நம்முடைய வறு வல்களும் ; சிந்தனைகள் , மனதில செய்ய நினைத்தவை , செய்தவை ,நல்லதாக பார்த்து சுட்டவை ,சுடாமல் சொந்தமாய் தயாரிச்ச தலைப்புக்கள் என்று ஒரு மொக்கை போடும் இடம்
2009-10-22
மகா கும்பாபிஷேக தினத்தில் ....
கதிரை மலை சிவன் கோவில்
எங்கள் ஊர் சுன்னாகம், சுன்னாகத்தை பற்றி ரொம்ப சொல்ல வர வில்லை . இரண்டு பிரபல்யம் ஒன்று சந்தை , இரண்டாவது பவர் ஸ்டேஷன்.
இதை விட வழமையான ஒன்று தான் கோவில்கள். எங்கள் வீட்டுக்கு முன்னால் , உள்ளது கதிரை மலை சிவன் கோவில். இந்த கோவில் எங்கள் மூதாதையர்களின் வழியில் வந்த கோவில். எங்களுக்கும் உரிமையான கோவில்.
சுவர்னாம்பிகா தேவி
பொன்னம்பல வானேஸ்வரர் பெருமான்
சமய ஈடுபாடுகள் கடுமையாக வரவும் இந்த ஆலயம் தான் எனக்கு basement. சிறு வயதில் வேறு மாவட்டங்களில் இருந்ததால் திருவிழா என்றால் வரிஞ்சு கட்டி கொண்டு ஊர் வந்து விடுவோம். குறிப்பாக இந்த ஆலயம் வருடத்திற்கு மூன்று தடைவகள் கொடியேற்றம் . ஒன்று சிவன் வாசல், அம்மன் வாசல் மற்றது திருவெம்பாவை. கால போக்கில் இரண்டாக மாறியது. திருவெம்பாவை காலத்தில் சகடையில் தேர் அமைத்து இழுத்து வருதல் வழமை.
இப்படியான ஆலயத்தில் எனக்கு தெரிந்த 3 கும்பாபிஷேகங்கள் நான் கலந்து கொண்டேன். ஒன்று 1984 களில் இரண்டாவ்து, 1998 இல், மற்றையத்டு 2005 இல்.
கடைசி இரண்டிலும் எனது பங்களிப்பு மிக்க அதிகம்.
இதன் அனுபவங்களை எழுதினால் நீண்ட நேரம் எழுத வேண்டி இருப்பாதால், குறிப்பாக கும்பாபிஷேகம் தினத்தில் நடை பெறும் பூசைகள் பற்றிய விளக்கத்தை தந்து விடுகிறேன். இவை யாவும் ஒரு நூலில் இருந்து பெறப்பட்டவை.
மந்திரங்கள் பல உறைந்து நிறைந்து உள்ள இறைவனின் உறைவிடம் அது என்பதால், நமக்கு பிரச்னை தீர நல்வழி காட்டுகிறது. அதோடு, அக்கோயிலில் சரியான உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய யந்திரங்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பதும் ஒரு காரணம்.
மந்திரம் என்பதற்கு, ‘சொல்பவனைக் காப்பது’ என்று பொருள். அந்த மந்திரங்களை ஒருங்கிணையச் செய்து, ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு, குடமுழுக்கு என்று பெயர். வைணவத்தில் சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் சொல்லப்படும் இந்த தெய்வப் பிரதிஷ்டை எப்படி நடத்தப்படுகிறது? இதன் உள்ளர்த்தங்கள் என்ன?
கும்பாபிஷேகத்திற்கான விதிகளை, வாமதேவர் என்கிற வடமொழி நூலாசிரியர், தான் எழுதிய வாமதேவ பத்ததியில், சிவபெருமான் முருகனுக்குக் கூறுவதாக எழுதி இருக்கிறார்.
அதைப்படித்து அறிந்து கொண்டால், குடமுழுக்கு விழாவினை நேரில் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதிகம்.
கும்பாபிஷேக வகைகள்
ஆவர்த்தம்: இயற்கைச் சீற்றங்களால் சிதிலமடைந்துவிட்ட ஆலய மூர்த்தங்களை சரிசெய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, இப்பெயர்.
