்வியில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

மாதர்களுக்கு: உற்சாகம் கூடும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட காலம்: 9-9-2009 முதல் 19-12-2009 வரை. 2-5-2010 முதல் 2011 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.

திசை: வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.

தெய்வம்: மகாலட்சுமி.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதியாக துர்க்கையையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.


===============================
மிதுனம்: அரசு உதவி

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

பொது: உங்கள் ராசிக்கு 3-ல் உலவிக் கொண்டிருந்த சனி 4-ஆமிடம் மாறியிருக்கிறார். அர்த்தாஷ்டம சனியின் காலமிது. எதையும் சுலபமாக நிறைவேற்றி விட இயலாதவாறு தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். அதிகம் பாடுபட வேண்டிவரும். இங்குமங்கும் அலைந்து திரிய வேண்டிவரும். நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் சூழும். முக்கியமானவர்களை விட்டுப் பிரிய நேரலாம். மறதியால் அல்லல்பட வேண்டிவரும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலமிராது. 19-12-2009 முதல் குரு 9-ஆமிடம் மாறுவதால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். பிரச்னைகள் குறையும். சனி உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டோனாகி, 4-ல் இருப்பதால் சுக, சௌக்கியங்கள் கூடும். உற்றார்-உறவினர்களால் அளவோடு நன்மைகள் ஏற்படும்.

ஆரோக்கியம், குடும்பம்: அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படும். மார்பு, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்ப நலம் சீராக இராது. மக்களால் வீண் செலவுகள் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகளின் முன்னேற்றம் பாதிக்கும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

பொருளாதார நிலை: அதிகம் பாடுபட்டே பயன் பெற வேண்டிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். குரு கும்பத்தில் உலவும் நேரத்தில் பண நடமாட்டம் அதிகரிக்கும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் இனங்களில் அபிவிருத்தி காணலாம்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. பராமரிப்புச் செலவுகள் கூடும். வண்டி, வாகனங்களால் அனுகூலமிராது. புதிய சொத்துக்களை வாங்கும்போது சட்ட சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

தொழில்: 10-ஆம் இடத்தை 4-ல் இருந்து சனி பார்ப்பதால் மாமூலான காரியங்கள் சீராகவே நடந்து வரும். புதிய தொழில் துறைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். கல்வி சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். ரியல் எஸ்டேட் இனங்கள் ஓரளவு லாபம் தரும். தரகர்களுக்கும் கமிஷன் ஏஜென்டுகளுக்கும் அளவோடு அனுகூலம் உண்டாகும். 2011-ல் தொழில் ரீதியாக முன்னேற்றம் காணலாம். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இட
மாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.

மாணவர்களுக்கு: பள்ளிகளில் படிப்பவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு 19-12-2009 முதல் விசேடமான வளர்ச்சி தெரியவரும். மேல் படிப்புக்காகச் சிலர் வெளிநாடு செல்லவும் வாய்ப்புக் கூடிவரும்.

மாதர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சொந்த பந்தங்களால்
அதிகம் அனுகூலமிராது.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் குரு பலம் கூடுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடப் பெறலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: மகாவிஷ்ணு.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வழிபடவும். ஹனுமான் சாலீசா படிப்பது நல்லது. பெருமாள் கோயிலில் இருக்கும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.

============================================
கடகம் பொருளாதார வளர்ச்சி

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)


பொது: இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 2-ஆமிடத்தில் உலவி வந்த சனி 3-ஆமிடத்திற்கு மாறியிருப்பது விசேடமாகும். ஏழரைச் சனியின் பிடியிலிருந்து முழுவதுமாக விடுபடுகிறீர்கள். இனி வசந்த காலம்தான். நினைப்பது நடக்கும். தடைகளும் குறுக்கீடுகளும் விலகும். பிரச்னைகள் எளிதில் தீரும். முயற்சி பலிதமாகும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு, விநோதங்களிலும் வெற்றி பெறுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் நிகழும். மனத்திற்கு மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். மனோபலம் கூடும். உடல் சக்தி அதிகரிக்கும். காம உணர்வு கூடும். சனி 3-ல் இருப்பதால் உழைப்பின் பயனை முழுமையாகப் பெறுவீர்கள். சமுதாய நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராக இருந்து வரும். குடும்பத்தில் இதுவரையிலும் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். குதூகலம் நிறைந்திருக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். எதிர்ப்புக்கள் விலகும். வேலையாட்கள் நல்லவிதமாக நடந்து கொள்வார்கள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

