என்னப்பா எடுத்த எடுவைக்கு சமயத்துக்கு எதிராக போற மாதிரி இருக்கே என்று யோசிக்காதையுங்க. சில கருத்துக்களை சொல்லலாம் என்று தான் இப்படி ஒருதலைப்பு !!!
நாட்டில் நடந்த சம்பவங்களும், துன்பம் அனுபவிக்கும் மக்களுக்காகவும் தான் இப்படி ஒரு முறை சிந்தித்தேன்.
எனக்கு கொண்டாடங்கள் என்றால் என்ன என்று தெரியாது. நான் கொண்டாட்டங்கள் கொண்டாடி பல ஆண்டுகள் ஆகி விட்டன. இது பலருக்கும் பொருந்தும்.
ஏன் சொல்கிறேன் என்றால் சொந்த வீட்டில் இருந்து கொண்டு இனிதாக கொண்டாடி பல ஆண்டுகள் !!!
இவை இருக்க , நான் தீபாவளி பற்றி எனக்கு இருக்கும் அறிவை பகிர்ந்து போட்டு, அத்தோடு எனக்கு இருக்கும் தீபாவளி சந்தேகங்களையும் உங்களிடமும் கேட்டு விடுகிறேன்.
தீபாவளி உருவான கதை
1- நமக்குள் இருக்கும் இறைவன்; ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது. அதாவது நரகாசுரன் என்ற தீமையை அழித்த நாள். அதனால் அன்று தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.
2- இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
தீபாவளி தினத்தில் நடப்பவை நியாயமா???
1 - புத்தாடை அணிந்த பின்,கோவில் சென்று தரிசனம் செய்து போட்டு வந்து அசைவ பிரியர்கள் மட்டன் அல்லது சிக்கன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிப்பார்கள்.
இது உங்களுக்கே நியாயமா தோழர்களே, நீங்கள் செய்வது பச்சையாவே சமயத்தை கொள்ளுகிறீர்கள். சமயம் சொல்லவில்லை மட்டன் கறி சாப்பிட சொல்லி.!!!
எனக்கு தெரிந்த காலத்தில் இருந்து தீபாவளி தினத்தில் வீட்டில் எண்ணெய் வைத்து தேய்த்து குளித்து போட்டு, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து , மதியம் பங்குக்கு வெட்டின கிடாய் கறியும் Fried Rice இம் ஒரு பிடி பிடித்து போட்டு மாலையில் ஒரு படமும் பார்த்து போட்டு ஒழுங்கையில் கூடி நின்று தோழர்களுடன் ஒரு அரட்டை அடித்தல். இரவு தெரிந்தவர்கள் வருவார்கள், இல்லை நாங்கள் போவோம் யாரும் வீடுகளுக்கு. இதுதான் நான் பார்த்த தீபாவளி. ஆனால் இப்படி எல்லாம் எனி செய்ய முடியுமா, முடியாத என்று எல்லாம் இருக்கு!!
இன்று கொழும்பில் மட்டும் இல்லை இலங்கையில் எங்கே எங்கே தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கே எல்லாம் நான் பார்த்த ஒன்று , இந்த கோவிலுக்கு செல்லுதல். போறதுக்கு யாரும் தடை இல்லை. போனால் அதற்கு பிறகு முறையாக இருங்கள் நண்பர்களே.
கொழும்பில் குறிப்பாக கதிரேசன் கோவில் களை கட்டும். புத்தாடை அணிந்த வாலிபர்கள், , தங்கை மார் , அக்காமார் என்று ஒரு திருமண விழாவில் இருப்பது போன்று மன சஞ்சல படும். என்னமா இந்த figure எல்லாம் எங்கே இருந்தன, நாமும் வெள்ளவத்தை தானே, நம்மட database இல இல்லையே என்று அவதி படும் இளைஞர்களை கூட நான் பார்த்து உள்ளேன். எனது குமுறல் அல்ல ஹாஹா.
Kathiresan Temple
இப்படி எல்லாம், வந்து போட்டு மதியம் அரைவாசி பேர் கொழும்பில் உள்ள பிரபல்ய ஹோட்டல் களில் mutton கறி சாப்பிட்டதும் மீதி பேர் வீட்டில் ஆடு சாப்பிடும் வழமையே. ஏன் இப்படி எல்லாம் செய்து சமயத்தில் கறை படிய செய்கிறீர்கள்.
காலயில் கடவுளை வணக்கி போட்டு மாலையில் செய்யுறது கொடுமை . இது கூடாது. இரண்டில் ஒன்றை செய்யுங்கள். ஒன்றில் கோவில் போய் விட்டு சைவமாய் இருந்து நாளை களியுங்கள், அதுதான் முடியாது என்றால் கோவில் போகாமல் ஆடு சாப்பிடுங்கள்.