சர்வேஸ்வரக்குருக்கள்
அநாவர்த்தம்: தவசிகள், ரிஷிகள், முனிவர்களால், மலைப்பகுதிகளிலிருந்து கல் கொண்டுவரப்பட்டு தெய்வச்சிலை செய்து வழிபடுவது.
அந்தரிதம்: பாவிகள், திருடர்கள், உலோபிகளால் சேதப்படுத்தப்பட்ட கோயிலைப் புதிதாக்கி கும்பாபிஷேகத்தை நடத்துவது இந்த வகை.
குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பு, மகாகணபதியைப் பிரார்த்திக்க வேண்டும்.
விக்னேஸ்வர பூஜை: கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க, மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து பூஜை செய்வதே விக்னேஸ்வர பூஜை.
புண்யாக வாசனம்: வருணபகவானை இடம் சுத்தமடைய வேண்டுவதே புண்யாக வாசனம். புண்யாகம் என்றால் புனிதம், வாசனம் என்றால் மங்களகரமான வாக்கியங்கள் என்றும் பொருள்.
பஞ்சகவ்ய பூஜை: அனைத்து தெய்வங்களும் உறைந்திருப்பதாகக் கருதப்படுகிற பசுவிடத்திலிருந்து கிடைக்கப் பெறும் ஐவகைப் பொருட்களாகிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாய்க்கலந்து பஞ்சகவ்யமாக்கி அதை யக்ஞத்தில் கலந்து விடுவர்.
கணபதி ஹோமம்
கணபதி ஹோமம்: பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகாகணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்விதான் மகாகணபதி ஹோமம்.
நவகிரஹ ஹோமம்: கிரகங்கள் நன்மையே செய்யவேண்டி ஒன்பது கிரகங்களுக்குமுரிய ரத்தினம், வஸ்திரம், தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தல்.
மகாசங்கல்பம்: எல்லாவிதமான தெய்வ கார்யங்களும் ஒரு குறிக்கோளோடுதான் செய்யப்படுகிறது. அப்படி, ‘இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். மனதிலுள்ள விருப்பங்கள் நிறைவேறட்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணைபுரியட்டும்’ என்று நல் வாக்கியம் சொல்வதே மகாசங்கல்பம் எனப்படுகிறது.
தனபூஜை: கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காகச் செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த தன பூஜையைப் பார்ப்பதால், வீட்டில் தனம் சேரும்.
கோபூஜை: சகல தெய்வங்களும் உறையும் கோமாதா என்று போற்றப்படுகிற பசுவை அலங்கரித்து இந்த பூஜையைச் செய்வதால், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.
ஆலயக்கதவுகள் திறப்பு: புனரமைக்கப்பட்ட கோயிலின் கதவினை நல்ல முகூர்த்த வேளையில்தான் திறக்க வேண்டும். கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்த பிறகு, மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்கிட, பக்தர்கள் இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்க, கோயில் கதவுகள் திறக்கப்பட வேண்டும். முதலில் கோயிலுக்குள் கன்றுடன் பசுவும், மங்களப் பொருட்களும், தீபங்களை ஏந்திய பெண்களும், அர்ச்சகர்கள், வேதவிற்பன்னர்கள், பக்தர்கள் ஆகியோரும் பிரவேசித்து, பிராகாரத்தில் வலம் வந்து, கருவறையை அடைந்து நமஸ்கரிப்பர்.
வாஸ்து சாந்தி: வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனை எழுப்பி பூஜை செய்து அவருக்கு விருப்பமான பூசணிக்காயை பலியிடுவது முறையாகும்.
ரட்சோக்ண ஹோமம்: ரட்சோ _ அரக்கர்கள். க்ணம்_ஒடுக்குதல். அரக்கர்கள் தீங்கு செய்யாமல் இருக்கும் பொருட்டு கலசங்கள் மேல் ஐந்து வகையான அஸ்திர மந்திரங்களையும் அரிவாள், சுத்தி ஆகியவற்றில் ரட்சோக்ண தேவதைகள், தேங்காயில் _ ருத்ரன் இவர்களை ஆவாகனம் செய்து பூஜித்து ஆலயத்தை வலம் வரச் செய்து, ஹோமம் முடிந்ததும் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வரவேண்டும்.