பொருளாதார நிலை: பண வரவு கூடும் நேரமிது. வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். திறமை வீண்போகாது. கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். சேமிப்பு அதிகரிக்கும்.

நிலபுலங்கள்: சொத்துக்களால் அதிகம் ஆதாயத்தைப் பெற இயலாது. பழைய சொத்துக்களை விற்க நேரலாம். வண்டி வாகனங்களில் செல்லும்போது விழிப்புத் தேவை.

தொழில்: செய்தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தொழிலாளர்கள், விவசாயிகள், சுரங்கப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். ரேடியோ, வீடியோ, டி.வி, பத்திரிகை, தொலைபேசி, கைபேசி மற்றும் தகவல் துறைகளைச் சேர்ந்த அனைவருக்குமே இந்தச் சனிப்பெயர்ச்சிக்காலம் மிகவும்
விசேடமானதாக அமையும்.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். போட்டித் தேர்வுகளிலும், விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். விரும்பிய பாடம் கிடைக்கும். தொழில் கல்வி பயில்பவர்களுக்கும் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

மாதர்களுக்கு: சோதனைகள் விலகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மன உற்சாகம் பெருகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். வேலைக்குச் செல்லும் மாதர்களுக்குப் பதவிச் சிறப்பு உண்டாகும். பணவரவு திருப்தி தரும்.

அதிர்ஷ்ட காலம்: 2011-ஆம் ஆண்டில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 8, 9.

திசை: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, மேற்கு.

தெய்வம்: பராசக்தி.

பரிகாரம்: 19-12-2009-ல் குரு 8-ஆமிடத்தில் உலவத் தொடங்குவதால் குருப் பிரீதி செய்யவும். குருவுக்கு அதிதேவதையான தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யவும். விநாயகரை வழிபடவும்

================================
சிம்மம் பயணத்தால் அனுகூலம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)


பொது: உங்கள் ராசியிலேயே ஜன்மச் சனியாக உலவிக் கொண்டிருந்தவர் 2-ஆமிடத்திற்கு மாறுகிறார். ஏழரைச் சனியின் இறுதிக் காலமிது. பாதச் சனியின் காலமாகும். சனியானவர் கோசாரப்படி 2-ல் உலவுவது சிறப்பாகாது என்றாலும் விட்டு விலகும்போது நலம்புரிவார் என்பது அனுபவ மொழியாகும். உங்கள் ஜன்ம ராசிக்கு 6, 7-ஆம் இடங்களுக்குரிய சனி 2-ல் உலவுவதால் பேச்சிலும் செயலிலும் அவசரப்படாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பேச்சால் சங்கடம் உண்டாகும் என்பதால் யோசித்துப் பேசுவது அவசியமாகும். பழைய நண்பர்களது தொடர்பு பயன்படும். கடுமையாக உழைத்தே பயன்பெற வேண்டிவரும் என்பதால் உழைப்புக்குப் பின்வாங்கலாகாது. அக்கம்பக்கத்தாரால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். சனிப் பிரீதியைத் தொடர்ந்து செய்துவருவது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: சனி 2-ஆமிடத்தில் உலவுவதால் கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். கெட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி காண்பது கடினம். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வாழ்க்கைத்துணைவருக்குக் கண்டம் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் செலவுகள் ஏற்படும். மக்கள் நலம் சீராகவே இருந்து வரும். மக்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மக்களின் நடத்தையில் கவனம் தேவை.