ஆனால் வரலாறு சொல்லுகிறது தீபாவளி தினத்தில் மாமிசம் உண்ணாமல் இருக்கும் படி தான், இது எனக்கு எனது சமய ஆசான் சொல்லி தந்தது. நாம் யாருமே கடை பிடிக்க வில்லை. சமய நம்பிக்கை இருந்தால் மொத்தமாகவே சைவ பிரியர்கலாகவே இருக்க வேண்டும்..!!!
2-பட்டாசு வெடித்தல்
ஒருசிலரை மகிழ்விப்பதற்காக பட்டாசு வெடித்து, சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தி, பலரை வேதனைக்குள்ளாக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா?மாலையில் ஒருக்கா குடியிருப்புகள் நிறைந்த வெள்ளவத்தை பகுதிக்கு சென்றால் இந்த பட்டாசு வெடிச்சு வந்த குப்பைகளையும் காணலாம்.இது எல்லாம் நாம் இருக்கும் சூழலில் இப்போ தேவையா? ஒரு புறம் மக்கள் துன்பம் மறுபுறம் அதே இன மக்கள் கொண்டாட்டம் , இதுதான் கொடுமை சார் .
3- மதுபான சாலைகள் மூடுவதில்லை, ஒரு சில மூடி இருக்கும் , அப்படி என்றால் ஹோட்டல் சென்று pub இல் ஒரு பிடி பிடித்து விட்டு வந்து உளறுவார்கள். இது எல்லாம் இப்போ தேவையா??
நான் எனது அபிப்பிராயத்தை சொல்கிறேன்!! கொஞ்சம் யோசியுங்கள் !!.
நான் உபதேசம் செய்ய சமய புலவர்/பேரறிஞர் இல்லை, துன்பங்களை எல்லாம் அனுபவித்த சாதாரண குடிமகன் !!!
முக்கிய செய்தி
இந்த தீபாவளிக்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை என்பதால் அன்றும் அசைவம் சாப்பிட முடியாது???. மறுநாள் (ஞாயிறு) சஷ்டி விரதம் தொடங்குகிறது. முருக பக்தர்கள் ஒருவாரம் விரதம் இருப்பார்கள். மன கஷ்டம் இருக்கும் சில பேருக்கு அசைவம் சாப்பிட, இருந்தாலும் சாப்பிட்டு போடுவார்கள், இது தான் எங்களின் மனம் !!!
இந்த செய்தியை பார்த்து விட்டு ஒரு சிலர் எட்டு நாட்களுக்கு சேர்த்து தீபாவளி தினத்தில் பிடி பிடிப்பார்கள் :)
தீபாவளித் திருவிழாவின் தத்துவம் என்ன?
தீமையை ஒழிப்பது, தீயோரை ஒடுக்குவது, தீமையையும், தீயோரையும் வளர விடுவதன்று; வாழ விடுவதன்று நோக்கம். இந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளவும், போற்றவும் தீபாவளி திருநாளில் நாம் ஒவ்வொருவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்த கால கட்டத்தில் தீபாவளியிலாவது ???என்ன செய்யலாம்???
தீபாவளிக்கு செலவழிக்கும் ஒரு தொகை பணத்தை(புத்தாடை வாங்கி ,பட்டாசு வெடித்து, மது பானம் அருந்தி ) கொண்டு போய் அயலில் உள்ள இடைத் தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு அன்பளியுங்கள்.
அனாதையாக இருக்கிற சிறுவர் சிறுமியர்களுடன் சென்று உரையாடுங்கள். முதியோர் இல்லம் சென்று கை விடப்பட முதியோர்களை பராமரியுங்கள். இறுதியாக தானங்களில் சிறந்த தானம் அன்னதானம், அதை ஒரு குழுமம் அமைத்து செய்யுங்கள். இதை எல்லாம் செய்தால் நரகாசுரன் என்ற அரக்கன் தானாகவே அழிவான். இதை விளங்கி கொள்ளும் அளவில் இந்த உலகில் யாரும் இல்லை வருத்தம் அடைகிறேன்.
சரி இவைதான் முடியாட்டியும் எதுவித கொண்டாட்டங்களும் இன்றி அமைதியாக கொண்டாடினால் அவதியுறும் உறவுகளை மதித்ததாகவும் இருக்கும், ஆறுதல் அளித்ததாகவும் இருக்கும் அவ்வாறே செய்வார்கள் என்று நம்பி எனது புலம்பலை இங்கே நிறுத்துகிறேன்.
இருந்தாலும் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
2 comments:
NICE
The request should be followed by tamils
nice. seems you are following that.
Post a Comment