பிரவேச பலி: ஓரிடத்தில் கோயில் எழுப்பப்பட்டிருக்கும்போது, சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் உள்ள துர்தேவதைகளை பூஜித்து ப்ரீதி செய்த பிறகு எண் திசைக் காவலர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலானவர்களை அவரவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபட்டு, ஆலயத்தைக் காத்திடும்படி வேண்டுவதற்கு பிரவேச பலி என்று பெயராகும்.
ஸ்ரீசூக்த ஹோமம்: மகாலக்ஷ்மியைக் குறித்து செய்யப்படுகின்ற இந்த யக்ஞத்தை, ரிக்வேதத்திலுள்ள ஸ்ரீ சூக்த மந்திரங்களைச் சொல்லி, திருமகளின் கருணை வேண்டி வழிபடல் வேண்டும். இதனால் கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படுமென்பது ஐதிகம்.
சாந்தி ஹோமம்: அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் பாசுபதாஸ்திர மந்திரங்களைக் கூறி, கலசத்திலும் ஆவாகனம் செய்து, அஸ்திர மந்திரங்களால் ஹோமம் செய்து, கலச நீரை அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து, ஆலயக்கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக செய்வது சாந்தி ஹோமம். அடுத்ததாக கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக ஹோமம் செய்வது, மூர்த்தி ஹோமம் எனப்படுகிறது.
சம்ஹிதா ஹோமம்: சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் இந்த யக்ஞம், இது பரிகார யக்ஞம் ஆகிறது.
மிருத்சங்கிரணம்: யாக சாலையில் முளைப் பயிர் இடுவதற்காக பூமிதேவியை பூஜித்து, அனுமதி பெற்று மண் எடுத்து முளை பயிரிடுதல் என்கிற அங்குரார்ப்பணம் நடத்துவது முறை.
மிருத் என்றால் மண்; சங்கிரணம் _ எடுத்தல்; அங்குரம் என்பது முளைக்கின்ற விதை; அர்ப்பணம் என்றால் போடுவது என்று பொருள். யாக பூஜைகள் நல்ல பலன்கள் அளிக்கும் பொருட்டு, முளைப்பயிரை இட்டு, இந்த யாக சாலையில் பூஜைகள் நன்கு செய்யப்பட்டுள்ளதா என்று பயிர்கள் வளர்வதைக் கொண்டு அறிந்து கொள்ளப்படுகிறது.
ஆசார்ய ரட்சாபந்தனம்: கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுகின்ற சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள் இந்த சுபவைபவம் நிறைவு பெறும் வரை வேறு செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், இடையூறுகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ளவும் காப்பினைக் கட்டிக் கொள்ளுதல் அவசியம். இதை மந்திர வேலி என்றும் சொல்லலாம்.
பூதசுத்தி: இறைவனுக்கு பூஜை செய்யும் முன்பு மந்திரார்த்தமாக இந்தப் பூத உடலைச் சுத்தம் செய்தல் வேண்டும். இதைச் சுத்தமாக்குவதற்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடுதலையே பூதசுத்தி என்பர்.
ஸ்தான சுத்திக்கு இடத் தூய்மை என்றும்; பூஜா திரவிய சுத்திக்கு பொருட் தூய்மை என்றும்; மந்திர சுத்தி என்பதற்கு எச்சில் வருகின்ற வாய் சொல்லும் மந்திரத்தை எண்ணத்தினால் தூய்மைப் படுத்துதல் என்றும்; கலசத் தூய்மை என்றும் பலவித சுத்திகள் உண்டு.
கும்ப அலங்காரம்: மூலஸ்தான விக்ரஹத்தில் உறைந்துள்ள இறை சக்தியை வேள்விச் சாலையில் வைத்து யாகம் மற்றும் பூஜைகள் நிகழ்த்த வேண்டும். அதற்கு, கலசங்கள் மந்திரார்த்தமாக வர்ணனை செய்யப்பட்டபிறகு இறைவனுடைய உருவம் போல பாவனை செய்யப்படுகிறது. அதாவது கலசத்தின்மேல் சுற்றப்படும் துணி சதை ஆகவும், வாசனை நீர் உதிரமாகவும், தர்ப்பையால் செய்யப்படும் கூர்ச்சம் எலும்பாகவும், நூல் சுற்றியிருத்தல் நரம்பாகவும் சொல்லப்படும். மந்திரம் உயிர்போலவும் பாவிக்கப்பட்டு வாசனை மலர்கள், சந்தனம், குங்குமத்தால் அழகூட்டப்படுவதற்கு கும்ப அலங்காரம் என்று பெயர். அடுத்ததாக கலாகர்ஷணம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பதினாறு கலைகள் இறைவனுடைய திருமேனியில் இருப்பதால், வேள்விச் சாலையில் எழுந்தருளச் செய்யும்போது, மீண்டும் அந்தக் கலைகள் வடிவைக் கலசத்தில் வர்ணிப்பதற்குக் கலா ஆகர்ஷணம் செய்யப்படுகிறது.