பொருளாதார நிலை: 19-12-2009 முதல் குரு 7-ஆமிடம் மாறி, வலுப்பெறுவதால் பண வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 2010 முன்பகுதியில் கடன் ஓரளவு குறையும். சனி 2-ல் இருப்பதால் கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். கைப்
பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. 2011-ல் கடன் சுமை கூடும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வீண் ஆடம்பரம் வேண்டாம்.

நிலபுலங்கள்: நிலம், மனை, வீடு போன்ற சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். சனி 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்கள் தாமதமாகி, பின்னர் நிறைவேறும்.

தொழில்: செய்தொழிலில் அதிகம் அக்கறை செலுத்தினால் அபிவிருத்தி காணலாம். 19-12-2009 முதல் குரு பலம் கூடுவதால் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கடுமையாக உழைப்பவர்களுக்கு வருவாய் கூடும். கூட்டுத் தொழிலில் ஓரளவு வளர்ச்சி காணலாம். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு: படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் முன்னேற வாய்ப்பு உண்டாகும். விளையாட்டு விநோதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதர்களுக்கு: சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். 2010 முன்பகுதி விசேடமானதாக அமையும். முக்கியமான எண்ணங்களும் ஈடேறும்.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடப் பெறலாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

திசை: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.

தெய்வம்: ருத்திரன், முருகன்.

பரிகாரம்: சனி, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது அவசியமாகும். ஆஞ்சநேயரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

===================================
கன்னி் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள்

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)


பொது: இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 12-ல் உலவி வந்த சனி ஜன்ம ராசிக்கு இடம் மாறியிருக்கிறார். ஏழரைச் சனியின் மத்திய காலமிது. சனியும், உங்கள் ராசிநாதன் புதனும் ஒருவருக்கொருவர் நண்பர் என்பதாலும், 5-ஆம் வீட்டுக்கு அதிபதியான சனி ஜன்ம ராசியில் உலவும் நிலை அமைவதாலும் எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட
வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைத்து வரும்.
பொறுப்புக்கள் கூடவே செய்யும். 6-ஆம் வீட்டோன் சனி ஜன்ம ராசியில் உலவுவதால் எதிரிகள் இருப்பார்கள். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கெட்டவர்களின் தொடர்பு கூடாது.

ஆரோக்கியம், குடும்பம்: தலை சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும்.
வாழ்க்கைத்துணைவரால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: 19-12-2009 வரை குரு பலம் இருப்பதால் பண வரவு கூடும். எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். அதன்பிறகு பண நடமாட்டம் சீராக இராது. தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட நேரலாம். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவது அவசிய
மாகும். பொருள் வரவு குறைந்து, செலவுகள் கூடும். சிக்கன நடவடிக்கை தேவை. 2-5-2010 முதல் குரு மீனத்தில் உலவும்போது பண நடமாட்டம் அதிகரிக்கும்.

நிலபுலங்கள்: 2011-ல் நிலபுலங்களால் ஆதாயம் கூடப் பெறலாம். புதிய சொத்துக்களும் சேரும்.

தொழில்: செய்தொழிலில் அபிவிருத்தி காண அதிகம் பாடுபட வேண்டிவரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் தடைப்படும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மதபோதகர்கள் ஆகியோருக்கெல்லாம் 2011-ல் அனுகூலமான போக்குத் தென்படும். வியாபாரிகளுக்கு அவ்வப்போது வளர்ச்சி தெரியவரும். என்றாலும் விசேடமான வளர்ச்சிக்கு இடமிராது. கலைஞர்களுக்கு ஓரளவு நலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு: படிப்பில் முழுக் கவனம் செலுத்தினால்தான் முன்னேற முடியும். சோர்வுக்கும் சோம்பலுக்கும்
இடம் தரலாகாது. காலத்தைத் தள்ளிப்போடாமல் அன்றைய பாடங்களை அன்றைக்கே படிப்பது நல்லது. உடல் நலனிலும் தகுந்த பாதுகாப்புத் தேவை.

