"நவராத்திரி" என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் ஐப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம்.
துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை.வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.
இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேத பாராயணம், சூரியநமஸ்காரம் முதலிய வைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாள் களில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப் பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம்படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பானுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.
இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
நவராத்திரி பூஜையில் லஷ்மி பூஜை மிகவும் முக்கியமானது. "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க " என்று பெரியோர் வாழ்த்துவார்கள். அந்த பதினாறு செல்வங்களான சௌந்தர்யம், சௌபாக்கியம், கீர்த்தி, வீரம், வெற்றி, சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, புஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்கியம், மோட்சம் ஆகியவற்றிற்கு அதிபதியானவள் ஸ்ரீ மகாலஷ்மி ஆவாள். ""திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து வருக வருகவென்றே கிளியே. மகிழ்வுற்றிருப்போமடி'' என்று மகாகவி பாரதி பாடினார்.
சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சகதி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, 'ஆற்றங்கரைச் சொற்கிழத்தி ' என்று குறிப்பிடுகிறது.
நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்யவேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப்பூசைக்கு 'ஆயுதபூசை' என்றொரு பெயரும் உண்டு.
மகிஷாசூரன்
முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக்கொண்டிருந்ததால் , இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்திபெற்று, ஒன்பதாம் நாள் மகிஷா சூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷா சூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே இந்தக் கதையின் ஆதாரத் தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தை கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.
வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.
சரஸ்வதி பூஜை சகலகலாவல்லிமாலை குமரகுருபரர் - பொருள் விளக்கத்துடன்
1.
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!
2.
நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!
3.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!
4.
தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
5.
பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!
6.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
7.
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!
8.
சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!
9.
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!
10.
மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!
பொருள்:
1. உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றை
அழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும் கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கே அல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதி இல்லையோ?
2. தாமரை மலரால் ஆன ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற பசுமையான பொற்கொடியாளே! குன்று போன்ற தனங்களையும், ஐந்து வகையாகப் புனையப்பெற்ற கூந்தல் வனத்தைச் சுமந்துள்ள கரும்பனைய சகலகலாவல்லியே! சொற்சுவை பொருட்சுவை தோய்ந்த நால்வகை கவிகளாகிய ஆசு, மதுரம்,சித்திரம், வித்தாரம் ஆகியவற்றைப்பாடும் பணியை எனக்கு அருள் புரிவாய்! சகலகலாவல்லியே!
3. உள்ளம் கனிந்து, தெளிவாகப் பனுவல்களைத் தெளிக்கும் புலவர்களின் கவிமழை
பொழியக்கண்டு களிப்படையும் தோகைமயிலாளே! சகலகலாவல்லியே! நீ அருளிய
செழிப்பான செழுந்தமிழ் அமுதத்தை அருந்தி, உன்னுடைய அருள் நிறைந்த கடலில்
குளிப்பதற்கு என்னால் இயலுமோ?
4. இனிமையான செந்தமிழ்ச் செல்வத்தையும் சமஸ்கிருதக் கடலையும் அடியார்களின்
சிறப்பான நாவினில் வீற்றிருந்து காக்கும் கருணைக்கடலான சகலகலாவல்லியே!
சீர்தூக்கிப்பெறுகின்ற பலநூல் துறைகளிலும் சார்ந்த கல்வியையும், சொற்சுவைநிறைந்த வாக்கையும் எனக்குப் பெருகும்படி அருள்புரிவாயாக!
5. நெடும் தண்டு உடைய தாமரையைக் கொடியாகக் கொண்ட பிரம்மனின் செம்மையான நாவிலும், அவன் மனத்திலும், உன்னுடையவெண்தாமரை மலர் ஆசனத்தைப்போன்று கருதி வீற்றிருக்கும் சகலகலாவல்லியே! நன்மையளிக்கின்ற செம்பஞ்சு போன்ற சிவந்த அழகுமிக்க உன் பொற்பாதங்களாகியதாமரை மலர்கள் என் நெஞ்சமாகிய தடாகத்தில் மலராதது ஏனோ?
6. விண்ணிலும்,மண்ணிலும்,நீரிலும் நெருப்பிலும், காற்றிலும், வேதத்திலும், அன்பர்
கண்ணிலும், கருத்திலும் நிறைந்திருக்கும்சகலகலாவல்லியே!முத்தமிழான பண்ணும்
பரதமும் கல்வியும் இனிமையான கவிதையும் நான் நினைக்கும்போது எளிதில் எய்துமாறு எனக்கு அருள் புரிவாயாக!
7.கலைத்தமிழாகிய சுவையான பால் அமுதத்தை, மனம் உவந்து தொண்டர்கள்
படைக்கின்றனர்; அதனைத் தெளிவுறசெய்யவல்ல வெண்ணிறப் பெண் அன்னம் போன்ற சகலகலாவல்லியே! பாடலையும் அதன் பொருளையும், பொருளால் ஏற்படக்கூடிய பயனையும் என்னிடத்தில் சேருமாறு உன் கடைக்கண் பார்வையை அருள்வாயாக!
8. தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமிக்கு அரிது என்பதால் நீ, எக்காலத்திலும்
அழியாத தன்மையை நல்கும் கல்வியாகிய பெருஞ்செல்வத்தின் பயனான சகலகலாவல்லியே! சிறப்பு மிகு சொல் திறமையும், அவதானம் புரியும் ஆற்றலும், கல்வி போதிக்கத்தக்க புலமையும் எனக்கு அளித்து ஆட்கொள்வாயாக!
9.பூமியைத்தொடக்கூடிய துதிக்கையையுடைய பெண்யானையோடு ராஜ அன்னமும்கூட நாணும் வண்ணம் நடைபயிலுகின்றாய்!தாமரையைபோன்ற திருத்தாள்களையுடைய சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகியமெய்ஞானத்தின் காட்சியாகத் திகழக்கூடிய உன்னை நினைக்கக்கூடிய திறமைசாலி யார்?
10. பிரம்மா முதலான தெய்வங்கள் பலகோடி இருந்தாலும்கூட உன்னைபோன்ற
கண்கண்ட தெய்வம் வேறு உளதோ? சகலகலாவல்லியே! குடைநிழலில் வீற்றிருந்து, நிலவுலகைஆட்சி செய்யும் மன்னர்களும் என்னுடைய பாடல்களைக் கேட்ட உடனே அவர்கள் என்னைப் பணியுமாறு செய்து அருள்வாய்!
பேராதனைப்பல்கலைக்கழகத்தில் குடி கொண்டுள்ள எம்பெருமான் குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நான் கண்ட நவராத்திரி பூஜைகள் :-
கோலம்
சரஸ்வதியாக எழுந்தருளி அம்மன்
கொலுக்கள் நிறைந்த வசந்த மண்டபம்
ஏடு தொடக்கல்
ஏடு தொடக்கல்
கொலுக்கள் நிறைந்த வசந்த மண்டபம்
சமையலில் இளம் சிங்கங்கள்
சமையலில் இளம் சிங்கங்கள்
சமையலில் இளம் சிங்கங்கள்
தோரணம் தயார் படுத்தும் இளைஞர் கூட்டம்
சமையலில் இளம் சிங்கங்கள்
சமையலில் இளம் சிங்கங்கள்
கோவில் முகப்பு
எழுந்தருளி
வசந்த மண்டபம்
வாழைமரம் கடும் இளம் சிங்கம்
அடியார்களுக்கு இராப்போசனம்
No comments:
Post a Comment