மூலஸ்தானத்திலிருந்து இறைவனின் திருவடிவம் வேள்விச் சாலைக்குச் சென்று இடையூறுகள் இல்லாமல் நல்லவிதமாகத் திரும்ப, தெய்வங்களையும், நவகிரஹ தேவதைகளையும் எண்ணி யாத்திரை தானம் செய்து, யாகசாலைக்குள் கலசங்களைக் கொண்டு சென்று ஆகம விதியின்படி வைத்து தீப ஆராதனை செய்வர். இந்நிகழ்விற்கு யாகசாலைப் பிரவேசம் என்று பெயர்.
யாக பூஜைகள்: ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட யாகசாலைப் பகுதிகளான மேடைகள், தூண்கள், கயிற்றுக் கட்டுகள், மேற்கட்டிகள், அலங்காரங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு உபதேவதையின் வடிவினைக் குறிக்கிறது. அதோடு அஷ்டமங்களங்கள் எனப்படுகிற கொடி, கண்ணாடி, சக்தி, கதை, தண்டம், ஸ்வஸ்திகம், ஸ்ரீவத்ஸம், தீபம் ஆகியவற்றைப் பலகையில் வரைந்து வைப்பது வழக்கம்.
யாக சாலையில் அமைக்கப்பட்ட தெய்வ மூர்த்தங்களுக்கேற்ப, தோரண பூஜை, பஞ்ச ஆசனபூஜை, பஞ்சம ஆவர்ண பூஜை ஆகியன நடத்தப்பட்டு, ஹோம குண்டத்தில் அதற்கான மூல மந்திரம் கூறி, ஹோமப் பொருட்களை இட்டு யாகம் நடத்தி பூரண ஆகுதி செய்து வாழ்த்துரைகள் சொல்லுவர். இந்த யாக வேள்விகள், திட்டமிட்டபடி ஆறு காலம், நான்கு, இரண்டு காலங்கள் என்று நடத்தலாம். யாகம் நடத்துகின்ற உபகரணங்களுக்கு, ஸ்ருக் ஸ்ருவம் என்று பெயர். யாகம் நடத்தும் காலங்களில், வேதபாராயணம், தேவாரம் திருமுறை தெய்வத் திருக்கதைகள் நடத்தப்படுவது மரபு.
ஆசார்ய விசேஷ சந்தி: காலங்கள் இரண்டும் (இரவு பகல்) ஒன்று சேர்வதையே சந்தி என்கிறோம். இந்த வேளைகளில் காப்பிட்டுக் கொண்டவர்கள் அக்காலத்திற்குரிய தர்ப்பணங்கள், ஜபங்கள் செய்து தேவர்கள், பித்ருக்கள், ரிஷிகளின் அருளாசியைப் பெறுவர். இந்த நிகழ்ச்சிக்கு விசேஷ சந்தி என்று பெயர்.
தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம்: கருவறையில் எழுந்தருளும் தெய்வங்களை விக்ரகங்களாக அமைக்கிறோம். அதன் உயிர் என்பது தாமிரத் தகட்டில் எழுதப்படுகிற மூலமந்திர வாசகங்களும், அதற்கு உரியதான வரைவுக் கோடுகளும்தான். இந்த யந்திர வடிவை விதிப்படி எழுதி, உரிய மரியாதைகள் செய்து, ஈர்ப்புத் தன்மையுடைய செப்புத் தகட்டில் பதித்து, அதனை சுவாமியின் ஆதார பீடத்தில் பதித்து, பஞ்சலோகம் காசுகளைப் போட்டு, எண்வகை மருந்துக் கலவையான அஷ்டபந்தனம் என்ற மருந்தைத் தயார்படுத்தி பீடத்தைச் சுற்றிலும் அதைக் காப்பாக இடுதல்.