மாதர்களுக்கு: 2011-ஆம் ஆண்டு சிறப்பாக அமையும். சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட காலம்: 9-9-2009 முதல் 19-12-2009 வரை. 2-5-2010 முதல் 2011 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6. எண் 8-ம் ஓரளவு அதிர்ஷ்டம் தரும்.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: மகா விஷ்ணு.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது அவசியமாகும். சிவாலயம் சென்று அங்கே தனிச்சந்நதியில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்யவும். ஆஞ்சநேயரை வழிபடவும். ஹனுமன் சாலீசா சொல்வது சிறப்பாகும்.

==========================================
துலாம் பொது நலப்பணிகளில் ஈடுபாடு

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)


பொது: உங்கள் ராசிக்கு 4, 5-ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி 12-ஆமிடம் வந்திருக்கிறார். இது விசேடமான மாற்றமாகாது. ஏழரைச் சனியின் ஆரம்ப காலமாகும். ஜனன கால ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை. பொதுவில் விரயச் சனியால் வீண் விரயங்கள், இழப்புக்கள் ஆகியவை ஏற்படும். விரும்பத் தகாத இடமாற்றம், நிலை மாற்றம் ஆகியவை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மதிப்பும் அந்தஸ்தும் குறையும். மக்களைப் பிரிந்து வாழ நேரலாம். நண்பர்கள், பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும். அக்கம்பக்கத்தாரால் அனுகூலமிராது. மனத்தில் ஏதேனும் பயம் குடிகொள்ளும். மறதியால் அவதிப்பட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சனி உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதாலும், ராசிநாதன் சுக்கிரனும் சனியும் ஒருவருக்கொருவர் நண்பர்களாவார்கள் என்பதாலும் கெடுபலன்கள் பெருமளவு குறைந்து நற்பலன்களும் உண்டாகும். சுபச் செலவுகள் கூடும்.

ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மருத்துவச் செலவுகள் கூடும். கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராக இராது. மக்களின் முன்னேற்றம் தடைப்படும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. சண்டை, சச்சரவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரின் நலம் பாதிக்கும்.

பொருளாதாரநிலை: 19-12-2009 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ஆமிடம் மாறுவதால் பொருளாதார நிலையில்
வளர்ச்சி காணலாம். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். பணம் கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். வர வேண்டிய பாக்கிப்பணம் வசூலாகும். 2010 முன்பகுதி பொருளாதார ரீதியில் சிறப்பானதாக அமையும். என்றாலும் சனி 12-ல் இருப்பதை மறந்துவிடலாகாது. வீண் விரயங்கள், இழப்புக்கள் ஆகியவை ஏற்படுமாதலால் கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும். கறுப்பு நிறமுள்ளவராலும், பிற மொழி, மதக்காரர்களாலும் ஏமாற்றப்பட நேரலாம்; விழிப்புத் தேவை. யாரையும் நம்பி அதிகப் பணத்தைத் தரவேண்டாம்.

நிலபுலங்கள்: 4-ஆம் வீட்டுக்கு அதிபதியான சனி 12-ல் இருப்பதால் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சிலர் சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகவும் நேரலாம். பராமரிப்புச் செலவுகள் கூடும். வண்டி, வாகனங்கள், நாற்கால் பிராணிகளால் அனுகூலமிராது.

தொழில்: செய்தொழிலில் வளர்ச்சி காண்பது அரிதாகும். தொழிலாளர்களுக்குப் பிரச்னைகள் சூழும். சுரங்கப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள், ஆலைப்பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் உழைப்புக் கூடுமே தவிர, அதற்கான பயன் கிடைக்காது. வேலை இழப்பு, பதவியில் சறுக்கல் ஆகியவையும் ஏற்படலாம். செய்வன திருந்த செய்வது நல்லது. சிறு தவறு செய்தாலும் பெரும்தண்டனை பெற வேண்டியிருக்கும். உங்கள் வேலைகளை மற்றையோரிடம் தர வேண்டாம். பொறாமைக்காரர்களால் பிரச்னை உண்டாகும். தொழில் புரியுமிடத்தில் யாரிடத்திலும்
பக்குவமாகப் பேசிப் பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு: முன்னேற்றம் தடைப்படும். படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

மாதர்களுக்கு: சங்கடங்கள் கூடும். எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். வீண் வம்பு வேண்டாம்.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் 1-5-2010 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: பராசக்தி, மகாலட்சுமி.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடவும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.

=======================================
விருச்சிகம் தொழில் முன்னேற்றம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

பொது: உங்கள் ராசிக்கு 3, 4-ஆம் இடங்களுக்கு அதிபதியான சனி 11-ஆமிடத்தில் உலவுவதால் வெற்றி
வாய்ப்புக்கள் கூடும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். முயற்சி வீண்போகாது. பெரியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். சுகம் கூடும். சனி புதனின் ராசியில் காமத் திரிகோணமாகிய 11-ல் இருப்பதால் காம உணர்வு கூடும். ஒழுக்கத்துடன் இருப்பது அவசியமாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் உண்டாகும். கறுப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். தடைகளும் குறுக்கீடுகளும் விலகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனைப் பெறுவீர்கள். புதிய துறைகளில் ஈடுபடவும் அதனால் பயன் பெறவும் வாய்ப்பு உண்டாகும்.
ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராக இருந்து வரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். மக்களாலும், உடன் பிறந்தவர்களாலும் நலம் கூடும். வேலையாட்கள் நல்லவிதமாக நடந்து கொள்வார்கள். தாய் நலனில் கவனம் தேவை.

பொருளாதார நிலை: 2011 முதல் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சி காணலாம். கொடுக்கல்- வாங்கல் இனங்களில் அபிவிருத்தி காணலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். வரவேண்டிய பாக்கிப் பணம் வசூலாகும். கடன் தொல்லை நிச்சயம் குறையும். சேமிப்புக்கும் இடமுண்டு. புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும்.

நிலபுலங்கள்: சனி வலுத்திருப்பதாலும், 4-ஆம் வீட்டோனாகி 11-ல் இருப்பதாலும் நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். பழைய சொத்துக்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கூடிவரும்.

தொழில்: சனி பலம் இருப்பதால் செய்து வரும் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தொழில் அதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். சுரங்கப் பணியாளர்கள், தோட்டப்பணியாளர்கள், ஆலைப்பணியாளர்கள்
ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கச்சாப் பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், கறுப்பு நிறப் பொருட்கள், பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள், தோல் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். ரியல் எஸ்டேட் இனங்களால் ஆதாயம் கூடப் பெறலாம். 2011-ல் உத்தியோகஸ்தர்களின் நிலை உயரும். பொருள் நடமாட்டமுள்ள இனங்களில் வளர்ச்சி காணலாம். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
அரசியல்வாதிகள், பொது நலப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். கிராம, நகர நிர்வாகப் பொறுப்பு சிலருக்குக் கிடைக்கும். திறமைக்குரிய பயன் கிடைக்கத் தவறாது.

மாணவர்களுக்கு: 4-ஆம் வீட்டோன் சனி புதன் வீட்டில் வலுத்திருப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மதிப்பெண்கள் உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பரிசுகளும் பதக்கங்களும் கிடைக்கும். ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களைப் பாராட்டுவார்கள்.

மாதர்களுக்கு: மன மகிழ்ச்சி கூடும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

அதிர்ஷ்ட காலம்: 2-5-2010 முதல் 2011 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 8, 9.

திசை: கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, தெற்கு.

தெய்வம்: முருகன், தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்: ராகுவுக்குப் பிரீதியாக துர்க்கையையும், கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரையும் வழிபடுவது நல்லது. 2-5-2010 வரை குருப் பிரீதி செய்வதும் அவசியமாகும்.

====================================
தனுசு: சொத்துக்கள் சேருதல்

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

பொது: உங்கள் ராசிக்கு 9-ஆமிடத்தில் உலவிக் கொண்டிருந்த சனி 10-ஆமிடத்திற்கு வந்திருக்கிறார். இது விசேடமான மாற்றமாகும். 2, 3-ஆம் இடங்களுக்குரிய சனி 10-ல் உலவுவதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். உடன் பிறந்தவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி விடுவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும்.வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். பொருள் திரட்டுவதில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பத்தைக் காணலாம். கடன் தொல்லைகள் குறையத் தொடங்கும். உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும்.
ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் சீராகவே இருந்து வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மக்கள் நலனில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்து வரும்.

பொருளாதார நிலை: பணவரவு கூடும். 19-12-2009 வரையிலும் குரு 2-ல் இருப்பது விசேடமாகும். குரு 10-ல் உள்ள சனியைப் பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் குரு மகரத்தில் இருக்கும் காலம் மிகச் சிறப்பானதாகும். அதன்பிறகு 3-ஆமிடம் மாறுவதாலும், சனியும் குருவும் 6/8-ஆக இருப்பதாலும், பொருளாதாரப் பிரச்னை ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். விழிப்புடன் இருப்பது நல்லது.

நிலபுலங்கள்: 19-12-2009 வரையிலும் நிலபுலங்களால் ஆதாயம் கிடைத்து வரும். அதன் பிறகு சொத்துக்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. 2011-ல் குரு மீனத்தில் உலவும் நேரத்தில் புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புண்டாகும்.

தொழில்: தொழிலாளர்கள், விவசாயிகள், சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். ரியல் எஸ்டேட் இனங்கள் லாபம் தரும். தரகர்களுக்கும் கமிஷன் ஏஜண்டுகளுக்கும் வருவாய் கூடும். கறுப்பு நிறப்பொருட்கள், கச்சாப் பொருட்கள், இரும்பு சம்பந்தப்பட்ட இனங்கள், நிலக்கரி, விளை பொருட்கள் ஆகியவை லாபம் தரும். எண்ணெய் வகையறாக்
களால் ஆதாயம் கூடும்.

மாணவர்களுக்கு: பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் படிப்பில் முழு அக்கறை செலுத்துவது அவசியமாகும். தொழில் நுட்பக் கல்வி பயிலுவோருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

மாதர்களுக்கு: அளவோடு நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட காலம்: 9-9-2009 முதல் 19-12-2009 வரை குரு பலம் இருப்பதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடி. வரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாறாமல் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. சனி உழைப்பின் மூலம் பயன் பெற உதவுவார்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9. எண் 8-ம் கூட ஓரளவு அதிர்ஷ்டம் தரும்.

திசை: கிழக்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு.

தெய்வம்: சிவன், முருகன்.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்வது அவசியமாகும். 19-12-2009 முதல் குரு பிரீதி செய்யவும். விநாயகரையும், துர்க்கையையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.

=================================
மகரம்: கலைத்துறையினருக்கு வெற்றி

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

பொது: இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 8-ஆமிடத்தில் உலவிக் கொண்டிருந்த சனி 9-ஆமிடம் மாறுகிறார். இது விசேடமானதாகாது. என்றாலும் ராசிநாதன் சனி 9-ல் உலவுவதால் இதுவரையிலும் அஷ்டமச் சனியால்
விளைந்துவந்த சங்கடங்கள் விலகும். தான, தருமப் பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும்.
தொலைதூரத் தொடர்பு பயன்படும். அயல்நாட்டுப் பயணத் திட்டம் நிறைவேறும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும்.
ஆரோக்கியம், குடும்பம்: சனி 9-ல் இருப்பதால் நோய் நொடி உபாதைகள் குறையும். 19-12-2009 முதல் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நலம் சீர்பெறும். உடன்
பிறந்தவர்கள் உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: 19-12-2009 முதல் பணவரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள். கடன் உபத்திரவம் குறையும். பாக்கிப் பணம் வசூலாகும். 2-5-2010 முதல் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட்டு விலகும். 2010 முன்பகுதியில் புதிய சொத்துக்களை வாங்க வாய்ப்புக் கூடிவரும். பழைய சொத்துக்களைப் பராமரித்துக் கொள்ளவும் முடியும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும்.

தொழில்: தகவல் தொடர்பு இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கல்வித்துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தரகர்களுக்கும் ஏஜண்டுகளுக்கும் வருவாய் கூடும். கலைஞர்களது நிலை உயரும். 2010 முன்பகுதியில் உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். ஆசிரியர்களது நிலை உயரும். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு கூடும். 2011-ல் தொழில் ரீதியாக பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். கல்லூரிகளில் உயர்படிப்புப் படிப்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழில் நுட்பத் துறை சம்பந்தப்பட்ட படிப்பில் முன்னேற்றம் காணலாம்.

மாதர்களுக்கு: உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். ஆடை, அணிமணிகள் சேரும்.

அதிர்ஷ்ட காலம்: 19-12-2009 முதல் 1-5-2009 வரை.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: ஆஞ்சநேயர், ஐயப்பன்.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.


====================================
கும்பம்: வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

பொது: உங்கள் ராசிக்கு 8-ஆமிடம் வருகிறார் சனி. அஷ்டம சனியின் காலம் தொடங்குகிறது. இது கோசாரப்படி விசேடமாகாது என்றாலும் சனி உங்கள் ராசிநாதனாகி, 8-ல் இருப்பதால் துன்பம், துயரம், சோதனை, விரக்தி ஆகியவை ஏற்படுமென்றாலும் ஆயுளுக்குப் பாதகம் உண்டாகாது. வேலைப்பளு கூடும். அங்குமிங்கும் அலைந்து திரியவேண்டிவரும். வீண்வம்பு, வழக்குகளில் சிக்க நேரலாம்; எச்சரிக்கை தேவை. யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. ஏமாற்றம், இழப்பு ஆகியவை ஏற்படும். எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் தடைகளும் குறுக்கீடுகளும் முளைக்கும். மனத்தில் ஏதேனும் பயம் உண்டாகும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபடும்போது விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது சிறப்பாகும். ஜனன கால ஜாதகத்தில் யோக பலனைத் தரக்கூடிய தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் அஷ்டமச் சனியால் விளையக்கூடிய சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியம், குடும்பம்: ராசி நாதன் சனி 8-ல் மறைவதால் உடல் நலம் சீராக இராது. நீண்ட நாள் நோய் நொடிகளால் அவதிப்பட வேண்டிவரும். மறைமுக உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்கும். யாரிடத்திலும் சுமுகமாகப் பழகுவது நல்லது. வேலையாட்களால் தொல்லைகள் கூடும். யாரையும் நம்பி முக்கியப் பொறுப்புக்களையோ, பணத்தையோ ஒப்படைக்க வேண்டாம். உடன் பிறந்தவர்களாலும், தந்தையாலும் மன வருத்தம் உண்டாகும். கூட இருப்பவர்களே உங்களுக்குப் பிரச்னைகளை உண்டுபண்ணுவார்கள்.

பொருளாதார நிலை: 2011-ல் குரு மீனத்தில் உலவும் நிலை அமைவதால் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். அது வரையிலும் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. பொருள் இழப்புக்குக் காரணம் உண்டு. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியமாகும்.

நிலபுலங்கள்: சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும் என்றாலும் கஷ்டப்பட்டு பெற வேண்டிவரும். எதுவும் எளிதில் கிடைக்காது. போராடிப் போராடித்தான் பெற வேண்டிவரும்.

தொழில்: சனி 8-ல் இருப்பதால் செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண அரும்பாடுபட வேண்டிவரும். உங்களுக்குரிய பணிகளை நீங்களே செய்வது நல்லது. பொறுப்புக்களை மற்றையோரிடம் ஒப்படைக்கலாகாது. புதிய தொழில் துவங்க இந்த நேரம் சிறப்பானதாகாது. மாமூலாகச் செய்து வரும் காரியங்களில் கூட அதிகம் கவனம் தேவைப்படும். சிறு தவறு செய்தாலும் பெரும் தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும். 2011-ல் குரு 2-ல் அமர்ந்து 10-ஆமிடத்தைப் பார்க்கும் நிலை அமைவதால் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண வாய்ப்புண்டாகும்.

மாணவர்களுக்கு: படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். விளையாட்டு, விநோதங்களைத் தவிர்ப்பது நல்லது. கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது.

மாதர்களுக்கு: பிரச்னைகள் கூடும் நேரமிது. எதிலும் யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். கைப்பொருளைப் பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். சுப காரியங்கள் தாமதமாகும். 2011 சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்ட காலம்: 2011-ல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: ஆஞ்சநேயர், ஐயப்பன்.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது மிகவும் அவசியமாகும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவும். அன்னதானம், வஸ்திர தானம் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் நலம் உண்டாகும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவவும். ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடவும்.

==========================================
மீனம் சுப காரியங்கள் நிகழுதல்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொது: 6-ஆமிடத்தில் உலவி வந்த சனி 7-ஆமிடத்திற்கு மாறியிருக்கிறார். இது விசேடமான மாற்றமாகாது. 11, 12-ஆம் இடங்களுக்குரிய சனி 7-ல் இருப்பதால் எதிலும் ஒரு மந்த நிலை ஏற்படும். எதிர்ப்புக்கள் கூடும். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். முக்கிய நண்பர்களையோ, பங்குதாரர்களையோ விட்டுப் பிரிய நேரலாம். கெட்டவர்களால் பிரச்னைகள் ஏற்படும். காம உணர்வு கூடும். ஒழுக்கத்துடன் இருப்பது அவசியமாகும். யாரிடத்திலும் விழிப்புடன் பழகுவது நல்லது. வீண் வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். சனிக்கு 7-ஆமிடம் திக் பலம் உள்ள இடம் என்பதாலும், சனி லாப ஸ்தானத்திற்கு அதிபதி என்பதாலும் சில நன்மைகளும் உண்டாகும்.
ஆரோக்கியம், குடும்பம்: உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தலை, கண், முதுகு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சீராக இராது. கணவன் மனைவி உறவு நிலை ஒருநாள் போல் மறுநாளிராது. அக்கம்பக்கத்தாரால் பிரச்னைகள் உண்டாகும். தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும்.

பொருளாதார நிலை: 19-12-2009 வரையிலும் குருபலம் இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். சேமிப்பு கூடும். கடன் தொல்லை குறையும். அதன் பிறகு பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

நிலபுலங்கள்: 2010-ல் சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள்.

தொழில்: குரு பலம் இருப்பதால் 19-12-2009க்குள் தொழில் ரீதியாக முன்னேற்றம் காணலாம். அதன் பிறகு குரு 12-ஆமிடம் மாறுவதால் தொழிலில் விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலைமாற்றமோ ஏற்படும். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. காண்ட்ராக்ட் முறையில் தொழில் புரிபவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள்.

மாணவர்களுக்கு: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கூடிவரும். சனி உங்கள் ஜன்ம ராசியைப் பார்ப்பதால் சோர்வை அகற்றிச் சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது.

மாதர்களுக்கு: பிரச்னைகள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட காலம்: 9-9-2009 முதல் 19-12-2009 வரை; 2011.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9.

திசை: வடகிழக்கு, தெற்கு, வடமேற்கு.

தெய்வம்: செந்திலாண்டவர், தட்சிணாமூர்த்தி, பராசக்தி.

பரிகாரம்: சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி செய்வது நல்லது. 2-5-2010 முதல் குரு பிரீதி செய்வதும் அவசியமாகும்.

Source:?????

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...