யந்திரத்தை வைத்து மருந்து சாற்றியபிறகு அஷ்டா தசக்ரியை எனப்படுகிற பதினெட்டு வகைக் கிரியைகளுக்கு தெய்வ உருக்கள் உட்படுத்தப்படுவதுண்டு. முக்கியமாக கண்திறப்பு என்கிற நேத்ரோன்மீலனம் நடத்தப்படும்போது, மங்களப் பொருட்களை ஏந்திய பெண்களை ஆலய வலம்வரச் செய்து, தெய்வ பிம்பங்களைச் செய்த சிற்பி கண்களைத் திறக்கும் வைபவத்தை நடத்துவார். அடுத்ததாக நீர், மண், வாசனை மலர், மரப் பட்டைகள், வாசனைத் திரவியங்களைக் கலந்து பூஜை செய்து ஆலயம் முழுவதும் தெளித்து சுத்தப்படுத்துவர். இப்படிச் செய்வதற்கு பிம்பசுத்தி என்று பெயர். இந்த நேரத்தில் சிலைகளுக்கு கைப்பகுதியில் மஞ்சள் கயிற்றைச் சாற்றுவர்.
உயிர்ப்பித்தல்: யாகங்கள் நடத்தப்பட்ட இடத்தில், முறைப்படி பூஜிக்கப்பட்ட தெய்வ சக்திகளைப் பட்டுக் கயிறு, தர்ப்பைகளின் வழியாக மூலஸ்தான சிலைக்குக் கொண்டு செல்லுதலை உயிர்தருதல் (நாடி சந்தானம்) என்பர். அதுசமயம் ஒரு கலசத்தையும், நெய் நிரப்பிய ஹோமக்கரண்டியையும் யாகசாலையிலிருந்து மூலமூர்த்தி இருப்பிடம்வரை மூன்று முறை எடுத்துச் சென்று வருவார்கள்.
மகாகும்பாபிஷேகம்: கலச பூஜை செய்து முடிந்ததும், பூரண ஆகுதி(யாக நிறைவு) செய்யப்பட்டு, கலசங்கள் புறப்படுவதற்கான யாத்திரை, தானம் என்ற ப்ரீதி பூஜை செய்தபின், யாக பூஜைகள் செய்த பட்டர்கள், சிவாச்சாரியார்கள் மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்க ஆலயத்தில் வலம் வந்து விமானம் என்று அழைக்கப்படும் கருவறை கோபுரத்தில் ஏறி, முறையான தெய்வ பீஜ மந்திரங்களால் கோபுர கலசத்திற்கு அர்ச்சனை செய்து பூஜை நடத்தியபிறகு கலச நீரை கோபுரக் கலசத்தின் மீது மூல மந்திரங்கள் கூறியபடி அபிஷேகம் செய்வர். பின்னர் கலசத்திற்கு தர்ப்பை, கொடி, வஸ்திரம், மாலை சாற்றித் திலகமிட்டு தேங்காய், பழம், தாம்பூலம், நிவேதனம் செய்து ஆரத்தி செய்வார்கள். புனிதக் கலசநீர் ஊற்றுவதைக் கண்களால் காண்பவர்களுக்கும் பன்னிரண்டு ஆண்டுகள் தலயாத்திரை, ஆலய தரிசனம் செய்த புண்ணியத்தைப் பெறுவதாக ஆகம சாஸ்திரம் தெரிவிக்கிறது.
மகா அபிஷேகம் _ முதல் திருநீராட்டல்: மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டதும், கருவறையிலுள்ள தெய்வச் சிலைக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட உபகலசங்களாகிய வர்த்தனி கலசங்களிலுள்ள புனித நீரை ஊற்றுவர். அதன் பிறகு முதல் திருநீராட்டல் என்னும் மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது.
அதற்குப்பிறகு சுவாமிக்கு 48 நாட்கள் மண்டல பூஜை நடத்துவர். நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகிற ஆலயத்தின் கும்பாபிஷேகம் எங்கு நடந்தாலும் சென்று தரிசித்து பிறவிப் பயனை அடைவோமாக!
மண்டல பூஜை -1
ஓம் நமசிவாய! ஓம் நாராயணாய நம:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment